தேனி பகுதியில் மதுபான கடைக்கு எதிர்ப்பு தெரிவித்து ஆர்ப்பாட்டம்–சாலை மறியல்
தேனி, போடி, தேவதானப்பட்டி பகுதியில் மதுபான கடைக்கு எதிர்ப்பு தெரிவித்து பொதுமக்கள் ஆர்ப்பாட்டம்–சாலை மறியல் போராட்டத்தில் ஈடுபட்டனர். இதனால் அப்பகுதிகளில் பரபரப்பு ஏற்பட்டது.
போடி,
தேனி மாவட்ட கலெக்டர் அலுவலகத்தில் மக்கள் குறைதீர்க்கும் நாள் கூட்டம் நடந்தது. கூட்டத்துக்கு மாவட்ட கலெக்டர் வெங்கடாசலம் தலைமை தாங்கினார். மாவட்டத்தின் பல்வேறு பகுதிகளில் இருந்தும் வந்த பொதுமக்கள் கலெக்டரிடம் மனு அளித்தனர். மனுக்களை பெற்றுக் கொண்ட கலெக்டர், பொதுமக்கள் அளித்த மனுக்கள் தொடர்பாக உரிய விசாரணை நடத்த சம்பந்தப்பட்ட துறை அலுவலர்களுக்கு உத்தரவிட்டார். மேலும், பெண் ஒருவருக்கு தையல் எந்திரத்தை கலெக்டர் வழங்கினார்.
இந்த கூட்டத்தில் மனு அளிப்பதற்காக போடி அருகே உள்ள மேலசொக்கநாதபுரம் பேரூராட்சிக்கு உட்பட்ட கீழச்சொக்கநாதபுரத்தை சேர்ந்த பொதுமக்கள் கலெக்டர் அலுவலகத்துக்கு வந்தனர். பின்னர் அவர்கள் கலெக்டர் அலுவலக நுழைவு வாயில் முன்பு மதுபான கடைக்கு எதிர்ப்பு தெரிவித்து கோஷங்களை எழுப்பி திடீர் ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டனர். அவர்களிடம் போலீசார் பேச்சுவார்த்தை நடத்தினர். பேச்சுவார்த்தையை தொடர்ந்து பொதுமக்களில் சிலர் மட்டும் கலெக்டரை சந்தித்து கோரிக்கை மனு அளித்தனர். அந்த மனுவில் கூறப்பட்டு உள்ளதாவது:–
விவசாய நிலத்தில் மதுக்கடைஎங்கள் ஊரில் தொட்டராயர் கோவில் முன்பு எந்தவித முன்னறிவிப்பும் இன்றி மதுபான கடை திறக்கப்பட்டு உள்ளது. கோவில் அருகில் விவசாய நிலத்தில் கடை அமைந்து உள்ளதால், கோவிலையும் நிலத்தையும் பார் ஆக பயன்படுத்தும் கொடுமை நடக்கிறது. மேலும் விவசாய நிலத்தில் மதுபாட்டில்களை உடைத்து போடுகின்றனர். இதே போல் பஸ் நிறுத்தத்தில் இருந்து பெண்களும், மாணவிகளும் பாதுகாப்பாக ஊருக்குள் நடந்து வருவது என்பது கேள்விக்குறியாகி உள்ளது.
கோவிலுக்குள் பெண்களும், பொதுமக்களும் வழிபடுவதற்கு செல்ல முடியாத நிலைமை ஏற்பட்டு உள்ளது. எனவே மாவட்ட கலெக்டர் இந்த பிரச்சினையில் தலையிட்டு, பொதுமக்களுக்கும், விவசாயிகளுக்கும் பாதிப்பை ஏற்படுத்தும் இந்த மதுபான கடையை அகற்ற நடவடிக்கை எடுக்க வேண்டும்.
இவ்வாறு அந்த மனுவில் கூறி இருந்தனர்.
முற்றுகை போராட்டம்தேனி மாவட்டம் போடி பகுதியில் மொத்தம் 9 மதுபான கடைகள் செயல்பட்டு வந்தது. இவை அனைத்தும் நெடுஞ்சாலை ஓரங்களில் இருந்தது. இந்த நிலையில் நீதிமன்ற உத்தரவுப்படி கடந்த 1–ந்தேதி முதல் 8 மதுபான கடைகள் மூடப்பட்டன. ரெங்கநாதபுரம் அருகே ராணிமங்கம்மாள் சாலை ஓரத்தில் உள்ள மதுபான கடை மட்டும் செயல்பட்டு வருகிறது. மூடப்பட்ட மதுபான கடைகளுக்கு வேறு இடத்தை தேர்வு செய்யும் பணியில் அதிகாரிகள் ஈடுபட்டு வருகின்றனர்.
