ராசிபுரம் அருகே, கல்லை தூக்கிப்போட்டு மனைவியை கொலை செய்த தொழிலாளிக்கு ஆயுள்தண்டனை நாமக்கல் மகளிர் கோர்ட்டு தீர்ப்பு
ராசிபுரம் அருகே குடும்ப தகராறில் மனைவி மீது கல்லை தூக்கிப்போட்டு கொலை செய்த தொழிலாளிக்கு நாமக்கல் மகளிர் கோர்ட்டு ஆயுள் தண்டனை விதித்து தீர்ப்பு வழங்கியது.
நாமக்கல்,
நாமக்கல் மாவட்டம் ராசிபுரம் அருகே உள்ள அணைப்பாளையம் நவமரத்துக்காடு பகுதியை சேர்ந்தவர் குமார் (வயது 26). இவர் திருப்பூரில் உள்ள ஒரு ஜவுளிக்கடையில் தொழிலாளியாக வேலை பார்த்து வந்தார். அப்போது திருப்பூரில் உள்ள புலுவப்பட்டியை சேர்ந்த அனு என்கிற பத்மாவை (25) காதலித்து கடந்த 2009–ம் ஆண்டு திருமணம் செய்து கொண்டார்.
அதையடுத்து பத்மா கணவரின் சொந்த ஊருக்கு தன்னை அழைத்து செல்லவேண்டும் என அடிக்கடி கேட்டு வந்தார். ஆனால் குமார் சொந்த ஊருக்கு அழைத்து செல்லாமல் காலம் தாழ்த்தி வந்தார்.
ஆயுள் தண்டனைஇந்த நிலையில் கடந்த 11.1.2012–ந் தேதி அணைப்பாளையத்திற்கு மனைவி பத்மாவுடன் குமார் வந்தார். அன்றில் இருந்து இருவருக்கும் இடையே குடும்ப தகராறு ஏற்பட்டு வந்தது. அதில் ஆத்திரம் அடைந்த குமார் கடந்த 15.1.2012–ந் தேதி மனைவி தூங்கிக் கொண்டு இருந்தபோது அவர் மீது கல்லை தூக்கிப்போட்டு கொலை செய்து விட்டார்.
இதுகுறித்து ராசிபுரம் போலீசார் வழக்குப்பதிவு செய்து அவரை கைது செய்தனர். இந்த வழக்கு நாமக்கல் மகளிர் கோர்ட்டில் நடைபெற்று வந்தது. அந்த வழக்கின் இறுதி விசாரணை நேற்று நடந்து முடிந்ததை அடுத்து நீதிபதி இளங்கோ, மனைவியை கொலை செய்த கணவர் குமாருக்கு ஆயுள் தண்டனையும், ரூ.7 ஆயிரம் அபராதமும் விதித்து தீர்ப்பு கூறினார்.