விவசாயிகளின் பயிர் கடன்கள் அனைத்தையும் தள்ளுபடி செய்ய வேண்டும் கிருஷ்ணகிரியில், முத்தரசன் பேட்டி


விவசாயிகளின் பயிர் கடன்கள் அனைத்தையும் தள்ளுபடி செய்ய வேண்டும் கிருஷ்ணகிரியில், முத்தரசன் பேட்டி
x
தினத்தந்தி 18 April 2017 4:15 AM IST (Updated: 17 April 2017 7:37 PM IST)
t-max-icont-min-icon

விவசாயிகளின் பயிர் கடன்கள் அனைத்தையும் தள்ளுபடி செய்ய வேண்டும்

கிருஷ்ணகிரி,

தமிழகத்தில் 140 ஆண்டுகளுக்கு பிறகு வரலாறு காணாத வறட்சி ஏற்பட்டுள்ளது. கர்நாடகா மாநில அரசு காவிரியில் தமிழகத்திற்கு சேர வேண்டிய தண்ணீரை திறந்து விடாமல் உள்ளதால் செயற்கையாக வறட்சி ஏற்பட்டுள்ளது. தமிழகத்தில் வடகிழக்கு பருவ மழை பொய்த்து போனதால் இயற்கையாகவும் வறட்சி ஏற்பட்டுள்ளது. இதனால் தமிழக விவசாயிகள் கடுமையாக பாதிக்கப்பட்டுள்ளனர்.

மேலும் சென்னை, காஞ்சீபுரம், திருவள்ளூர் மாவட்டங்களில் ஏற்பட்ட வர்தா புயல் பாதிப்பு மற்றும் தமிழகத்தில் வரலாறு காணாத வறட்சியால் ஏற்பட்டுள்ள பாதிப்புகளுக்கு நிவாரணமாக ரூ.62 ஆயிரத்து 138 கோடி ரூபாய் தேவை என்று மத்திய அரசிடம் வலியுறுத்தப்பட்டது. ஆனால் மத்திய அரசு 2014 கோடி ரூபாய் மட்டுமே தமிழகத்திற்கு வழங்கி உள்ளது. இது தமிழகத்திற்கு மத்திய அரசு செய்த துரோகமாகும்.

மத்திய அரசு துரோகம்

தமிழகத்திற்கு சேர வேண்டிய தண்ணீரை கர்நாடகா அரசு தர வேண்டும் என்றும், காவிரி மேலாண்மை வாரியத்தை அமைக்க வேண்டும் என்றும் உச்சநீதிமன்றம் உத்தரவிட்டது. இந்த உத்தரவை கர்நாடகா அரசு செயல்படுத்தவில்லை. இந்த நிலையில், காவிரி நடுவர் மன்றம், மேலாண்மை வாரியம் அனைத்தையும் கலைத்து விட்டு ஒற்றை தீர்ப்பாயம் அமைக்க மத்திய அரசு புதிய மசோதாவை தாக்கல் செய்ய முயற்சி மேற்கொள்கிறது.

இதன் மூலம் மத்திய அரசு காவிரி பிரச்சனையில் தமிழகத்திற்கு துரோகம் செய்துள்ளது. மத்திய அரசு காலம் தாழ்த்தாமல் தேசிய பேரிடர் பாதிப்பு நிதியில் இருந்து தமிழகத்திற்கு உரிய நிவாரண தொகை வழங்க வேண்டும். வறட்சி காரணமாக தமிழகத்தில் நிலவரியை மாநில அரசு ரத்து செய்துள்ளது வரவேற்கத்தக்கது. வறட்சியால் பாதிக்கப்பட்ட அனைத்து விவசாயிகளுக்கும் ஏக்கருக்கு 25 ஆயிரம் ரூபாய் வழங்க வேண்டும்.

தமிழகத்தில் ஏற்பட்டுள்ள கடும் வறட்சியால் பாதிக்கப்பட்டுள்ள விவசாயிகள் கூட்டுறவு வங்கியில் வாங்கிய அனைத்து பயிர் கடன்களையும் தள்ளுபடி செய்ய வேண்டும். இதே போல் தமிழகத்தில் தேசிய மயமாக்கப்பட்ட வங்கிகளில் விவசாயிகள் வாங்கிய பயிர் கடன்களையும் தள்ளுபடி செய்ய வேண்டும்.

பொதுமக்கள் ஆதரவு

விவசாயிகளுக்கு ஆதரவாக வருகிற 25–ந் தேதி நடக்கும் முழு அடைப்புக்கு பொதுமக்கள் முழு ஆதரவு தரவேண்டும். தமிழகத்தில் ஜெயலலிதா இறப்புக்கு பிறகு பல்வேறு அரசியல் மாற்றங்கள் நடந்து வருகிறது. இரட்டை இலை சின்னத்தை பெற ஒரு கட்சியினர் தேர்தல் ஆணையத்திற்கே லஞ்சம் கொடுக்க முயற்சி செய்துள்ளனர். விவசாயிகள் போராட்டம், மது கடைகளுக்கு எதிரான போராட்டம் என தமிழகத்தில் தினந்தோறும் போராட்டங்கள் நடந்து வரும் நிலையில் தமிழக முதல்–அமைச்சர் எடப்பாடி பழனிசாமி மவுனம் சாதிப்பது ஏன் என்று தெரியவில்லை. இவ்வாறு அவர் கூறினார்.


Next Story