மதிப்பீட்டாளர்கள் நியமன ஒப்பந்தத்தை ரத்து செய்யக்கோரி சேலம் உருக்காலை தொழிலாளர்கள் குடும்பத்துடன் ஆர்ப்பாட்டம்
மதிப்பீட்டாளர்கள் நியமன ஒப்பந்தத்தை ரத்து செய்யக்கோரி சேலம் உருக்காலை தொழிலாளர்கள் குடும்பத்துடன் ஆர்ப்பாட்டம் நடத்தினர்.
சூரமங்கலம்,
சேலம் உருக்காலையில் ஆயிரக்கணக்கான தொழிலாளர்கள் பணியாற்றி வருகின்றனர். இந்த ஆலையை தனியார் மயமாக்கும் முயற்சியில் மத்திய அரசு ஈடுபட்டு வருகிறது. இதற்கு எதிர்ப்பு தெரிவித்து உருக்காலை தொழிலாளர்கள் பல்வேறு கட்ட போராட்டங்களை நடத்தி வருகின்றனர். இந்தநிலையில் சேலம் உருக்காலை பாதுகாப்பு கூட்டமைப்பு சார்பில் நேற்று இரும்பாலை மோகன்நகரில் தொழிலாளர்கள் குடும்பத்துடன் ஆர்ப்பாட்டம் நடத்தினர்.
இதற்கு சேலம் வடக்கு சட்டமன்ற தொகுதி வக்கீல் ராஜேந்திரன் எம்.எல்.ஏ. தலைமை தாங்கினார். பா.ம.க. மாநில துணை பொதுச்செயலாளர் இரா.அருள், சி.ஐ.டி.யூ. மாநிலக்குழு உறுப்பினர் தியாகராஜன் ஆகியோர் முன்னிலை வகித்தனர். உருக்காலையை தனியார் மயமாக்குவதற்கு எதிர்ப்பு தெரிவித்தும், மதிப்பீட்டாளர்கள் நியமன ஒப்பந்தத்தை ரத்து செய்யக்கோரியும் இந்த ஆர்ப்பாட்டம் நடந்தது.
ஊர்வலம்ஆர்ப்பாட்டத்தில் கோரிக்கைகளை வலியுறுத்தி கோஷங்கள் எழுப்பப்பட்டன. இதில் ஐ.என்.டி.யூ.சி. மாவட்ட தலைவர் வடமலை, எஸ்.சி., எஸ்.டி. நலச்சங்க பொதுச்செயலாளர் மாணிக்கம், மிகவும் பிற்படுத்தப்பட்டோர் நலச்சங்க உதவித்தலைவர் இளையராஜா, நிலம் கொடுத்து பாதிக்கப்பட்டோர் நலச்சங்க செயலாளர் நாகராஜன் உள்பட பலர் கலந்து கொண்டனர்.
முன்னதாக இரும்பாலை தொழிலாளர்கள் குடும்பத்துடன் கணபதிபாளையம் குடியிருப்பு பகுதியில் இருந்து மோகன்நகர் வரை ஊர்வலமாக வந்தனர்.
இதே கோரிக்கைகளை வலியுறுத்தி சேலம் உருக்காலை கூட்டு நடவடிக்கை குழுவினர் சார்பில் சூரமங்கலம் தபால் நிலையம் முன்பு ஆர்ப்பாட்டம் நடந்தது. இதில் ஐ.என்.டி.யூ.சி.(தமிழ்நாடு) மாநில பொதுச்செயலாளர் நல்லமுத்து, விடுதலை சிறுத்தைகள் கட்சியின் மாநில தொண்டர் அணி செயலாளர் இமயவரம்பன், பாரதிய மஸ்தூர் சங்க நிர்வாகி பழனிசாமி, தொழிலாளர் முன்னேற்ற சங்க ஒருங்கிணைப்பாளர் பெருமாள், செயலாளர்கள் இளங்கோ, ரவிச்சந்திரன், ராஜூ நாயர் உள்பட பலர் கலந்து கொண்டனர்.