டெல்லி போராட்டத்துக்கு ஆதரவு தெரிவித்து காடாம்புலியூரில் விவசாயிகள் உண்ணாவிரதம்
டெல்லியில் விவசாயிகள் நடத்தி வரும் போராட்டத்திற்கு ஆதரவு தெரிவித்து காடாம்புலியூரில் விவசாயிகள் உண்ணாவிரத போராட்டத்தில் ஈடுபட்டனர்.
பண்ருட்டி,
காவிரி மேலாண்மை வாரியம் அமைக்க வேண்டும், விவசாய கடன்களை ரத்து செய்ய வேண்டும் உள்ளிட்ட பல்வேறு கோரிக்கைகளை வலியுறுத்தி தென்னிந்திய நதிகள் இணைப்பு சங்கம் சார்பில் அதன் தலைவர் அய்யாக்கண்ணு தலைமையில் டெல்லியில் தமிழக விவசாயிகள் போராட்டம் நடத்தினர். இவர்கள் தினசரி பல்வேறு விதமான போராட்டம் நடத்தி வருகிறார்கள். இந்த போராட்டத்துக்கு தமிழகத்தில் பல்வேறு அரசியல் கட்சியினர் மற்றும் இளைஞர்கள், விவசாயிகள் சங்கத்தினர் ஆதரவு தெரிவித்தும் போராட்டம் செய்து வருகிறார்கள்.
உண்ணாவிரதம்இந்த நிலையில் டெல்லியில் போராட்டம் நடத்தி வரும் விவசாயிகளுக்கு ஆதரவு தெரிவித்தும், விவசாயிகளின் கோரிக்கைகளை உடனே நிறைவேற்றக்கோரியும் பண்ருட்டி அடுத்துள்ள காடாம்புலியூர் பஸ் நிறுத்தத்தில் முந்திரி, பலா ஒருங்கிணைந்த விவசாயிகள் சார்பில் உண்ணாவிரத போராட்டம் நடைபெற்றது.
இதற்கு ஒருங்கிணைப்பாளர் பாஸ்கர் தலைமை தாங்கினார். முன்னாள் ஊராட்சி மன்ற தலைவர் புலித்தேவன் முன்னிலை வகித்தார். இதில் விவசாயிகள் பலர் கலந்து கொண்டு, கோரிக்கைகள் குறித்து விளக்கம் அளித்து பேசினர். உண்ணாவிரத போராட்டத்தில் பண்ருட்டி, காடாம்புலியூர் பகுதியை சேர்ந்த விவசாயிகள் பலர் கலந்து கொண்டனர்.