ரெங்கநாதர் கோவில் சித்திரை தேர்த்திருவிழாவையொட்டி முகூர்த்தக்கால் நடப்பட்டது


ரெங்கநாதர் கோவில் சித்திரை தேர்த்திருவிழாவையொட்டி முகூர்த்தக்கால் நடப்பட்டது
x
தினத்தந்தி 17 April 2017 4:15 AM IST (Updated: 17 April 2017 3:26 AM IST)
t-max-icont-min-icon

ஸ்ரீரங்கம் ரெங்கநாதர் கோவில் சித்திரை தேர் திருவிழாவையொட்டி நேற்று தேரில் முகூர்த்தக்கால் நடப்பட்டது.

ஸ்ரீரங்கம்,

ஸ்ரீரங்கம் ரெங்கநாதர் கோவில் சித்திரை தேர் திருவிழா இன்று(திங்கட்கிழமை) கொடியேற்றத்துடன் தொடங்குகிறது. இதையொட்டி கிழக்கு சித்திரை வீதியில் உள்ள சித்திரை தேரில் முகூர்த்தக்கால் நடும் விழா நேற்று மாலை நடைபெற்றது. அப்போது முகூர்த்தக்காலில் சந்தனம், மாவிலை, பூமாலை உள்ளிட்ட மங்களப்பொருட்கள் அணிவிக்கப்பட்டு, மந்திரங்கள் ஓதி புனிதநீர் தெளிக்கப்பட்டது. பின்னர் முகூர்த்தக்காலை கோவில் அலுவலர்கள் மற்றும் ஊழியர்கள் தேரில் நட்டனர்.

இதைத்தொடர்ந்து இன்று அதிகாலை 3.30 மணிக்கு நம்பெருமாள் மூலஸ்தானத்தில் இருந்து புறப்பட்டு கொடிமர மண்டபம் வருகிறார். அங்கு காலை 5 மணி முதல் 5.45 மணிக்குள் கொடியேற்றம் நடைபெறுகிறது. காலை 6.30 மணிக்கு கொடிமண்டபத்தில் இருந்து நம்பெருமாள் புறப்பட்டு கண்ணாடி அறைக்கு வருகிறார். மாலை 4.30 மணி முதல் 5.30 மணி வரை பேரிதாடனம் நடக்கிறது.

தேரோட்டம்

பின்னர் மாலை 6.30 மணிக்கு நம்பெருமாள் உபநாச்சியார்களுடன் புறப்பட்டு சித்திரை வீதிகளில் உலா வருகிறார். இரவு 8.30 மணிக்கு சந்தனு மண்டபம் வந்து சேருகிறார். இரவு 9 மணி முதல் நள்ளிரவு 1 மணி வரை யாகசாலையில் திருமஞ்சனம் கண்டருளு கிறார்.

இதைத்தொடர்ந்து 20-ந் தேதி மாலை நம்பெருமாள் கருடவாகனத்தில் எழுந்தருளி வீதி உலா வருகிறார். 23-ந் தேதி நெல்லளவு கண்டருளுகிறார். திருவிழாவின் முக்கிய நிகழ்ச்சியான சித்திரை தேரோட்டம் 25-ந் தேதி நடைபெறுகிறது. விழாவின் நிறைவு நாளான 27-ந் தேதி நம்பெருமாள் ஆளும் பல்லக்கில் எழுந்தருளி வீதி உலா வருகிறார். 

Next Story