தேனி அருகே குடியிருப்பு பகுதியில் டாஸ்மாக் கடைகளை இடமாற்றம் செய்ய தடை கோரி வழக்கு தற்போதைய நிலை தொடர ஐகோர்ட்டு உத்தரவு
தேனி மாவட்டம், சக்கம்பட்டி அன்னை சத்யாநகரை சேர்ந்த கோபால், மதுரை ஐகோர்ட்டில் தாக்கல் செய்த மனுவில் கூறியிருந்ததாவது:
மதுரை,
தேனி மாவட்டம், சக்கம்பட்டி அன்னை சத்யாநகரை சேர்ந்த கோபால், மதுரை ஐகோர்ட்டில் தாக்கல் செய்த மனுவில் கூறியிருந்ததாவது:–
எங்கள் கிராமத்தில் பள்ளிகள், கோவில்கள், மசூதி போன்றவை உள்ளன. போதை மறுவாழ்வு மையமும் செயல்படுகிறது. இந்தநிலையில் ஆண்டிபட்டி பஸ் நிலையத்துக்கு எதிராகவும், முருகன் தியேட்டர் அருகிலும் இருந்த டாஸ்மாக் கடைகளை அன்னை சத்யாநகரில் குடியிருப்பு பகுதிகளுக்கு இடமாற்றம் செய்யும் நடவடிக்கைகளில் அதிகாரிகள் ஈடுபட்டு வருகின்றனர். இந்த கடைகளில் ஒன்றை பசுமை வீடு திட்டத்தின்கீழ் கட்டப்பட்ட ஒரு வீட்டில் நடத்த முயற்சி செய்து வருகிறார்கள். பசுமை வீடுகளை வாடகைக்கோ, வேறு இதர பணிகளுக்கோ வழங்கக்கூடாது என்று அரசாணை உள்ளது. ஆனால் அதையும் மீறி டாஸ்மாக் கடையை அந்த வீட்டில் நடத்த உள்ளனர். அதேபோல மற்றொரு கடையை போதை மறுவாழ்வு மையத்துக்கு அருகில் நடத்துவதற்கான வேலைகளும் நடக்கின்றன. குடியிருப்பு பகுதியில் டாஸ்மாக் கடைகளை திறந்தால் சட்டம்–ஒழுங்கு பாதிக்கப்படும். எனவே அன்னை சத்யாநகர் குடியிருப்பு பகுதியில் டாஸ்மாக் கடைகளை இடமாற்றம் செய்ய தடை விதிக்க வேண்டும்.
இவ்வாறு அதில் கூறப்பட்டுள்ளது.
இந்த மனு நீதிபதிகள் ஏ.செல்வம், என்.ஆதிநாதன் ஆகியோர் முன்பு நேற்று விசாரணைக்கு வந்தது.
டாஸ்மாக் கடைகளை திறக்கும் நடவடிக்கைகளில் தற்போதைய நிலை தொடரவேண்டும் என்றும், இந்த மனு குறித்து தேனி மாவட்ட கலெக்டர், டாஸ்மாக் மேலாளர், போலீஸ் சூப்பிரண்டு ஆகியோருக்கு நோட்டீஸ் அனுப்பவும் உத்தரவிட்டு, விசாரணையை வருகிற ஜூலை 15–ந்தேதிக்கு நீதிபதிகள் தள்ளிவைத்தனர்.