வேட்டவலம் அருகே குடிநீர் வழங்கக்கோரி காலிகுடங்களுடன் பொதுமக்கள் சாலை மறியல் ஒரு மணி நேரம் போக்குவரத்து பாதிப்பு
வேட்டவலம் அருகே குடிநீர் வழங்கக்கோரி காலிகுடங்களுடன் பொதுமக்கள் சாலை மறியலில் ஈடுபட்டனர்.
வேட்டவலம்,
கீழ்பென்னாத்தூர் தாலுகா வேட்டவலத்தை அடுத்த வேளானந்தல் கிராமத்தில் 3 ஆயிரத்துக்கும் மேற்பட்ட மக்கள் வசித்து வருகிறார்கள். இப்பகுதி மக்களுக்கு வேட்டவலம் பெரிய ஏரியில் உள்ள கிணற்றில் இருந்து மேல்நிலை நீர்த்தேக்க தொட்டிக்கு குழாய் மூலம் குடிநீர் கொண்டு செல்லப்பட்டு, அங்கிருந்து அனைத்து பகுதிக்கும் குடிநீர் வினியோகம் செய்யப்பட்டு வந்தது.
இந்த நிலையில் இந்தாண்டு வேட்டவலம் பகுதியில் பருவமழை பொய்த்து போனதால் ஏரியில் உள்ள கிணற்றில் குடிநீர் வற்றியது. இதனால் கடந்த சில மாதங்களாக வேளானந்தல் கிராம மக்களுக்கு குடிநீர் சரியாக வழங்கப்படவில்லை என்றும், குடிநீர் பிரச்சினையை தீர்க்கக்கோரி இப்பகுதி மக்கள் பலமுறை ஊராட்சி அலுவலகம், ஊராட்சி ஒன்றிய அலுவலகத்தில் முறையிட்டும் எவ்வித நடவடிக்கையும் இதுவரை எடுக்கப்படவில்லை என்றும் கூறப்படுகிறது.
சாலை மறியல்குடிநீர் வழங்க நடவடிக்கை எடுக்காததால் ஆத்திரம் அடைந்த வேளானந்தல் கிராம பொதுமக்கள் 150–க்கும் மேற்பட்டோர் குடிநீர் வழங்கக்கோரி காலிகுடங்களுடன் விழுப்புரம்– திருவண்ணாமலை மெயின் சாலையில் அமர்ந்து மறியலில் ஈடுபட்டனர்.
இதுகுறித்து தகவலறிந்த வேட்டவலம் போலீஸ் சப்–இன்ஸ்பெக்டர் கோவிந்தன் மற்றும் போலீசார் சாலை மறியலில் ஈடுபட்ட பொதுமக்களிடம் பேச்சுவார்த்தை நடத்தினார்கள். அப்போது பொதுமக்கள் சம்பவ இடத்துக்கு வட்டார வளர்ச்சி அலுவலர் வந்து குடிநீர் பிரச்சினைக்கு நிரந்தர தீர்வு காணும் வரை சாலை மறியலை கைவிட மாட்டோம் என்று கூறினார்கள்.
அதிகாரிகள் பேச்சுவார்த்தைஇதையடுத்து கீழ்பென்னாத்தூர் வட்டார வளர்ச்சி அலுவலர்கள் குமரேசன், மகாதேவன், மண்டல துணை வட்டார வளர்ச்சி அலுவலர் குருமூர்த்தி, கீழ்பென்னாத்தூர் தாசில்தார் சுகுணா ஆகியோர் சம்பவ இடத்துக்கு வந்து பொதுமக்களிடம் பேச்சுவார்த்தை நடத்தினார்கள். ஏரியில் உள்ள குடிநீர் கிணறு தூர்வாரப்படும் என்றும், 2 நாட்களுக்குள் 2 ஆழ்துளை கிணறுகள் அமைத்து குடிநீர் வழங்க உரிய நடவடிக்கை எடுக்கப்படும் என்று அதிகாரிகள் கூறினார்.
இதையடுத்து பொதுமக்கள் சாலை மறியலை கைவிட்டு அங்கிருந்து கலைந்து சென்றனர். இச்சம்பவத்தால் விழுப்புரம்– திருவண்ணாமலை மெயின் சாலையில் ஒரு மணி நேரத்துக்கும் மேலாக போக்குவரத்து பாதிக்கப்பட்டது.