கிருஷ்ணகிரியில் எருது விடும் விழா: வேடிக்கை பார்க்க சென்ற விவசாயி மாடு முட்டி சாவு 20–க்கும் மேற்பட்டவர்கள் காயம்


கிருஷ்ணகிரியில் எருது விடும் விழா: வேடிக்கை பார்க்க சென்ற விவசாயி மாடு முட்டி சாவு 20–க்கும் மேற்பட்டவர்கள் காயம்
x
தினத்தந்தி 18 April 2017 4:15 AM IST (Updated: 17 April 2017 7:38 PM IST)
t-max-icont-min-icon

கிருஷ்ணகிரியில் நடந்த எருது விடும் விழாவை வேடிக்கை பார்க்க சென்ற விவசாயி மாடு முட்டியதில் பலியானார்.

கிருஷ்ணகிரி,

கிருஷ்ணகிரி பழையபேட்டையில் எருது விடும் திருவிழா நேற்று நடந்தது. இதையொட்டி கிருஷ்ணகிரி, வேலூர் ஆகிய மாவட்டங்களில் இருந்து நூற்றுக்கும் மேற்பட்ட மாடுகள் அழைத்து வரப்பட்டிருந்தது. காலை 9 மணிக்கு தொடங்கிய இந்த விழா பகல் 1 மணிக்கு நிறைவடைந்தது.

இதில் வெற்றி பெற்ற மாடுகளின் உரிமையாளர்களுக்கு ரொக்க பரிசுகள் வழங்கப்பட்டன. அதன்படி முதல் பரிசாக ரூ. ஒரு லட்சத்து 22 ஆயிரம், இரண்டாம் பரிசாக ரூ. 77 ஆயிரம், மூன்றாம் பரிசாக ரூ. 55 ஆயிரம், நான்காம் பரிசாக ரூ. 22 ஆயிரம், 5–ம் பரிசாக ரூ. 11 ஆயிரம் மற்றும் ஆறுதல் பரிசுகள் வழங்கப்பட்டன.

மாடு முட்டி விவசாயி பலி

இந்த எருது விடும் விழாவை காண்பதற்காக கிருஷ்ணகிரி மட்டுமல்லாமல் சுற்றுவட்டார கிராமங்களில் இருந்து 10 ஆயிரத்திற்கும் மேற்பட்டவர்கள் வந்திருந்தனர். கிருஷ்ணகிரி அருகே உள்ள சின்னதக்கேப்பள்ளியைச் சேர்ந்த சின்னராஜ் (43) என்பவரும் விழாவை வேடிக்கை பார்க்க சென்றிருந்தார். அவர் தடுப்பு கம்பியின் அருகே நின்றுகொண்டு காளைகள் துள்ளி குதித்து ஓடி வருவதை ரசித்து பார்த்து கொண்டிருந்தார்.

அப்போது ஒரு காளை சின்னராஜை தனது கொம்பால் குத்தி தூக்கி வீசியது. இதில் பலத்த காயம் அடைந்த அவரை அருகில் இருந்தவர்கள் மீட்டு சிகிச்சைக்காக கிருஷ்ணகிரி அரசு ஆஸ்பத்திரிக்கு கொண்டு சென்றனர். அங்கு சிகிச்சை பலன் அளிக்காமல் சின்னராஜ் பரிதாபமாக இறந்தார். இதே போல் காளைகள் முட்டியதில் 20–க்கும் மேற்பட்டவர்கள் காயம் அடைந்தனர். அவர்களை அருகில் இருந்தவர்கள் மீட்டு சிகிச்சைக்காக கிருஷ்ணகிரி அரசு ஆஸ்பத்திரியில் சேர்த்தனர். இந்த எருது விடும் விழா காரணமாக கிருஷ்ணகிரி பழையபேட்டை சுற்று வட்டாரம் முழுவதும் நேற்று விழாக்கோலமாக காட்சி அளித்தது.


Next Story