குறைதீர்க்கும் நாள் கூட்டத்தில் ரூ.3.18 லட்சத்தில் நலத்திட்ட உதவிகள் கலெக்டர் ஆசியா மரியம் வழங்கினார்


குறைதீர்க்கும் நாள் கூட்டத்தில் ரூ.3.18 லட்சத்தில் நலத்திட்ட உதவிகள் கலெக்டர் ஆசியா மரியம் வழங்கினார்
x
தினத்தந்தி 18 April 2017 4:30 AM IST (Updated: 17 April 2017 7:45 PM IST)
t-max-icont-min-icon

நாமக்கல்லில் நேற்று நடந்த குறைதீர்க்கும் நாள் கூட்டத்தில் ரூ.3 லட்சத்து 18 ஆயிரம் மதிப்பிலான நலத்திட்ட உதவிகளை கலெக்டர் ஆசியா மரியம் வழங்கினார்.

நாமக்கல்,

நாமக்கல் மாவட்ட கலெக்டர் அலுவலக கூட்டரங்கில் மக்கள் குறைதீர்க்கும்நாள் கூட்டம் நேற்று நடைபெற்றது. கூட்டத்திற்கு மாவட்ட கலெக்டர் ஆசியா மரியம் தலைமை தாங்கி, பொதுமக்கள் அளித்த பல்வேறு கோரிக்கை மனுக்களை பெற்று உரிய அலுவலர்களிடம் வழங்கி, அவற்றின் மீது துரித நடவடிக்கை மேற்கொள்ள உத்தரவிட்டார்.

இக்குறை தீர்க்கும்நாள் கூட்டத்தில் முதியோர் உதவித்தொகை, விதவை உதவித்தொகை, கல்வி உதவித்தொகை வேண்டியும், குடிசை மாற்று வாரியத்தில் வீடு வேண்டியும், புதிய ரே‌ஷன்கார்டு வேண்டியும், குடிநீர் வசதி, சாலை வசதி உள்ளிட்ட அடிப்படை வசதிகள் வேண்டியும் என பல்வேறு கோரிக்கைகள் குறித்து மொத்தம் 449 மனுக்கள் வரப்பெற்றன.

நலத்திட்ட உதவிகள்

இதில் மாவட்ட பிற்படுத்தப்பட்டோர், மிகவும் பிற்படுத்தப்பட்டோர் மற்றும் சிறுபான்மையினர் நலத்துறையின் சார்பில் 2 பயனாளிகளுக்கு ரூ.3 ஆயிரத்து 355 வீதம் ரூ.6 ஆயிரத்து 710 மதிப்பிலான விலையில்லா தையல் எந்திரங்களையும், 4 பயனாளிகளுக்கு தலா ரூ.4 ஆயிரத்து 650 வீதம் ரூ.18 ஆயிரத்து 600 மதிப்பிலான விலையில்லா சலவை பெட்டிகளையும், சாலை விபத்தில் மரணம் அடைந்த 2 பேரின் குடும்பத்தாருக்கு நாமக்கல் உதவி கலெக்டர் அலுவலகத்தின் சார்பில் தலா ரூ.1 லட்சம் வீதம் ரூ.2 லட்சம் சாலை விபத்து நிவாரண நிதி உதவிக்கான காசோலைகளையும் என மொத்தம் 8 பயனாளிகளுக்கு ரூ.2 லட்சத்து 25 ஆயிரத்து 310 மதிப்பிலான நலத்திட்ட உதவிகளை கலெக்டர் ஆசியா மரியம் வழங்கினார்.

மேலும் மாவட்ட மாற்றுத்திறனாளிகள் நலத்துறையின் சார்பில் ஒரு மாற்றுத்திறனாளிக்கு ரூ.30 ஆயிரம் மதிப்பிலான சக்கர நாற்காலியினையும், 21 மாற்றுத்திறனாளிகளுக்கு ரூ.63 ஆயிரம் மதிப்பிலான இலவச பஸ் பாசையும், 19 மாற்றுத்திறனாளிகளுக்கு மாற்றுத்திறனாளிக்கான தேசிய அடையாள அட்டைகளையும் என மொத்தம் 49 பயனாளிகளுக்கு ரூ.3 லட்சத்து 18 ஆயிரத்து 310 மதிப்பிலான நலத்திட்ட உதவிகள் மற்றும் மாற்றுத்திறனாளிகளுக்கான தேசிய அடையாள அட்டைகள் உள்ளிட்ட பல்வேறு நலத்திட்ட உதவிகளை கலெக்டர் ஆசியா மரியம் வழங்கினார்.

கூட்டத்தில் மாவட்ட வருவாய் அலுவலர் பழனிசாமி, தனித்துணை கலெக்டர் (சமூக பாதுகாப்பு திட்டம்) பாலச்சந்திரன், மாவட்ட மாற்றுத்திறனாளிகள் நல அலுவலர் சுப்பிரமணி, உதவி ஆணையர் (கலால்) புகழேந்தி, மாவட்ட பிற்படுத்தப்பட்டோர் மற்றும் சிறுபான்மையினர் நல அலுவலர் ராஜேஸ்வரி உள்பட அரசுத்துறை அலுவலர்கள் கலந்து கொண்டனர்.


Next Story