விமானத்தை கடத்தப்போவதாக மிரட்டல் கோவை விமான நிலையத்துக்கு கூடுதல் பாதுகாப்பு


விமானத்தை கடத்தப்போவதாக மிரட்டல் கோவை விமான நிலையத்துக்கு கூடுதல் பாதுகாப்பு
x
தினத்தந்தி 18 April 2017 5:30 AM IST (Updated: 18 April 2017 12:50 AM IST)
t-max-icont-min-icon

விமானத்தை கடத்தப்போவதாக மிரட்டல் கோவை விமான நிலையத்துக்கு கூடுதல் பாதுகாப்பு வெடிகுண்டு தடுப்பு பிரிவு போலீசார் தீவிர சோதனை

கோவை

சென்னை விமான நிலையத்துக்கு வந்த கடத்தல் மிரட்டலை தொடர்ந்து கோவை விமான நிலையத்துக்கு கூடுதல் பாதுகாப்பு அளிக்கப்பட்டுள்ளது. மேலும் விமான நிலையத்துக்கு வரும் அனைத்து வாகனங்களையும் வெடிகுண்டு தடுப்பு பிரிவு போலீசார் தீவிர சோதனை நடத்தி வருகிறார்கள்.

கோவை விமான நிலையத்துக்கு கூடுதல் பாதுகாப்பு

சென்னை, மும்பை, ஐதராபாத் ஆகிய விமான நிலையங்களில் இருந்து செல்லும் பயணிகள் விமானத்தை கடத்தப்போவதாக தகவல் வந்ததை தொடர்ந்து அந்த விமான நிலையங்களுக்கு பலத்த போலீஸ் பாதுகாப்பு போடப்பட்டது. இதைத்தொடர்ந்து கோவை விமான நிலையத்துக்கு நேற்று முதல் கூடுதல் பாதுகாப்பு போடப்பட்டுள்ளது.

அதன்படி விமான நிலையத்தின் முன்புறம் மத்திய தொழிற்பாதுகாப்பு படையினர் கூடுதலாக நிறுத்தப்பட்டு எந்திர துப்பாக்கியுடன் தீவிர கண்காணிப்பு பணியில் ஈடுபட்டுள்ளனர். இதுதவிர விமான நிலையத்தின் அனைத்து பகுதிகளிலும் மத்திய தொழிற்பாதுகாப்பு படையினர் 24 மணி நேரமும் ரோந்து சுற்றி வருகின்றனர். விமான நிலையத்துக்கு பயணிகளை இறக்கி விட வரும் கார்கள் தீவிர சோதனைக்கு பின்னரே அனுமதிக்கப்படுகின்றன. இதற்காக கோவை அவினாசி சாலையிலிருந்து விமான நிலையத்துக்கு செல்லும் சாலையில் கோவை மாநகர வெடிகுண்டு தடுப்பு பிரிவு போலீசார் புதிதாக சோதனை சாவடி அமைத்துள்ளனர். அங்கு அனைத்து வாகனங்களும் சோதனையிடப்படுகின்றன.

மெட்டல் டிடெக்டர் மூலம் சோதனை

இதுகுறித்து பாதுகாப்பு பணியில் ஈடுபட்டுள்ள போலீசார் கூறியதாவது,–

சென்னை, மும்பை, ஐதராபாத் விமான நிலையங்களுக்கு வந்த மிரட்டலை தொடர்ந்து கோவை விமான நிலையத்தில் கூடுதல் பாதுகாப்பு போடப்பட்டுள்ளது. விமான நிலையத்துக்குள் வரும் பயணிகள் மற்றும் அவர்களை வழியனுப்ப வரும் பார்வையாளர்கள் உரிய அடையாள அட்டை இல்லாமல் உள்ளே அனுமதிக்கப்படுவதில்லை. பயணிகள் கொண்டு வரும் உடைமைகளை விமான நிலைய நுழைவு வாயிலிலேயே மெட்டல் டிடெக்டர் கருவி மற்றும் மோப்பநாய்கள் மூலம் சோதனையிட்ட பின்னரே உள்ளே எடுத்துச் செல்ல அனுமதிக்கப்படுகின்றன.

கோவை விமான நிலையத்துக்கு வரும் வாகனங்களின் பதிவு எண்கள் மற்றும் டிரைவர்களின் விவரங்கள் நுழைவு வாயிலில் உள்ள சோதனை சாவடியில் பதிவு செய்யப்படுகின்றன. கோவை விமான நிலையத்துக்கு அடுத்த உத்தரவு வரும் வரை கூடுதல் பாதுகாப்பு நீடிக்கும்.

இவ்வாறு அவர்கள் கூறினார்கள்.


Next Story