தேனியில் உருக்கமான நிகழ்வு: மீட்கப்பட்ட சிறிது நேரத்தில் உயிர் இழந்த புறா
தேனியில் உருக்கமான நிகழ்வு: மீட்கப்பட்ட சிறிது நேரத்தில் உயிர் இழந்த புறா தீயணைப்பு வீரரின் கையில் கடைசி மூச்சை விட்டது
தேனி
தேனி கம்பம் சாலையில் கொட்டக்குடி ஆற்றுப்பாலம் அருகே ஒரு கட்டிடத்தில் பிரமாண்ட விளம்பர பேனர் வைக்கப்பட்டு உள்ளது. இந்த பேனருக்கு இடையே தரையில் இருந்து சுமார் 40 அடி உயரத்தில் ஒரு புறா நேற்று சிக்கிக் கொண்டது.
தலைகீழாக தொங்கிக் கொண்டு இருந்த புறாவை பார்த்த ஆட்டோ டிரைவர் ஒருவர் இதுகுறித்து தேனி தீயணைப்பு நிலையத்துக்கு தகவல் கொடுத்தார். இதையடுத்து தீயணைப்பு நிலைய அலுவலர் (போக்குவரத்து) அப்துல்கலாம் ஆசாத் தலைமையில் தீயணைப்பு மற்றும் மீட்பு பணி வீரர்கள் சம்பவ இடத்துக்கு விரைந்து வந்தனர். பின்னர் ஏணி மூலம் தீயணைப்பு வீரர் ஒருவர் கஷ்டப்பட்டு மேலே ஏறி புறாவை உயிருடன் மீட்டார். மீட்கப்பட்ட புறா கீழே கொண்டு வரப்பட்டது.
அப்போது புறா கண் விழித்து சுற்றி இருந்தவர்களை பார்த்தது. அந்த புறாவின் கால்களில் நூல் சுற்றி இருந்தது. அவை புறாவின் கால்களை இறுக்கிப் பிடித்து இருந்தன. அந்த நூலை தீயணைப்பு படை வீரர்கள் அகற்றினர். புறா மிகவும் களைப்பாக இருந்தது. இதனால், அதனை தீயணைப்பு படை வீரர் ஒருவர் தனது கையில் வைத்துக் கொண்டு தண்ணீர் கொடுத்தார். கொஞ்சம் தண்ணீர் குடித்த புறா ஓரிரு நிமிடத்திலேயே இறந்தது.
பல மணி நேரமாக தலைகீழாக உயிருடன் ஊசலாடிக் கொண்டு இருந்த புறா, மீட்கப்பட்ட சில நிமிடங்களில் தீயணைப்பு படை வீரர் கையிலேயே கடைசி மூச்சை விட்டு இறந்து போனதும், அங்கிருந்தவர்கள் முகத்தில் சோகம் ஏற்பட்டது. பின்னர் அந்த புறா அப்பகுதியிலேயே புதைக்கப்பட்டது.