பாளையங்கோட்டையில் பிளஸ்–2 விடைத்தாள் திருத்தும் மையத்தில் ஆசிரியர்கள் ஆர்ப்பாட்டம்
பாளையங்கோட்டையில் ஒளிவுமறைவற்ற கலந்தாய்வை நடத்தக்கோரி
நெல்லை,
பிளஸ்–2 விடைத்தாள் திருத்தும் மையத்தில் ஆசிரியர்கள் நேற்று ஆர்ப்பாட்டம் நடத்தினர்.
ஆர்ப்பாட்டம்சேரன்மாதேவி கல்வி மாவட்டம் சார்பில் பாளையங்கோட்டையில் உள்ள ஒரு தனியார் பள்ளியில் பிளஸ்–2 விடைத்தாள்கள் திருத்தப்பட்டு வருகின்றன. அந்த மையம் முன்பு நேற்று காலை நெல்லை மாவட்ட முதுகலை பட்டதாரி ஆசிரியர் கழகம் சார்பில் ஆர்ப்பாட்டம் நடந்தது. சேரன்மாதேவி கல்வி மாவட்ட சங்க தலைவர் தங்கமலை தலைமை தாங்கினார்.
மாவட்ட செயலாளர் ஆசீர் சார்லஸ், தலைமையிட செயலாளர் செந்தில்குமார் ஆகியோர் முன்னிலை வகித்தனர். மாவட்ட துணை தலைவர் செல்வராஜ் வரவேற்று பேசினார். மாநில பிரசார செயலாளர் மனோகரன் ஆர்ப்பாட்டத்தை தொடங்கி வைத்தார்.
கலந்தாய்வுதரம் உயர்த்தப்பட்ட மேல்நிலைப்பள்ளிகளின் பட்டியலை வெளியிட வேண்டும், பதவி உயர்வு, பணி மாறுதலுக்கான ஒளிவுமறைவற்ற கலந்தாய்வை அடுத்த (மே) மாதம் நடத்த வேண்டும். பிளஸ்–2 விடைத்தாள் ஒன்றுக்கு ரூ.10 மதிப்பூதியம் இந்த கல்வி ஆண்டில் வழங்க வேண்டும், புதிய ஓய்வூதிய திட்டத்தை ரத்து செய்ய வேண்டும், பழைய ஓய்வூதிய திட்டத்தை அமல்படுத்த வேண்டும், 1–6–2006–க்கு முன் பணியில் சேர்ந்த ஆசிரியர்களுக்கு கால முறை ஊதியம் வழங்க வேண்டும், மாணவர்களின் விகிதத்துக்கு ஏற்ப ஆசிரியர்களை நியமிக்க வேண்டும், ஆசிரியர் காலிப்பணியிடங்களை நிரப்ப வேண்டும் என்பன உள்ளிட்ட பல்வேறு கோரிக்கைகளை வலியுறுத்தி ஆர்ப்பாட்டம் நடந்தது. அப்போது கோரிக்கைகளை வலியுறுத்தி கோஷங்கள் எழுப்பப்பட்டன.
ஆர்ப்பாட்டத்தில் திரளான ஆசிரியர்கள் கலந்து கொண்டனர்.