களக்காடு அருகே சிறுத்தைப்புலி மீண்டும் வந்ததால் கிராம மக்கள் பீதி
களக்காடு அருகே சிறுத்தைப்புலி மீண்டும் ஊருக்குள் வந்ததால் கிராம மக்கள் பீதி அடைந்துள்ளனர்.
களக்காடு,
நெல்லை மாவட்டம் களக்காடு அருகே உள்ள மூங்கிலடி கிராமத்தை சேர்ந்தவர் சாமுவேல் ராஜ். கடந்த 13–ந் தேதி இரவில் இவரது தோட்டத்தில் கட்டி வைத்து இருந்த 4 ஆடுகளை சிறுத்தைப்புலி அடித்துக்கொன்றது.
மறுநாள் பரமேஸ்வரபுரத்தை சேர்ந்த மூர்த்தி என்பவரது வீட்டின் முன்பகுதியில் கட்டி வைத்து இருந்த ஒரு ஆட்டையும் சிறுத்தைப்புலி அடித்துக்கொன்று தூக்கி சென்றது. சிறுத்தைப்புலியின் அட்டகாசத்தால் மூங்கிலடியில், வனத்துறையினர் தொடர்ந்து கண்காணிப்பு பணியில் ஈடுபட்டு வருகின்றனர்.
மீண்டும் வந்த சிறுத்தைப்புலிஇந்த நிலையில் நேற்று அதிகாலையில் மூங்கிலடி வடக்குத்தெருவை சேர்ந்த நாராயணன் (வயது 60) வீட்டின் அருகில் உள்ள தோட்டத்தை நோக்கி ஒரு சிறுத்தைப்புலி வந்தது. அதனை நாராயணன், அவரது மகன் அரிகிருஷ்ணன், அக்கம் பக்கத்தினர் சேர்ந்து விரட்டினர்.
தொடர்ந்து சிறுத்தைப்புலி ஊருக்குள் வந்ததால் கிராம மக்கள் பீதி அடைந்துள்ளனர். தொடர்ந்து அட்டகாசம் செய்து வரும் சிறுத்தைப்புலியை கூண்டு வைத்து பிடிக்க நடவடிக்கை எடுக்க வேண்டும் என்று அப்பகுதி மக்கள் கோரிக்கை விடுத்துள்ளனர்.