சிங்கம்புணரியில் மருத்துவ கழிவுகளை கொட்டுவதால் பாழாகும் பாலாறு
சிங்கம்புணரியில் உள்ள பாலாற்றில் மருத்துவ கழிவுகள், இறைச்சி கழிவுகளை கொட்டுவதால் துர்நாற்றம் வீசுவதுடன் சுகாதார சீர்கேடு ஏற்பட்டு வருகிறது.
சிங்கம்புணரி,
சிவகங்கை மாவட்டத்தில் வளர்ந்து வரும் நகரங்களில் ஒன்றாக சிங்கம்புணரி திகழ்ந்து வருகிறது. பலதரப்பட்ட தொழில்கள் நடைபெறுவதால் தொழில் நகரம் என்றும் அழைக்கப்படுகிறது. இதனை கருத்தில் கொண்டு கடந்த ஆண்டு சிங்கம்புணரிக்கு தனி தாலுகா அந்தஸ்து கிடைக்க பெற்றது. தனி தாலுகா அந்தஸ்து கிடைத்ததும், நகரில் பல்வேறு திட்டங்கள் செயல்படுத்தப்படும் என்று இப்பகுதி மக்கள் எதிர்பார்த்த நிலையில், ஏமாற்றமே மிஞ்சியது. அந்த அளவுக்கு எந்தவொரு திட்டப்பணிகளும் இதுவரை சிங்கம்புணரியில் செயல்படுத்தவில்லை. குறிப்பாக சாலை, குடிநீர் உள்ளிட்ட அடிப்படை வசதிகள் தன்னிறைவு பெறவில்லை.
சிங்கம்புணரி மற்றும் சுற்றுவட்டார கிராமங்களின் விவசாயத்திற்கும், குடிநீருக்கும் முக்கிய நீராதாரமாக பாலாறு இருந்து வருகிறது. இதனால் இந்த ஆற்றை தூர்வார வேண்டும் என்று கோரிக்கை விடுக்கப்பட்டது. ஆனால் நாளடைவில் அதிகாரிகள் அதனை கண்டுகொள்ளவில்லை. திண்டுக்கல் மாவட்டம் நத்தம் கரந்தை மலை பகுதியில் உற்பத்தியாகும் பாலாறு, திருப்பத்தூரில் உள்ள உப்பாற்றில் கலக்கிறது. தற்போது இந்த பாலாறு, கழிவுநீர் கலந்தும், இறைச்சி கழிவுகள், மருத்துவ கழிவுகள் கொட்டப்பட்டும் பாழாகி சுகாதாரமற்ற நிலையில் காணப்படுகிறது.
மருத்துவ கழிவுகள்சிங்கம்புணரி பேரூராட்சிக்கு உட்பட்ட பகுதியில் அரசு ஆஸ்பத்திரி மற்றும் 10–க்கும் மேற்பட்ட தனியார் ஆஸ்பத்திரிகள் உள்ளன. இந்த ஆஸ்பத்திரிகளில் இருந்து வெளியேற்றப்படும் மருத்துவ கழிவுகளை, சிலர் சிங்கம்புணரி வேங்கைப்பட்டி சாலையில் உள்ள பாலாற்றின் பாலத்தின் கீழ் இரவு நேரங்களில் கொட்டி வருகின்றனர். மேலும் சிலர் ஆடு, மாடு போன்றவற்றின் இறைச்சி கழிவுகளை கொட்டி ஆற்றை பாழ்படுத்தி வருகின்றனர். இதனால் பாலாற்றில் துர்நாற்றம் வீசுவதுடன், தொற்றுநோய் பரவும் அபாயம் உள்ளது.
தொற்றுநோய் பரவும் அபாயம்சிங்கம்புணரியில் இருந்து பாலாறு பாலம் வழியாகவே வேங்கைப்பட்டி, பிரான்மலை, வையாபுரிபட்டி போன்ற ஊர்களுக்கு செல்ல வேண்டும். மருத்துவ கழிவுகள், இறைச்சி கழிவுகள் கொட்டுவதால் வீசும் துர்நாற்றத்தால், பாலத்தை கடந்து செல்லும் பாதசாரிகள், வாகன ஓட்டிகள் மூக்கை பொத்தியவாறு செல்ல வேண்டியுள்ளது. மேலும் சிலர் துர்நாற்றத்தால் தொற்றுநோய் ஏற்படும் என்ற அச்சத்தில், இந்தபாதையை விடுத்து, பல கிலோ மீட்டர் சுற்றி செல்கின்றனர். மேலும் இந்த பாலத்தில் இருந்து 300 மீட்டர் தூர சுற்றளவில் அரசு தொடக்கப்பள்ளி, தனியார் பள்ளிகள், ஊராட்சி மன்ற அலுவலகம் மற்றும் குடியிருப்புகள் உள்ளன. பாலாற்றில் இருந்து வீசும் துர்நாற்றம் குடியிருப்பு பகுதிகள் வரை வீசுகின்றன. இதனால் தொற்றுநோய் பரவும் அபாயம் ஏற்படும் என்ற அச்சத்தில் குடியிருப்பு வாசிகள் உள்ளனர்.
கோரிக்கைஎனவே பாலாற்றை தூர்வாருவதே சரியாக இருக்கும். இதேபோல் பாலாற்றில் மருத்துவ கழிவுகள், இறைச்சி கழிவுகள் கொட்டுவதை முற்றிலும் தடுக்க வேண்டும். அவ்வாறு கழிவுகள் கொட்டுவோர் மீது கடும் நடவடிக்கை எடுக்க வேண்டும் என்று சிங்கம்புணரி மற்றும் சுற்றுவட்டார கிராமமக்கள் கோரிக்கை விடுத்துள்ளனர்.