புதிய மதுக்கடைகள் திறக்க எதிர்ப்பு: போராட்டத்தில் ஈடுபட்ட 100 பேர் கைது


புதிய மதுக்கடைகள் திறக்க எதிர்ப்பு: போராட்டத்தில் ஈடுபட்ட 100 பேர் கைது
x
தினத்தந்தி 17 April 2017 4:30 AM IST (Updated: 17 April 2017 3:22 AM IST)
t-max-icont-min-icon

பெருங்குடியில் புதிதாக மதுக்கடை திறக்க எதிர்ப்பு தெரிவித்து போராட்டத்தில் ஈடுபட்ட 100 பேரை போலீசார் கைது செய்தனர். பெரும்பாக்கத்தில் பொதுமக்கள் ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டனர்.

ஆலந்தூர்,

சுப்ரீம் கோர்ட்டு உத்தரவின் பேரில் தமிழகத்தில் தேசிய மற்றும் மாநில நெடுஞ்சாலைகளில் இருந்த பெரும்பாலான மதுக்கடைகள் அகற்றப்பட்டன. சென்னை புறநகர் பகுதிகளில் அகற்றப்பட்ட மதுக்கடைகளுக்கு பதிலாக குடியிருப்பு பகுதிகளில் புதிதாக மதுக்கடைகளை திறக்கும் பணிகள் நடைபெற்று வருகிறது. இதற்கு எதிர்ப்பு தெரிவித்து பொதுமக்கள் போராட்டத்தில் ஈடுபட்டு வருகின்றனர்.

சென்னையை அடுத்த பெருங்குடி கந்தன்சாவடி கல்லுக்குட்டை பகுதியில் புதிதாக மதுக்கடை அமைக்க கட்டுமான பணி நடைபெற்று வருகிறது. இதை அறிந்த அந்த பகுதி பொதுமக்கள், குடியிருப்பு பகுதியில் மதுக்கடையை திறக்கக்கூடாது என்று கூறி பெண்கள் உள்பட 100-க்கும் மேற்பட்டோர், மதுக்கடை அமைக்க கட்டுமான பணி நடைபெற்று வரும் கடைமுன்பு நேற்று போராட்டத்தில் ஈடுபட்டனர்.

100 பேர் கைது

இதுபற்றி தகவல் அறிந்து வந்த துரைப்பாக்கம் போலீசார், போராட்டத்தில் ஈடுபட்டவர்களுடன் பேச்சுவார்த்தை நடத்தினர். அனைவரையும் கலைந்து போகும்படி கூறினர். ஆனால் மதுக்கடையை திறக்கமாட்டோம் என உறுதி அளிக்கும்வரை போராட்டத்தை கைவிடமாட்டோம் என பொதுமக்கள் தெரிவித்தனர்.

இதையடுத்து போராட்டத்தில் ஈடுபட்ட 100 பேரை போலீசார் கைது செய்தனர். அவர்களை வேனில் ஏற்றிச்சென்று அங்குள்ள திருமண மண்டபத்தில் தங்க வைக்கப்பட்டனர்.

பெரும்பாக்கம்

இதுபோல் பெரும்பாக்கம்-நூக்கம்பாளையம் சாலையில் புதிதாக கட்டப்பட்டு வரும் கட்டிடத்தில் மதுக்கடை திறப்பதற்காக நேற்று முன்தினம் அந்த கடையில் மதுபாட்டில்கள் கொண்டு வந்து இறக்கப்பட்டன. இதை அறிந்த பொதுமக்கள், இங்கு மதுக்கடையை திறக்கக்கூடாது என்று கூறிச்சென்றனர்.

ஆனால் பொதுமக்கள் எதிர்ப்பையும் மீறி நேற்று அந்த மதுக்கடை திறக்க இருப்பதாக வந்த தகவலின் பேரில், அந்த பகுதியை சேர்ந்த பெண்கள் உள்பட 200-க்கும் மேற்பட்டவர்கள், புதிதாக திறக்க இருந்த மதுக்கடை முன் ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டனர்.

சம்பவ இடத்துக்கு வந்த பெரும்பாக்கம் முன்னாள் ஊராட்சி மன்ற தலைவர் பெரும்பாக்கம் ராஜசேகர் மற்றும் முன்னாள் கவுன்சிலர்கள் பொதுமக்களுக்கு ஆதரவாக ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டனர். இங்கு குடியிருப்பு மற்றும் கோவில்கள் உள்ளதால் மதுக்கடையை திறக்கக்கூடாது என்றனர்.

நடவடிக்கை எடுப்பதாக உறுதி

பள்ளிக்கரணை போலீஸ் இன்ஸ்பெக்டர் நடராஜன் மற்றும் போலீசார் ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டவர்களிடம் பேச்சுவார்த்தை நடத்தினர். இதுபற்றி உயர் அதிகாரிகளுக்கு தகவல் தெரிவித்து நடவடிக்கை எடுப்பதாகவும், அதுவரை மதுக்கடை திறக்கப்படாது என்றும் உறுதி அளித்தனர். அதை ஏற்று பொதுமக்கள் ஆர்ப்பாட்டத்தை கைவிட்டனர்.

இதையடுத்து நேற்று திறக்கப்படுவதாக இருந்த மதுக்கடை, பொதுமக்களின் ஆர்ப்பாட்டம் காரணமாக திறக்கப்படவில்லை. 

Next Story