சேலத்தில் பரபரப்பு: டாஸ்மாக் கடைக்குள் புகுந்து சூறை; 540 மதுபாட்டில்கள் அடித்து உடைப்பு பொதுமக்கள் ஆவேசம்
சேலத்தில் டாஸ்மாக் கடைக்குள் புகுந்து சூறையாடிய பொதுமக்கள் 540 மதுபாட்டில்களை அடித்து உடைத்ததால் பரபரப்பு ஏற்பட்டது.
சேலம்,
சுப்ரீம்கோர்ட்டு உத்தரவின் பேரில் சேலம் மாவட்டத்தில் மாநகரம் மற்றும் புறநகரில் சுமார் 137 டாஸ்மாக் கடைகள் மூடப்பட்டன. அவற்றுக்கு பதிலாக மாற்று இடங்களில் டாஸ்மாக் கடைகள் அமைக்க அதிகாரிகள் நடவடிக்கை மேற்கொண்டு வருவதாக கூறப்படுகிறது. இதற்கு எதிர்ப்பு தெரிவித்து மாவட்டத்தின் பல்வேறு பகுதிகளில் பொதுமக்கள் போராட்டம் நடத்தி வருகின்றனர்.
இந்தநிலையில் சேலம் புதிய பஸ்நிலையம் 5 தியேட்டர் அருகே சமீபத்தில் டாஸ்மாக் கடை மூடப்பட்டது. இந்த கடைக்கு மாற்றாக ஆலமரத்துக்காடு என்ற பகுதியில் ஒரு கட்டிடத்தில் டாஸ்மாக் கடை அமைக்க அதிகாரிகள் முயற்சி மேற்கொண்டு வந்தனர். அங்கு டாஸ்மாக் கடை அமைக்க அந்த பகுதி பொதுமக்கள் எதிர்ப்பு தெரிவித்து கடந்த சில நாட்களுக்கு முன்பு போராட்டம் நடத்தினர்.
மதுபாட்டில்கள் உடைப்புஇதனிடையே நேற்று காலை டாஸ்மாக் மேற்பார்வையாளர் பன்னீர்செல்வம் மற்றும் ஊழியர்கள் ஆட்டோ மூலம் மதுபாட்டில்களை அங்கு கொண்டு வந்து இறக்கினர். இதையடுத்து அவர் சுமார் மதியம் 12.10 மணிக்கு அந்த டாஸ்மாக் கடையை திறப்பதற்காக மீண்டும் அங்கு வந்தார். இதுபற்றி தகவல் அறிந்ததும் அந்த பகுதி பொதுமக்கள் ஏராளமானவர்கள் டாஸ்மாக் கடை முன்பு திரண்டு வந்தனர்.
பின்னர் அவர்களில் சிலர் டாஸ்மாக் கடையின் பூட்டை உடைத்து உள்ளே புகுந்தனர். இதை தடுக்க சென்ற பன்னீர்செல்வத்தை அவர்கள் தாக்கியதாக கூறப்படுகிறது. இதையடுத்து கடைக்குள் இருந்த 15 மதுபெட்டிகளை பெண்கள் உள்பட சிலர் தூக்கி கொண்டு வெளியே வந்தனர். அங்கு அவர்கள் மதுபாட்டில்களை கீழே போட்டு உடைத்தனர். சில மதுபாட்டில்களை ரோட்டிற்கு கொண்டு வந்து அடித்து உடைத்தனர். மொத்தம் 540 மதுபாட்டில்கள் உடைக்கப்பட்டன. இதனால் அங்கு மதுபாட்டில்களின் கண்ணாடி துகள்கள் ஆங்காங்கே சிதறிக்கிடந்தன.
5 பேரை பிடித்து விசாரணைஇதுகுறித்து தகவல் கிடைத்ததும் போலீஸ் உதவி கமிஷனர் விஜய்கார்த்திக் ராஜ், போலீஸ் இன்ஸ்பெக்டர் பொன்ராஜ் மற்றும் போலீசார் அங்கு விரைந்து வந்து டாஸ்மாக் ஊழியர்களிடம் விசாரணை நடத்தினர். பின்னர் அவர்கள் அங்கிருந்தவர்களை கலைய செய்தனர். மேலும் டாஸ்மாக் கடைக்குள் புகுந்து மதுபாட்டில்களை உடைத்ததாக 5 பேரை பிடித்து சென்றனர். இதற்கு ஆலமரத்துக்காடு பொதுமக்கள் கடும் எதிர்ப்பு தெரிவித்தனர். இதனால் அங்கு பரபரப்பு ஏற்பட்டதால் போலீசார் குவிக்கப்பட்டுள்ளனர்.