பஞ்சம் நீங்கும் வரையிலும் தொழிற்சாலைகளுக்கு தாமிரபரணி தண்ணீர் வழங்கக்கூடாது மதுரை ஐகோர்ட்டில் வழக்கு


பஞ்சம் நீங்கும் வரையிலும் தொழிற்சாலைகளுக்கு தாமிரபரணி தண்ணீர் வழங்கக்கூடாது மதுரை ஐகோர்ட்டில் வழக்கு
x
தினத்தந்தி 18 April 2017 4:15 AM IST (Updated: 17 April 2017 9:57 PM IST)
t-max-icont-min-icon

பஞ்சம் நீங்கும் வரையிலும், தொழிற்சாலைகளுக்கு தாமிரபரணி தண்ணீர் வழங்கக்கூடாது

மதுரை,

நெல்லை சங்கர்நகரைச்சேர்ந்த முத்துராமன், மதுரை ஐகோர்ட்டில் தாக்கல் செய்த மனுவில் கூறியிருப்பதாவது:–

“நெல்லை மாவட்டத்தில் ஆண்டுதோறும் 841 மில்லி மீட்டர் வரை மழை பெய்யும். அதில் 3–ல் ஒருபங்கு மழை தான் கடந்த ஆண்டு பெய்தது. தற்போது ஏற்பட்ட கடுமையான வறட்சியால் நெல்லையில் தண்ணீர் பஞ்சம் நிலவுகிறது. நெல்லை, தூத்துக்குடி மாவட்டங்களில் வாரம் ஒருமுறையோ 15 நாட்களுக்கு ஒருமுறையோ தான் குடிநீர் வினியோகம் செய்யப்படுகிறது. விவசாயமும் பொய்த்துப்போனது. இப்பகுதி மக்களின் வாழ்வாதாரமான தாமிரபரணி தண்ணீரை தூத்துக்குடி மாவட்டத்தில் உள்ள பல்வேறு தொழிற்சாலைகளுக்கு வினியோகிப்பதை நிறுத்த வேண்டும் என்று கலெக்டர் உத்தரவிட்டுள்ளார்.

அதேசமயம் நெல்லை மாவட்டத்தில் செயல்படும் பல்வேறு தொழிற்சாலைகளுக்கு கோடிக்கணக்கான லிட்டர் தண்ணீர் குறைந்த விலையில் வினியோகம் செய்யப்பட்டு வருகிறது. இதனால் நெல்லை மாவட்ட மக்களின் தண்ணீர் பஞ்சம் மேலும் அதிகரித்துள்ளது.

தடை விதிக்கவேண்டும்

எனவே தண்ணீர் பஞ்சம் நீங்கும் வரையில் நெல்லை மாவட்டத்தில் செயல்படும் தொழிற்சாலைகளுக்கு தண்ணீர் வினியோகிப்பதற்கு தடை விதிக்க வேண்டும் என்று கலெக்டர் உள்ளிட்ட அதிகாரிகளுக்கு 6.3.2017 அன்று மனு அனுப்பினேன். மனுவை அதிகாரிகள் பரிசீலிக்கவில்லை.

எனவே நெல்லை மாவட்டத்தில் உள்ள தொழிற்சாலைகளுக்கு தாமிரபரணியில் இருந்து தண்ணீர் வினியோகிப்பதற்கு தடைவிதித்து உத்தரவிட வேண்டும்.

இவ்வாறு அதில் கூறப்பட்டிருந்தது.

இந்த மனு நீதிபதிகள் ஏ.செல்வம், என்.ஆதிநாதன் ஆகியோர் முன்பு நேற்று விசாரணைக்கு வந்தது.

இந்த மனுவை வேறு நீதிபதிகள் கொண்ட பெஞ்சுக்கு மாற்றி நீதிபதிகள் உத்தரவிட்டனர்.


Next Story