3–ம் மண்டலத்துக்கு தண்ணீர் விடாததை கண்டித்து பி.ஏ.பி. அலுவலகத்தை முற்றுகையிட்ட விவசாயிகள்
3–ம் மண்டலத்துக்கு தண்ணீர் விடாததை கண்டித்து பி.ஏ.பி. அலுவலகத்தை முற்றுகையிட்ட விவசாயிகள்
பொள்ளாச்சி,
திருப்பூர் மாவட்டம் உடுமலை அருகே உள்ள திருமூர்த்தி அணை மூலம் கோவை, திருப்பூர் மாவட்டங்களில் லட்சக்கணக்கான ஏக்கர் விவசாய நிலங்கள் பாசன வசதி பெற்று வருகின்றன. திரு மூர்த்தி அணைக்கு பரம்பிக்குளம் அணையில் இருந்து காண்டூர் கால்வாய் வழியாக தண்ணீர் திறக்கப் படுகிறது. இந்த நிலையில் 3–ம் மண்டல பாசனத்திற்கு ஒரு சுற்று தண்ணீர் வழங்கப்பட வேண்டும். ஆனால் ½ சுற்று தண்ணீர் தான் வழங்கப்பட்டதாக தெரிகிறது. இதை கண்டித்து பொள்ளாச்சி– உடுமலை ரோட்டில் உள்ள பி.ஏ.பி. அலுவலகத்தை விவசாயிகள் முற்றுகையிட்டனர். பின்னர் விவசாயிகள் பொதுப்பணித்துறை செயற்பொறியாளர் முத்துசாமியிடம் ஒரு மனு கொடுத்தனர். அதில் அவர்கள் கூறியிருப்பதாவது:–
திருமூர்த்தி அணையில் இருந்து 3–ம் மண்டல பாசனத்தில் ஒரு சுற்று தண்ணீர் விடுவதற்கு பதிலாக ½ சுற்று தண்ணீர் தான் வழங்கப்பட்டு உள்ளது. ஆனால் தலைமை பொறியாளர் அலுவலக ஆவண கணக்குப்படி பரம்பிக்குளம் அணையில் இருந்து 1,625 மில்லியன் கன அடி தண்ணீர் பாசனத்திற்கு எடுக்கலாம் என்று தெரிய வருகிறது. மேலும் வறட்சியால் விவசாயிகள் தற்கொலை செய்து கொள் வதை தடுக்க அனைத்து விவசாயிகளுக்கும் பாசனத்திற்கு தண்ணீர் கிடைக்க நடவடிக்கை எடுக்க வேண்டும். நுண்ணீர் பாசன திட்டத்தை செயல்படுத்த நடவடிக்கை எடுக்க வேண்டும்.
இவ்வாறு அதில் கூறப்பட்டு உள்ளது.