கள்ளக்குறிச்சி அருகே டாஸ்மாக் கடையை அகற்றக்கோரி கிராம மக்கள் சாலை மறியல்


கள்ளக்குறிச்சி அருகே டாஸ்மாக் கடையை அகற்றக்கோரி கிராம மக்கள் சாலை மறியல்
x
தினத்தந்தி 18 April 2017 4:30 AM IST (Updated: 17 April 2017 11:03 PM IST)
t-max-icont-min-icon

கள்ளக்குறிச்சி அருகே உள்ள டாஸ்மாக் கடையை அகற்றக்கோரி கிராம மக்கள் சாலை மறியல் போராட்டத்தில் ஈடுபட்டனர்.

கள்ளக்குறிச்சி,

சுப்ரீம் கோர்ட்டு உத்தரவை தொடர்ந்து தமிழகம் முழுவதும் தேசிய மற்றும் மாநில நெடுஞ்சாலைகளில் உள்ள 3,400 டாஸ்மாக் கடைகள் மூடப்பட்டன. அந்த வகையில் விழுப்புரம் மாவட்டம் கள்ளக்குறிச்சி பகுதியிலும் உள்ள பல்வேறு டாஸ்மாக் கடைகள் மூடப்பட்டன.

இந்த நிலையில் கள்ளக்குறிச்சி அருகே நீலமங்கலத்தில் உள்ள டாஸ்மாக் கடையை மூடிவிட்டு, அதற்கு பதிலாக கடந்த ஒரு வாரத்திற்கு முன்பு மலைக்கோட்டாலத்தில் டாஸ்மாக் கடை அமைக்கப்பட்டது. கள்ளக்குறிச்சி நகரம் மற்றும் சுற்றிலும் உள்ள பகுதிகளை சேர்ந்த மதுப்பிரியர்கள் மலைக்கோட்டாலம் கிராமத்தில் இயங்கும் டாஸ்மாக் கடையை நோக்கி படையெடுத்தனர். அவர்கள் மதுகுடித்துவிட்டு போதை தலைக்கேறியதும் அவ்வழியாக செல்லும் மாணவிகள் மற்றும் பெண்களை கேலி கிண்டல் செய்து வந்தனர்.

சாலை மறியல்

இதனால் ஆத்திரமடைந்த கிராம மக்கள் நேற்று டாஸ்மாக் கடையை முற்றுகையிட திரண்டு சென்றனர். அப்போது அங்கு பாதுகாப்பு பணியில் இருந்த துணை போலீஸ் சூப்பிரண்டு குப்புசாமி, இன்ஸ்பெக்டர் கார்த்திகேயன் ஆகியோர் தலைமையிலான போலீசார் கிராம மக்களை தடுத்து நிறுத்தினர்.

இதையடுத்து கள்ளக்குறிச்சி–மலைக்கோட்டாலம் சாலைக்கு திரண்டு சென்று, அங்கு மறியல் போராட்டத்தில் ஈடுபட்டனர். அப்போது அவர்கள், தங்கள் கிராமத்தில் அமைக்கப்பட்டுள்ள டாஸ்மாக் கடையை உடனே அகற்ற வேண்டும் என்று கண்டன கோ‌ஷம் எழுப்பினர். இதையடுத்து போலீசார் சாலை மறியலில் ஈடுபட்ட கிராம மக்களிடம், சம்பந்தப்பட்ட அதிகாரிகளிடம் பேசி நடவடிக்கை எடுப்பதாக கூறினர். இதை ஏற்ற கிராம மக்கள் அங்கிருந்து கலைந்து சென்றனர். இந்த சம்பவத்தால் அப்பகுதியில் சுமார் ½ மணி நேரம் போக்குவரத்து பாதிக்கப்பட்டது..


Next Story