தாராவி வியாபாரி மீது துப்பாக்கியால் தாக்குதல் மர்ம ஆசாமிக்கு போலீஸ் வலைவீச்சு
தாராவி வியாபாரியை துப்பாக்கியால் தாக்கிய மர்மஆசாமியை போலீசார் வலைவீசி தேடிவருகின்றனர்.
மும்பை,
தாராவி வியாபாரியை துப்பாக்கியால் தாக்கிய மர்மஆசாமியை போலீசார் வலைவீசி தேடிவருகின்றனர்.
வியாபாரி மீது தாக்குதல்மும்பை, தாராவி பகுதியை சேர்ந்தவர் ஹாஜி முஷ்தக்கீன்(வயது62). தோல் மற்றும் துணி மொத்த வியாபாரம் செய்து வருகிறார். இவர் தாராவி பகுதி மக்கள் மற்றும் அரசியல் கட்சியினரிடம் நல்ல செல்வாக்கு பெற்றவர்.
இவர் நேற்று தாராவி டி.ஜங்ஷன் அருகில் உள்ள தனது கடையில் இருந்து வீட்டிற்கு நடந்து சென்று கொண்டு இருந்தார். அப்போது அங்கு வந்த மர்ம ஆசாமி ஒருவர், திடீரென தான் வைத்திருந்த துப்பாக்கியால் ஹாஜி முஷ்தக்கீனை சுட முயன்றதாக கூறப்படுகிறது. துப்பாக்கி சுடாததால் அந்த நபர் வியாபாரியை சரமாரியாக அடித்து உதைத்ததுடன், துப்பாக்கியால் வியாபாரியின் தலையில் பலமாக தாக்கியதாக கூறப்படுகிறது. இதற்கிடையே அந்த நபர் அங்கிருந்து தப்பிஓடிவிட்டார்.
தாராவியில் பரபரப்புஇந்த தாக்குதலில் வியாபாரி ஹாஜி முஷ்தக்கீயின் தலையில் இருந்து ரத்தம் கொட்டியது. இதைப் பார்த்து அப்பகுதி மக்கள் அதிர்ச்சி அடைந்தனர். உடனடியாக அவர்கள் வியாபாரியை மீட்டு சயான் ஆஸ்பத்திரியில் சேர்த்தனர். இந்தநிலையில் ஹாஜி முஷ்தக்கீன் சுடப்பட்டதாக தாராவியில் தகவல் பரவியது. இதையடுத்து சயான் ஆஸ்பத்திரியில் அப்பகுதி மக்கள் திரண்டதால் பரபரப்பு ஏற்பட்டது.
மேலும் தகவல் அறிந்து உயர் போலீஸ் அதிகாரிகள், தாராவி தாலுகா சிவசேனா தலைவர் பி.எஸ்.கே. முத்துராமலிங்கம் மற்றும் பல்வேறு அரசியல் கட்சியினர் மருத்துவமனைக்கு வந்தனர்.
இந்த சம்பவம் குறித்து வழக்குப்பதிவு செய்த தாராவி போலீசார் சம்பவ இடத்தில் உள்ள கண்காணிப்பு கேமராவில் பதிவான காட்சிகள் மூலம் வியாபாரியை தாக்கியவரை வலைவீசி தேடிவருகின்றனர்.
இந்த சம்பவம் குறித்து துணை போலீஸ் கமிஷனர் பரம்ஜீத்சிங் தாஹியா கூறும்போது, ‘ஹாஜி முஷ்தக்கீனை தாக்கிய நபரை போலீசார் 2 தனிப்படை அமைத்து தேடி வருகின்றனர்’, என்றார்.