மகன் மீது பொய் வழக்கு பதிவு செய்வதாக கூறி கலெக்டர் அலுவலக வளாகத்தில் தீக்குளிக்க முயன்ற தம்பதி
மகன் மீது பொய் வழக்கு பதிவு செய்வதாக கூறி தம்பதி, தீக்குளிக்க முயன்றதால் கலெக்டர் அலுவலக வளாகத்தில் பரபரப்பு ஏற்பட்டது.
திண்டுக்கல்
திண்டுக்கல் மாவட்ட கலெக்டர் அலுவலகத்துக்கு நேற்று ஏராளமான மக்கள் மனு கொடுக்க வந்திருந்தனர். அப்போது திடீரென ஒரு ஆணும், பெண்ணும் உடலில் மண்எண்ணெயை ஊற்றி தீக்குளிக்க முயன்றனர். இதையடுத்து அங்கு பாதுகாப்புக்காக நின்ற போலீசார் அவர்களை தடுத்தனர். மேலும் அவர்கள் மீது தண்ணீரை ஊற்றினர். பின்னர் 2 பேரிடமும் போலீசார் விசாரணை நடத்தினர்.
அதில், தீக்குளிக்க முயன்றவர்கள் திண்டுக்கல் சவேரியார்பாளையத்தை சேர்ந்த ராஜா (வயது 55), அவருடைய மனைவி நாகராணி (48) என்பது தெரியவந்தது. பின்னர் ராஜா, போலீசாரிடம் கூறுகையில், நான் தோல் பதனிடும் தொழிற்சாலையில் வேலை செய்து வருகிறேன். எனது மகன் ஜெயந்த் (24), பெயிண்டராக வேலை செய்து வருகிறார். கடந்த 5 ஆண்டுகளுக்கு முன்பு ஒரு கொலை வழக்கில் போலீசாரால், ஜெயந்த் கைது செய்யப்பட்டார்.
பொய்வழக்கு பதிவுஅதன்பின்னர் எந்த பிரச்சினைக்கும் ஜெயந்த் செல்வது இல்லை. ஆனால், வெளியூரில் வேலை செய்து விட்டு ஊருக்கு திரும்பும் போது எல்லாம் ஜெயந்தை, போலீசார் விசாரணைக்காக அழைத்து சென்று விடுகின்றனர். மேலும் பொய் வழக்கு பதிவு செய்கின்றனர். இதனால் எனது மகனின் வாழ்க்கை பாதிக்கப்பட்டு வருகிறது. இதுதொடர்பாக கலெக்டர் நடவடிக்கை எடுக்க வேண்டும் என்பதற்காகவே தீக்குளிக்க முயன்றோம், என்றார்.
இதையடுத்து கலெக்டர் அலுவலகத்தில் நடைபெற்ற மக்கள் குறைதீர்க்கும் கூட்டத்தில் மனு கொடுக்கும்படி, அவர்களை போலீசார் அறிவுரை கூறி அனுப்பி வைத்தனர். கலெக்டர் அலுவலக வளாகத்தில் தம்பதி தீக்குளிக்க முயன்ற சம்பவம் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியது.