காந்தல் சாலையை சீரமைக்க கோரி கலெக்டர் அலுவலகத்தை பொதுமக்கள் முற்றுகை
ஊட்டி காந்தல் சாலையை சீரமைக்க கோரி கலெக்டர் அலுவலகத்தை பொதுமக்கள் முற்றுகையிட்டனர்.
ஊட்டி
ஊட்டி கலெக்டர் அலுவலகத்தில் நேற்று பொதுமக்கள் குறைதீர்க்கும் கூட்டம் நடைபெற்றது. இதற்கு கலெக்டர் சங்கர் தலைமை தாங்கினார். சாலைவசதி, மின்சாரவசதி, குடிநீர் வசதி உள்ளிட்ட பல்வேறு கோரிக்கைகள் குறித்து பொதுமக்கள் மனு அளித்தனர். இந்த மனுக்களின் மீது உரிய நடவடிக்கை எடுக்கும் படி சம்பந்தப்பட்ட துறை அதிகாரிகளுக்கு கலெக்டர் சங்கர் உத்தரவிட்டார்.
இதில் ஊட்டி காந்தல் பகுதியை சேர்ந்த பொதுமக்கள் சாலையை சீரமைக்க கோரி கலெக்டர் அலுவலகத்தை முற்றுகையிட்டனர். பின்னர் அவர்கள் கலெக்டர் அலுவலகத்தில் கொடுத்த மனுவில் கூறப்பட்டு உள்ளதாவது:–
பாதாள சாக்கடை பணிகள்ஊட்டி காந்தலில் கடந்த ஒரு ஆண்டிற்கும் மேலாக பாதாள சாக்கடை பணிகள் நடைபெற்று வருகிறது. இந்த பணிகள் காரணமாக சாலை முழுவதும் தோண்டப்பட்டுள்ளதால், இதனை பயன்படுத்த முடியாத நிலை உள்ளது. மேலும் மழைக்காலங்களில் இந்த சாலை சேறும் சகதியுமாக காட்சி அளிக்கிறது.
இதன்காரணமாக இந்த சாலையில் நடக்கும் வயதானவர்கள், பள்ளி குழந்தைகள் வழுக்கி விழும் சம்பவங்கள் நடக்கின்றன. பாதாள சாக்கடை பணியினை விரைந்து முடிக்க வேண்டும் என்று நாங்கள் பலமுறை நகராட்சி நிர்வாகத்திற்கு கோரிக்கை விடுத்தும் பலன் இல்லை.
கோவில் திருவிழாஇந்த நிலையில் காந்தலில் உள்ள புகழ்பெற்ற மூவுலகரசியம்மன் கோவில் திருவிழா வருகிற 19–ந்தேதி தொடங்கி அடுத்த மாதம் 12–ந்தேதி வரை நடக்கிறது. இந்த கோவில் தேரானது சுமார் 6 டன் எடை கொண்டது.தற்போது சாலை முழுவதும் பள்ளம் தோண்டப்பட்டு உள்ளதால், அம்மன் தேரை இழுக்க முடியாத நிலை உள்ளது. இதனால் பக்தர்கள் மிகவும் கவலை அடைந்து உள்ளனர். எனவே கோவில் திருவிழாவை கருத்தில் கொண்டு காந்தல் சாலையை விரைந்து சீரமைத்து தர நடவடிக்கை எடுக்க வேண்டும்.
இவ்வாறு அதில் கூறப்பட்டுள்ளது.
குடிநீர் தட்டுப்பாடுஇதுபோல் ஊட்டி அருகே உள்ள மேலூர் மேலட்டி பகுதியை சேர்ந்த பெண்கள் கலெக்டர் அலுவலகத்தில் மனு ஒன்று கொடுத்தனர். அந்த மனுவில் கூறப்பட்டு உள்ளதாவது:– உல்லத்தி ஊராட்சிக்குபட்ட மேலூர் மேலட்டியில் ஏராளமான குடும்பங்கள் குடியிருந்து வருகிறோம். எங்களுக்கு ஆரம்பத்தில் கடநாடு கூட்டு குடிநீர் திட்டம் மூலம் குடிநீர் கிடைத்து வந்தது.
தற்போது 3 மாத காலமாக எங்கள் பகுதிக்கு குடிநீர் கிடைக்கவில்லை. இதனால் நாங்கள் சிரமம் அடைந்து உள்ளோம். நாங்கள் அனைவரும் கூலி வேலைக்கு செல்கிறவர்கள். தற்போது குடிநீருக்காக வெகு தொலைவில் உள்ள கிணற்றுக்கு செல்ல வேண்டிய நிலை உள்ளது. இதன்காரணமாக எங்களது வேலை பாதிக்கப்படுகிறது. எங்களது நிலைமையை கருத்தில் கொண்டு குடிநீர் தட்டுப்பாடு இன்றி கிடைக்க எங்களது கிராமத்தில் ஆழ்துளை கிணறு அமைத்து தரும்படி கேட்டுக்கொள்கிறோம்.
இவ்வாறு அதில் கூறப்பட்டு உள்ளது.