கோவை விமான நிலையத்தில் தானியங்கி சோதனை எந்திரம்


கோவை விமான நிலையத்தில் தானியங்கி சோதனை எந்திரம்
x
தினத்தந்தி 18 April 2017 4:00 AM IST (Updated: 18 April 2017 12:49 AM IST)
t-max-icont-min-icon

கோவை விமான நிலையத்தில் பயணிகள் வரிசையில் நிற்காமல் அனுமதி சீட்டை வினியோகிக்கும் தானியங்கி சோதனை எந்திரம் அமைக்கப்பட்டுள்ளது.

கோவை,

விமானங்களில் பயணம் செய்பவர்கள் தங்கள் டிக்கெட்டுகளை விமான நிலையங்களுக்கு வராமல் வெளியில் இருந்தே ஆன்லைன் மூலம் டிக்கெட் முன்பதிவு செய்யலாம். மேலும் விமான நிறுவன முகவர்களிடமும் டிக்கெட்டுகள் எடுக்கலாம். ஆனால் டிக்கெட் பெற்று விட்டால் மட்டும் பயணிகளுக்காக விமானங்கள் காத்திருக்காது. விமானம் புறப்படும் நேரத்துக்கு குறைந்தபட்சம் 30 நிமிடம் முன்னதாகவே பயணிகள் விமான நிலையத்துக்கு வந்து விட வேண்டும். அதன்பின்னர் சம்பந்தப்பட்ட விமான நிறுவன கவுன்ட்டரில் வரிசையாக நின்றால் அவர்களுக்கு விமான டிக்கெட்டுடன் அனுமதி சீட்டு(போர்டிங் பாஸ்) வழங்கப்படும். அதன்பின்னர் பயணிகள் சோதனை பிரிவுக்கு செல்ல வேண்டும்.

விமானத்தை பிடிப்பதற்காக போக்குவரத்து நெருக்கடியில் சிக்கி அவசரம், அவசரமாக விமான நிலையத்துக்கு வந்தால் அங்கு நீண்டவரிசை காணப்படும். இதற்கு காரணம் நாளுக்கு நாள் விமானங்களில் பயணம் செய்பவர்கள் எண்ணிக்கை அதிகமாகி வருவதால் அங்கும் கூட்டம் அலைமோதுகிறது. எனவே பயணிகள் நீண்ட வரிசையில் நின்று அனுமதி சீட்டை பெறுவதில் உள்ள சிரமங்களை தவிர்ப்பதற்காக இந்திய விமானநிலைய ஆணையம் கோவை விமான நிலையத்தில் தானியங்கி சோதனை எந்திரத்தை அமைத்துள்ளது.

அனுமதி சீட்டு பெறலாம்

உள்நாட்டுக்குள் செல்லும் பயணிகள் தானியங்கி சோதனை எந்திரம் முன்பு போய் நிற்க வேண்டும். தங்கள் விமான டிக்கெட்டை அதில் உள்ள ஸ்கேனில் பதிவு செய்ய வேண்டும். டிக்கெட்டில் உள்ள தகவல்களும், அவர்கள் ஏற்கனவே ஆன்லைனில் பதிவு செய்த தகவல்களும் சரியாக இருக்கும்பட்சத்தில் பயணிகளுக்கு அனுமதி சீட்டை அந்த எந்திரமே வழங்கி விடும்.

இதற்காக விமான நிறுவன கவுன்ட்டர்களில் வரிசையில் நிற்க வேண்டியதில்லை. விமானத்தில் லக்கேஜ் இல்லாமல் கைப்பை மட்டும் எடுத்துச்செல்லும் பயணிகள் மட்டுமே தானியங்கி சோதனை எந்திரத்தின் மூலம் அனுமதி சீட்டு பெற்றுக் கொள்ளலாம். லக்கேஜ் கொண்டு செல்லும் பயணிகளுக்கு இதில் அனுமதி சீட்டு கிடைக்காது. இதற்கு காரணம் பயணி எடுத்து செல்லும் லக்கேஜில் என்ன இருக்கிறது என்று விமான நிறுவனங்களின் ஸ்கேனிங் எந்திரத்தில் சோதனை செய்த பின்னரே அவர்களுக்கு அனுமதி சீட்டு வழங்க முடியும்.

இத்தகைய எந்திரங்கள் சென்னை, மும்பை, பெங்களூரு போன்ற முதல்தர விமான நிலையங்களில் ஏற்கனவே அமைக்கப்பட்டுள்ளன. கோவை போன்ற இரண்டாம் தர விமான நிலையங்களில் தற்போது தான் இந்த எந்திரங்கள் அமைக்கப்பட்டுள்ளதாக கோவை விமான நிலைய அதிகாரி ஒருவர் தெரிவித்தார்.


Next Story