டி.கல்லுப்பட்டி அருகே சாலையை சீரமைக்கக்கோரி பொதுமக்கள் ஆர்ப்பாட்டம்
டி.கல்லுப்பட்டி அருகே 7 வருடங்களாக பழுதான சாலையை சீரமைக்கக் கோரி பொதுமக்கள் ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டனர்.
பேரையூர்,
டி.கல்லுப்பட்டி அருகே உள்ளது வன்னிவேலாம்பட்டி. இந்த கிராமத்திற்கு செல்லும் சாலை கடந்த 7 வருடங்களாக குண்டும், குழியுமாக முற்றிலும் பழுதடைந்து போக்குவரத்துக்கு இடையூறாகவும், கற்கள் பெயர்ந்த நிலையிலும் உள்ளது. இதனால் இப்பகுதி பொதுமக்கள் பலமுறை சம்மந்தப்பட்ட அதிகாரிகளிடம் முறையாக மனு கொடுத்துள்ளனர். ஆனால் இதுவரை எந்தவொரு நடவடிக்கையும் அதிகாரிகள் எடுக்கவில்லை. எனவே பொதுமக்கள், மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்டு கட்சியினர் நேற்று காலை திடீரென ஒன்று திரண்டு கண்டன கோஷங்கள் எழுப்பியபடி ஆர்ப்பாட்டம் நடத்தினர்.
பேச்சுவார்த்தைதொடர்ந்து அவர்கள் டி.கல்லுப்பட்டி தேசிய நெடுஞ்சாலையில் சாலை மறியலில் ஈடுபட முயன்றனர். தகவல் அறிந்து வந்த தாசில்தார் சிவக்குமார், நெடுஞ்சாலை உதவிபொறியாளர் குண்டுமலை, இன்ஸ்பெக்டர் மலர்விழி ஆகியோர் சாலை மறியலில் ஈடுபட முயன்றவர்களை தடுத்து நிறுத்தி பேச்சுவார்த்தையில் ஈடுபட்டனர்.
அதில் 15 தினங்களில் சாலைகள் அமைக்கும் பணி நடைபெறும் என உதவிப்பொறியாளர் கூறியதை தொடர்ந்து, சாலை மறியலில் ஈடுபட்டவர்கள், அடுத்த மாதம் (மே) 10–ந்தேதிக்குள் சாலை சரிசெய்யப்படாவிட்டால் மிகப்பெரிய அளவிலான போராட்டம் நடத்தப்படும் என்று கூறி கலைந்து சென்றனர்.