அதிக வட்டி தருவதாக கூறி போலீஸ் அதிகாரிகள், டாக்டர்களிடம் ரூ.22 கோடி மோசடி செய்தவர் கைது மேலும் சிலருக்கு வலைவீச்சு
அதிக வட்டி தருவதாக கூறி மும்பையை சேர்ந்த டாக்டர்கள், போலீஸ்காரர்களிடம் ரூ.22 கோடி மோசடி செய்தவர் கைது செய்யப்பட்டார்.
மும்பை,
அதிக வட்டி தருவதாக கூறி மும்பையை சேர்ந்த டாக்டர்கள், போலீஸ்காரர்களிடம் ரூ.22 கோடி மோசடி செய்தவர் கைது செய்யப்பட்டார். மேலும் இந்த மோசடியில் தொடர்புடைய சிலரை போலீசார் தேடிவருகின்றனர்.
அதிக வட்டிமும்பையை சேர்ந்தவர் தர்மேந்திரா. இவர் மும்பையை சேர்ந்த டாக்டர்கள், போலீஸ் அதிகாரிகளிடம் ஆண்டுக்கு 400 சதவீத வட்டி தருவதாக கூறி, கோடிக்கணக்கில் பணத்தை வசூலித்து வந்து உள்ளார். இதற்கு உடந்தையாக கார்த்திக்(39), அவரது தந்தை மோகன் பிரசாத், தாயார் விபா, மனைவி பிரித்தி, சகோதரி அர்ச்சிதா ஆகியோர் செயல்பட்டு வந்தனர். ஓரிரு மாதங்கள் வட்டி பணத்தை முதலீட்டாளர்களுக்கு ஒழுங்காக கொடுத்தனர். அதன் பின்னர் பணத்தை கொடுக்கவில்லை.
இதனால் பதறிப்போன முதலீட்டாளர்கள் தர்மேந்திராவை தொடர்பு கொள்ள முயன்றனர். ஆனால் அவரை தொடர்புகொள்ள முடியவில்லை. இதனால் தாங்கள் ஏமாற்றப்பட்டதை உணர்ந்த முதலீட்டாளர்கள் போலீசில் புகார் அளித்தனர்.
முக்கிய குற்றவாளி கைதுஇந்த புகார்களின்பேரில் போலீசார் வழக்கு பதிவு செய்து விசாரணை நடத்தினர். இதில், போலீஸ் அதிகாரிகள், டாக்டர்கள் என பல பேரிடம் அதிக வட்டி தருவதாக கூறி ரூ.22 கோடி அளவில் அவர்கள் மோசடியில் ஈடுபட்டது கண்டுபிடிக்கப்பட்டது. இதனை தொடர்ந்து இந்த வழக்கு பொருளாதார குற்றப்பிரிவு போலீசாருக்கு மாற்றப்பட்டது. இந்த வழக்கில் தொடர்புடைய கார்த்திக்கை கடந்த பிப்ரவரி மாதம் போலீசார் கைது செய்தனர். மேலும், தலைமறைவான முக்கிய குற்றவாளியான தர்மேந்திரா மற்றும் வழக்கில் தொடர்புடைய மற்றவர்களை போலீசார் தேடிவந்தனர். இந்தநிலையில் தர்மேந்திரா துலேயில் பதுங்கி இருப்பதாக மும்பை குற்றப்பிரிவு போலீசாருக்கு தகவல் கிடைத்தது. இதனையடுத்து அங்கு சென்ற போலீசார் தர்மேந்திராவை சுற்றி வளைத்து கைது செய்தனர்.
இந்த மோசடி வழக்கில் தொடர்புடைய மேலும் சிலரை பிடிக்க போலீசார் தீவிர விசாரணை நடத்தி வருகின்றனர்.