இந்த நிலையில் ராணிமங்கம்மாள் சாலையில் உள்ள மதுபான கடையில் மதுப்பிரியர்களின் கூட்டம் அலைமோத தொடங்கியது. இதனால் பாதிப்படைந்த அப்பகுதி மக்கள் நேற்று காலை 11 மணி அளவில் அந்த மதுபான கடை முன்பு திரண்டனர். பின்னர் கடையை முற்றுகையிட்டு போராட்டம் நடத்தினர்.
கோர்ட்டு மூலம் தடைஅப்போது போடி பகுதியில் தற்போது ஒரு மதுபான கடை மட்டுமே செயல்படுகிறது. இதையடுத்து மதுப்பிரியர்கள் கடை முன்பே எப்போதும் உள்ளனர். இதனால் அந்த வழியாக பெண்கள், பள்ளி, கல்லூரி மாணவ–மாணவிகள் சென்றுவரவே அச்சப்படுகின்றனர். குறிப்பாக பெண்களுக்கு பாதுகாப்பு இல்லை. எனவே மதுபான கடையை மூட வேண்டும் என வலியுறுத்தி கோஷமிட்டனர். இதனால் அங்கு பரபரப்பு ஏற்பட்டது. சம்பவம் குறித்து தகவலறிந்த போடி தாசில்தார் முருகேசன், வருவாய் ஆய்வாளர் மாரிமுத்து மற்றும் போலீசார் விரைந்து சென்று பொதுமக்களிடம் பேச்சுவார்த்தை நடத்தினர். அப்போது மதுபான கடையை மூட வேண்டும் என்றால் அரசின் அனுமதி பெற வேண்டும்.
எனவே உடனடியாக அதனை மூட முடியாது. இருந்தபோதிலும் அதற்கான நடவடிக்கைகளை விரைவில் எடுப்பதாக தெரிவித்தனர். இதையடுத்து போராட்டத்தில் ஈடுபட்டவர்கள் அங்கிருந்து கலைந்து சென்றனர். மேலும் அதிகாரிகள் நடவடிக்கை எடுக்காவிட்டால் கோர்ட்டு மூலம் அந்த மதுபான கடை செயல்பட இடைக்கால தடை பெறப்படும் என்றும் அவர்கள் தெரிவித்தனர்.
சாலை மறியல்இதே போல் தேவதானப்பட்டி அருகே உள்ள கெங்குவார்பட்டி பஸ் நிறுத்தம் அருகே செயல்பட்டு வந்த மதுபான கடை நீதிமன்ற உத்தரவையடுத்து மூடப்பட்டது. பின்னர் கெங்குவார்பட்டி புஷ்பராணி நகர் பகுதியில் அந்த கடையை அமைக்க ஏற்பாடு செய்யப்பட்டது. இதையறிந்த அப்பகுதி மக்கள் கடந்த 10–ந்தேதி புஷ்பராணி நகரில் இருந்து கொடைக்கானல் செல்லும் சாலையில் அமர்ந்து மறியல் போராட்டத்தில் ஈடுபட்டனர். அதைத்தொடர்ந்து அங்கு வந்த சம்பந்தப்பட்ட துறை அதிகாரிகள் இது குறித்து மாவட்ட நிர்வாகத்திடம் மனு அளிக்கும்படி தெரிவித்தனர். இதையடுத்து போராட்டத்தில் ஈடுபட்டவர்கள் அங்கிருந்து கலைந்து சென்றனர். மேலும் மாவட்ட கலெக்டர் அலுவலகம், போலீஸ் சூப்பிரண்டு அலுவலகத்தில் மதுபான கடைக்கு எதிர்ப்பு தெரிவித்து மனு அளித்தனர்.
ஆனால் அந்த மனு மீது எந்தவித நடவடிக்கையும் எடுக்கப்படவில்லை என்று தெரிகிறது. இதனால் ஆத்திரமடைந்த கெங்குவார்பட்டி, அம்சாபுரம், காமக்காபட்டி, புஷ்பராணி நகர் பகுதிகளை சேர்ந்த மக்கள் கொடைக்கானல் சாலையில் மீண்டும் மறியல் போராட்டம் நடத்தினர். சம்பவம் குறித்து தகவலறிந்த பெரியகுளம் தாசில்தார் ராணி, போலீஸ் துணை சூப்பிரண்டு வினோஜி மற்றும் அதிகாரிகள் விரைந்து சென்று பேச்சுவார்த்தை நடத்தினர். அப்போது புஷ்பராணிநகர் பகுதியில் மதுபான கடை அமைக்கப்பட மாட்டாது என அதிகாரிகள் உறுதி அளித்தனர். அதையடுத்து போராட்டம் கைவிடப்பட்டது.