திருப்பூர் கலெக்டர் அலுவலகத்துக்கு தற்கொலை செய்ய அனுமதி கேட்டு கத்தியுடன் வந்த பெண்ணால் பரபரப்பு
திருப்பூர் கலெக்டர் அலுவலகத்துக்கு தற்கொலை செய்ய அனுமதி கேட்டு கத்தியுடன் வந்த பெண்ணால் பரபரப்பு ஏற்பட்டது.
திருப்பூர்
திருப்பூர் கலெக்டர் அலுவலகத்தில் பொதுமக்கள் குறைதீர்க்கும் நாள் கூட்டம் நேற்று காலை நடந்தது. இதில் மனு கொடுக்க திருப்பூர் வெள்ளியங்காட்டை சேர்ந்த செல்வி(வயது 40) என்பவர் வந்திருந்தார். அப்போது தனது பையில் மறைத்து வைத்திருந்த சிறிய கத்தியை திடீரென்று எடுத்த அவர், கழுத்தை அறுத்து தற்கொலை செய்ய தனக்கு அனுமதி வழங்க வேண்டும் என்று கூறி கதறி அழுததால் திடீர் பரபரப்பு ஏற்பட்டது. இதை அறிந்த போலீசார் ஓடி வந்து செல்வியிடம் இருந்த கத்தியை பிடுங்கினார்கள்.
பின்னர் செல்வி கூறும்போது, எனது கணவர் இறந்து விட்டார். எனக்கு 2 குழந்தைகள் உள்ளனர். பனியன் நிறுவனத்துக்கு வேலைக்கு சென்று பிழைப்பு நடத்தி வருகிறேன். வெள்ளியங்காடு பகுதியில் உள்ள பனியன் நிறுவனத்தில் செய்யும் 2 பேரிடம் மாத சீட்டுக்கு நான் பணம் செலுத்தி வந்தேன். சீட்டு முடிந்து எனக்கு ரூ.2 லட்சம் கொடுக்க வேண்டும். ஆனால் அவர்கள் பணம் கொடுக்காமல் இழுத்தடிக்கிறார்கள். இதுகுறித்து திருப்பூர் தெற்கு போலீஸ் நிலையத்தில் புகார் மனு கொடுத்தும் நடவடிக்கை இல்லை. எனக்கு பணம் கிடைக்க நடவடிக்கை எடுக்க வேண்டும். இல்லையென்றால் தற்கொலை செய்து கொள்ள அனுமதிக்க வேண்டும் என்றார்.
இதுதொடர்பாக கலெக்டரிடமும் செல்வி மனு கொடுத்தார். பின்னர் திருப்பூர் தெற்கு போலீஸ் இன்ஸ்பெக்டர் நெல்சன், செல்வியிடம் விசாரணை நடத்தி, உரிய நடவடிக்கை எடுப்பதாக உறுதி அளித்து அவரை அங்கிருந்து அனுப்பி வைத்தார்.
ரேஷன் கார்டுடன் வந்தனர்பல்லடம் அறிவொளிநகர் பகுதியை சேர்ந்த பெண்கள் 100–க்கும் மேற்பட்டவர்கள் ரேஷன் கார்டுகளை கைகளில் ஏந்திக்கொண்டு கலெக்டர் அலுவலகத்துக்கு வந்தனர். அந்த பெண்கள் கூறியதாவது:–
கடந்த 23 ஆண்டுகளுக்கு முன் திருப்பூர் நொய்யல் ஆற்றின் கரையோரம் நாங்கள் வசித்து வந்தோம். அப்போது மழை வெள்ளத்தால் எங்கள் குடியிருப்புகள் சேதம் அடைந்தன. பாதிக்கப்பட்ட ஆயிரத்துக்கும் மேற்பட்டவர்களுக்கு பல்லடம் அருகே அறிவொளி நகரில் அரசுக்கு சொந்தமான இடத்தில் குடியமர்த்தினார்கள். 20 ஆண்டுகளுக்கும் மேலாக நாங்கள் அங்கு வீடுகள் கட்டி குடியிருந்து வருகிறோம். குடிசை மாற்று வாரியத்தின் மூலமாக எங்களுக்கு இடம் வழங்கப்பட்டது. ஆனால் இதுவரை எங்களுக்கு வீட்டுமனைப்பட்டா வழங்கப்படவில்லை.
வீட்டுமனைப்பட்டாஎங்கள் வீடுகளுக்கு பட்டா இல்லாததால் மின் இணைப்பு, குடிநீர் இணைப்பு உள்ளிட்ட எந்தவித வசதிகளும் கிடைக்கவில்லை. நாங்கள் பல முறை மனு கொடுத்தும் இதுவரை எங்களுக்கு இலவச வீட்டுமனைப்பட்டா கிடைக்காமல் உள்ளது. அறிவொளிநகர் பகுதியில் 2 ஆயிரத்துக்கும் மேற்பட்டவர்கள் இவ்வாறு வீட்டுமனைப்பட்டா இல்லாமல் குடியிருந்து வருகிறோம். இதுவரை பட்டா வழங்காததால் எங்களுடைய ரேஷன் கார்டை மாவட்ட நிர்வாகத்திடம் ஒப்படைக்க வந்துள்ளோம்.
இவ்வாறு அவர்கள் கூறினார்கள்.
பின்னர் கலெக்டர் அலுவலக கூட்ட அரங்கில் மாவட்ட வருவாய் அதிகாரி பிரசன்னா ராமசாமியிடம் அந்த பெண்கள் மனு கொடுத்து முறையிட்டனர். அதற்கு மாவட்ட வருவாய் அதிகாரி, குடிசை மாற்று வாரிய அதிகாரிகள் அறிவொளிநகரில் குடியமர்த்தி உள்ளனர். ஆனால் சம்பந்தப்பட்ட இடம் மேய்ச்சல் புறம்போக்கு நிலமாக இருப்பதால் பட்டா வழங்குவதில் சிக்கல் உள்ளது. அந்த நிலத்தை வகைமாற்றம் செய்து வழங்குவதற்கு அரசுக்கு மாவட்ட நிர்வாகம் சார்பில் ஆவணங்கள் அனுப்பி வைக்கப்பட்டுள்ளது. உத்தரவு வந்ததும் வீட்டுமனைப்பட்டா வழங்குவதற்கான ஏற்பாடுகள் செய்யப்படும் என்றார். இதைத்தொடர்ந்து பெண்கள் அங்கிருந்து புறப்பட்டு சென்றனர்.