கீழப்பாவூர் யூனியன் அலுவலகத்தில் குடிநீர் கேட்டு காலிக்குடங்களுடன் பெண்கள் முற்றுகை
கீழப்பாவூர் யூனியன் அலுவலகத்தில், குடிநீர் கேட்டு காலிக்குடங்களுடன் பெண்கள் முற்றுகையிட்டனர்.
ஆலங்குளம்,
பாவூர்சத்திரம் அருகே உள்ள கீழப்பாவூர் யூனியன் குலசேகரப்பட்டி பஞ்சாயத்துக்கு உட்பட்ட கிராம பகுதிகளான குலசேகரப்பட்டி, இந்திராநகர், சடையப்பபுரம் ஆகிய ஊர்களில் கடந்த சில மாதங்களாக குடிநீர் தட்டுப்பாடு நிலவி வருகிறது. வாரத்துக்கு ஒருமுறை மட்டுமே வினியோகம் செய்து, வீட்டுக்கு 2 குடம் தண்ணீர் மட்டும் கிடைப்பதாக கூறப்படுகிறது. எனவே முறையாக குடிநீர் வழங்கவும், கூடுதலாக குடிநீர் வினியோகம் செய்ய வேண்டும் என்றும் அப்பகுதியை சேர்ந்த 100–க்கும் மேற்பட்ட பெண்கள் காலிக்குடங்களுடன் நேற்று கீழப்பாவூர் யூனியன் அலுவலகத்தை முற்றுகையிட்டனர்.பேச்சுவார்த்தை
மேலும் 100 நாள் தேசிய ஊரக வேலை திட்டத்தில் பணி செய்த தொழிலாளர்களுக்கு 6 மாதங்களாக ஊதியம் வழங்கவில்லை என்றும், ஊதியத்தை உடனடியாக வழங்க வேண்டும் என்றும் வலியுறுத்தினர். போராட்டத்தில் ஈடுபட்டவர்களிடம் வட்டார வளர்ச்சி அதிகாரி கணபதி பேச்சுவார்த்தை நடத்தினார்.
பேச்சுவார்த்தையில், குடிநீர் தட்டுப்பாட்டை போக்கவும், 100 நாள் வேலை திட்டத்தில் பணி செய்தவர்களுக்கு ஊதியம் வழங்கவும் ஒரு வாரத்தில் நடவடிக்கை எடுப்பதாக உறுதி அளித்ததன் பேரில், பெண்கள் தங்களது முற்றுகை போராட்டத்தை கைவிட்டு கலைந்து சென்றனர்.