பாராமதியில் 12–ம் வகுப்பு மாணவி துப்பாக்கியால் சுட்டு தற்கொலை உருக்கமான கடிதம் சிக்கியது


பாராமதியில் 12–ம் வகுப்பு மாணவி துப்பாக்கியால் சுட்டு தற்கொலை உருக்கமான கடிதம் சிக்கியது
x
தினத்தந்தி 17 April 2017 4:15 AM IST (Updated: 17 April 2017 3:41 AM IST)
t-max-icont-min-icon

பாராமதியில் 12–ம் வகுப்பு மாணவி துப்பாக்கியால் சுட்டு தற்கொலை செய்துகொண்டார். அவர் எழுதி வைத்திருந்த உருக்கமான கடிதம் போலீசாரிடம் சிக்கியது.

புனே,

பாராமதியில் 12–ம் வகுப்பு மாணவி துப்பாக்கியால் சுட்டு தற்கொலை செய்துகொண்டார். அவர் எழுதி வைத்திருந்த உருக்கமான கடிதம் போலீசாரிடம் சிக்கியது.

12–ம் வகுப்பு மாணவி

புனே அருகே உள்ள பாராமதி, எம்.ஐ.டி.சி. பகுதியில் உள்ள அடுக்குமாடி குடியிருப்பில் வசித்து வருபவர் ஆர்த்தி(வயது45). இவரது கணவர் மான்சிங். இவர் ராணுவ வீரராக சிக்கீமில் பணியாற்றி வருகிறார். இவர்களுக்கு சாய்லி(17) என்ற மகளும், ஒரு மகனும் உள்ளனர். சாய்லி பாராமதியில் உள்ள தனியார் ஜூனியர் கல்லூரியில் 12–ம் வகுப்பு படித்து வந்தார்.

இந்தநிலையில் ஆர்த்தி நேற்று முன்தினம் இரவு பிள்ளைகளுடன் உணவு சாப்பிட்டார். பின்னர் அனைவரும் டி.வி. பார்த்து கொண்டு இருந்தனர். அப்போது சாய்லி மட்டும் தூக்கம் வருவதாக கூறி, படுக்கை அறைக்கு சென்றார். அவர் சென்ற சில நிமிடங்களில் படுக்கை அறையில் இருந்து துப்பாக்கியால் சுடும் பயங்கர சத்தம்கேட்டது.

தற்கொலை

இதைக்கேட்டு பதறிப்போன ஆர்த்தியும், மகனும் ஓடிச்சென்று பார்த்தனர். அப்போது சாய்லி துப்பாக்கி குண்டு தலையில் பாய்ந்த நிலையில் ரத்த வெள்ளத்தில் கிடந்தார். இதைப்பார்த்து அதிர்ச்சி அடைந்த ஆர்த்தி மகளை மீட்டு உடனடியாக அருகில் உள்ள ஆஸ்பத்திரிக்கு கொண்டு சென்றார். அங்கு அவளை பரிசோதித்த டாக்டர்கள் மாணவி ஏற்கனவே உயிரிழந்துவிட்டதாக கூறினர்.

இது குறித்து தகவல் அறிந்து வந்த போலீசார் மாணவியின் வீட்டில் சோதனை நடத்தினர். அப்போது மாணவி எழுதி வைத்திருந்த உருக்கமான கடிதம் ஒன்று கைப்பற்றப்பட்டது.

கடிதம் சிக்கியது

அதில், என்னிடம் அன்பு செலுத்துவதற்கு யாருமில்லை. வீட்டிலும், கல்லூரியிலும் யாருமே என்னிடம் சரியாக பேசுவதில்லை. எனவே தான் இந்த முடிவை எடுத்தேன், என அதில் எழுதப்பட்டுள்ளது.

மாணவி துப்பாக்கியால் சுட்டு தற்கொலை செய்துகொண்ட சம்பவம் அப்பகுதியில் சோகத்தை ஏற்படுத்தி உள்ளது. இந்த சம்பவம் குறித்து வழக்குப்பதிவு செய்த போலீசார், மாணவிக்கு துப்பாக்கி கிடைத்தது எப்படி என்பது குறித்து தீவிர விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.


Next Story