குடிநீர் வினியோகம் செய்யக்கோரி பொதுமக்கள் சாலை மறியல் போக்குவரத்து பாதிப்பு


குடிநீர் வினியோகம் செய்யக்கோரி பொதுமக்கள் சாலை மறியல் போக்குவரத்து பாதிப்பு
x
தினத்தந்தி 18 April 2017 4:30 AM IST (Updated: 18 April 2017 12:13 AM IST)
t-max-icont-min-icon

அந்தியூர் அருகே குடிநீர் வினியோகம் செய்யக்கோரி பொதுமக்கள் சாலை மறியல் போராட்டத்தில் ஈடுபட்டதால் 2 மணி நேரம் போக்குவரத்து பாதிப்பு ஏற்பட்டது.

அந்தியூர்,

ஈரோடு மாவட்டம் அந்தியூரை அடுத்த கெட்டிச்சமுத்திரம் ஊராட்சிக்கு உள்பட்ட பகுதி புதுப்பாளையம் வ.உ.சி. நகர். இந்த பகுதியில் 250–க்கும் மேற்பட்ட குடும்பத்தினர் வசித்து வருகிறார்கள். இங்குள்ளவர்களுக்கு 2 ஆழ்குழாய் கிணறு அமைக்கப்பட்டு மேல்நிலை தொட்டி மூலம் குடிநீர் வினியோகம் செய்யப்பட்டு வந்தது. கடந்த 6 மாதங்களாக குடிநீர் வினியோகம் செய்யப்படவில்லை என கூறப்படுகிறது.

இந்த நிலையில் அந்த பகுதியை சேர்ந்த பொதுமக்கள் புதுப்பாளையத்தில் உள்ள அந்தியூர்–பர்கூர் ரோட்டுக்கு நேற்று காலை 8 மணி அளவில் வந்து சாலை மறியல் போராட்டத்தில் ஈடுபட்டனர்.

பேச்சுவார்த்தை

இதுபற்றி அறிந்ததும் அந்தியூர் வட்டார வளர்ச்சி அதிகாரி சுந்தர், போலீஸ் இன்ஸ்பெக்டர் சுப்பிரமணி, கெட்டிச்சமுத்திரம் ஊராட்சி செயலாளர் பிரபாகரன் ஆகியோர் சம்பவ இடத்துக்கு விரைந்து சென்று சாலை மறியல் போராட்டத்தில் ஈடுபட்ட பொதுமக்களிடம் பேச்சுவார்த்தை நடத்தினர்.

அப்போது அதிகாரிகளிடம் பொதுமக்கள் கூறுகையில், ‘எங்கள் பகுதியில் 2 ஆழ்குழாய் கிணறுகள் மூலம் குடிநீர் வினியோகம் செய்யப்பட்டு வந்தது. இந்த நிலையில் 2 ஆழ்குழாய் கிணறுகளின் மின் மோட்டார்கள் பழுது ஏற்பட்டதால் கடந்த 6 மாதங்களாக எங்களுக்கு குடிநீர் வினியோகம் செய்யவில்லை. இதனால் நாங்கள் 2 கிலோ மீட்டர் தூரத்தில் உள்ள ஆத்தம்பாளையம் பகுதிக்கு நடந்து சென்று அங்குள்ள பொதுக்குழாயில் குடிநீர் எடுத்து வருகிறோம். இதுகுறித்து அந்தியூர் ஊராட்சி ஒன்றிய அலுவலகத்தில் பல முறை புகார் மனு அளித்துவிட்டோம். ஆனால் இதுவரை எந்தவித நடவடிக்கையும் எடுக்கப்படவில்லை. எனவே எங்களுக்கு குடிநீர் வினியோகம் செய்ய உடனடியாக நடவடிக்கை எடுக்க வேண்டும்,’ என்று தெரிவித்தனர்.

போக்குவரத்து பாதிப்பு

இதைத்தொடர்ந்து பொதுமக்களிடம் அதிகாரிகள் கூறுகையில், ‘இன்னும் 2 நாட்களுக்குள் குடிநீர் கிடைக்க நடவடிக்கை எடுக்கப்படும்,’ என்றனர். இதில் சமாதானம் அடைந்த பொதுமக்கள், சாலை மறியல் போராட்டத்தை கைவிட்டு 10 மணி அளவில் அங்கிருந்து கலைந்து சென்றனர்.

இதன்காரணமாக அந்தியூர்–பர்கூர் ரோட்டில் 2 மணி நேரம் போக்குவரத்து பாதிப்பு ஏற்பட்டது.


Next Story