மாணவர் விடுதி, பஸ்நிறுத்தம் அருகே மதுக்கடைகள் அமைக்க எதிர்ப்பு கலெக்டர் அலுவலகத்தில் பொதுமக்கள் மனு


மாணவர் விடுதி, பஸ்நிறுத்தம் அருகே மதுக்கடைகள் அமைக்க எதிர்ப்பு கலெக்டர் அலுவலகத்தில் பொதுமக்கள் மனு
x
தினத்தந்தி 18 April 2017 4:45 AM IST (Updated: 18 April 2017 1:22 AM IST)
t-max-icont-min-icon

மாணவர் விடுதி, பஸ்நிறுத்தம் அருகே மதுக்கடைகள் அமைக்க எதிர்ப்பு தெரிவித்து கலெக்டர் அலுவலகத்தில் பொதுமக்கள் மனு கொடுத்தனர்.

திண்டுக்கல்

திண்டுக்கல் மாவட்ட கலெக்டர் அலுவலகத்தில் மக்கள் குறைதீர்க்கும் நாள் கூட்டம் நடந்தது. மாவட்ட வருவாய் அலுவலர் வேலு மற்றும் அனைத்து துறை அலுவலர்கள் கலந்து கொண்டனர். இதில் மாவட்டத்தின் பல்வேறு பகுதிகளில் இருந்து வந்திருந்த பொதுமக்கள், தங்களுடைய கோரிக்கைகள் தொடர்பாக மனு கொடுத்தனர்.

மதுக்கடைக்கு எதிர்ப்பு

இந்த கூட்டத்தில் சாணார்பட்டி ஒன்றியம் சட்டக்காரன்பட்டி, பொம்மையகவுண்டன்பட்டி, பரதேசிகவுண்டன்பட்டி, எம்.பண்ணைப்பட்டி, ஆர்.கல்லுப்பட்டி ஆகிய 5 கிராமங்களை சேர்ந்த பொதுமக்கள், மதுக்கடை அமைக்க எதிர்ப்பு தெரிவித்து மனு கொடுத்தனர். அந்த மனுவில், 5 கிராமங்களிலும் 2,500–க்கும் மேற்பட்ட மக்கள் வசித்து வருகிறோம். எங்கள் கிராமங்களில் இருந்து சுமார் 5 கி.மீ. தூரத்தில் உள்ள சாணார்பட்டி, அதிகாரிபட்டியில் மதுக்கடைகள் செயல்படுகின்றன.

இந்த நிலையில் பரதேசிகவுண்டன்பட்டி பகுதியில் பஸ்நிறுத்தம் அருகே புதிதாக மதுக்கடை அமைப்பதற்கான பணிகள் நடக்கின்றன. இதனா£ல் பஸ்சுக்காக காத்திருக்கும் பெண்கள், பள்ளி மாணவிகளுக்கு பாதுகாப்பற்ற சூழல் ஏற்படும். மேலும் இளைஞர்கள் மதுபழக்கத்துக்கு அடிமையாகும் வாய்ப்பு உள்ளது. போதை ஆசாமிகளால் 5 கிராம மக்களும் தொல்லை அனுபவிக்க நேரிடும். எனவே, மதுக்கடை அமைப்பதை ரத்து செய்ய வேண்டும், என்று கூறப்பட்டுள்ளது.

மாணவர் விடுதி அருகே மதுக்கடை

அதேபோல் ஒட்டன்சத்திரம் அருகேயுள்ள நீலமலைக்கோட்டை ஊராட்சி புதுஎட்டமநாயக்கன்பட்டி கிராம மக்கள் கொடுத்த மனுவில், எங்கள் ஊரில் இருந்து ஒட்டன்சத்திரம் சாலையின் அருகே கடந்த 14–ந்தேதி புதிதாக மதுக்கடை திறக்கப்பட்டு உள்ளது. அதன் அருகில் பள்ளி மாணவர் விடுதி, கோவில் போன்றவை உள்ளன. மாணவர்கள் மதுவுக்கு அடிமையாகி விடும் அபாயம் உள்ளது.

மேலும், அந்த சாலை வழியாக 9 கிராமங்களை சேர்ந்த மக்கள், பெண்கள், மாணவிகள் சென்று வருகின்றனர். போதை ஆசாமிகள் மதுவை குடித்து விட்டு வீண் தகராறுகளில் ஈடுபடுகின்றனர். இதனால் பெண்கள் உள்பட அனைவருக்கும் பாதுகாப்பு இல்லாத நிலை ஏற்பட்டு வருகிறது. 9 கிராம மக்களின் பாதுகாப்பை கருதி மதுக்கடையை வேறு இடத்துக்கு மாற்ற வேண்டும், என்று கூறியுள்ளனர்.

குடிநீர் கேட்டு மனு

ரெட்டியார்சத்திரம் ஒன்றியம் அம்மாபட்டி கிராம மக்கள் குடிநீர் வழங்கக்கோரி மனு கொடுத்தனர். இதுபற்றி கிராம மக்கள் கூறுகையில், எங்கள் கிராமத்தில் 2 ஆயிரத்துக்கும் மேற்பட்டோர் வசித்து வருகிறோம். இங்கு சமீபகாலமாக முறையாக குடிநீர் வழங்குவது இல்லை. மேலும் ஒருசில பகுதிகளில் மட்டும் குடிநீர் குழாய் அமைத்துள்ளனர். இதனால் குடிநீருக்காக விவசாய தோட்டங்களுக்கு செல்ல வேண்டிய நிலை உள்ளது. அம்மாபட்டியில் அனைத்து பகுதியிலும் குழாய் அமைத்து சீரான முறையில் குடிநீர் வழங்க வேண்டும், என்றனர்.

மினிவேன் டிரைவர்கள் கொடுத்த மனுவில், திண்டுக்கல்லில் கடந்த 12–ந்தேதி பயணிகளை ஏற்றி வந்த மினிவேன்களை அதிகாரிகள் பறிமுதல் செய்தனர். தற்போது வரை அவை அனைத்தும் திண்டுக்கல் நகர் வடக்கு போலீஸ் நிலையத்தில் நிறுத்தி வைக்கப்பட்டுள்ளன. இதனால் எங்களின் வாழ்வாதாரம் பாதிக்கப்படுகிறது. எனவே, பறிமுதல் செய்த மினிவேன்களை திரும்ப ஒப்படைக்க வேண்டும் என்று கூறியிருந்தனர்.

நிலக்கோட்டை தாலுகா எத்திலோட்டை சேர்ந்த பாக்கியராஜ் கொடுத்த மனுவில், கடந்த சில நாட்களுக்கு முன்பு ஒரு தரப்பினர் ஊரில், எங்கள் பகுதிக்குள் நுழைந்து தாக்குதல் நடத்தினர். அதில் சிலர் காயம் அடைந்தனர். மேலும் பலர் பயந்து ஊரை விட்டு வெளியேறி விட்டனர். எனவே, மக்கள் வசிப்பதற்கு பாதுகாப்பு அளிக்க வேண்டும். எங்கள் பகுதியை சேர்ந்தவர்களை தாக்கியவர்களை வன்கொடுமை தடுப்பு சட்டத்தில் கைது செய்ய வேண்டும், என்று கூறப்பட்டிருந்தது.


Next Story