கலெக்டர் அலுவலகத்தில் முற்றுகையிட்ட பெண்கள் தேசிய ஊரக வேலை திட்டத்தில் நிறுத்தி வைக்கப்பட்ட சம்பளத்தை வழங்கக்கோரி
தேசிய ஊரக வேலை உறுதி திட்டத்தில் நிறுத்தி வைக்கப்பட்ட சம்பளத்தை வழங்க வலியுறுத்தி
நெல்லை,
நெல்லை கலெக்டர் அலுவலகத்தில் பெண்கள் நேற்று முற்றுகை போராட்டம் நடத்தினார்கள்.
மக்கள் குறைதீர்க்கும் கூட்டம்நெல்லை கலெக்டர் அலுவலக வளாகத்தில் உள்ள வளர்ச்சி மன்ற கூட்ட அரங்கில் மக்கள் குறை தீர்க்கும் நாள் கூட்டம் நேற்று நடந்தது. கூட்டத்துக்கு கலெக்டர் கருணாகரன் தலைமை தாங்கினார். பொதுமக்கள் வரிசையாக நின்று கோரிக்கை மனுக்களை கொடுத்தனர்.
சங்கரன்கோவில், கடையம், பாப்பாக்குடி உள்ளிட்ட பல்வேறு பஞ்சாயத்து யூனியன்களைச் சேர்ந்த பெண்கள் கலெக்டர் அலுவலகத்தில் குவிந்தனர். அவர்கள் விவசாய தொழிலாளர் சங்க மாநில தலைவர் லாசர் தலைமையில் கலெக்டர் அலுவலகத்தில் முற்றுகை போராட்டம் நடத்தினர். அப்போது கோரிக்கைகளை வலியுறுத்தி கோஷங்கள் எழுப்பினர். பின்னர், அவர்கள் கலெக்டர் கருணாகரனை சந்தித்து ஒரு கோரிக்கை மனு கொடுத்தனர். அந்த மனு கூறி இருப்பதாவது:–
மகாத்மா காந்தி தேசிய ஊரக வேலை உறுதி திட்டத்தில் 5 மாதங்களாக நிறுத்தி வைக்கப்பட்ட சம்பளத்தை வழங்க வேண்டும். இந்த திட்டத்தை நகர பஞ்சாயத்துகளிலும் விரிவுபடுத்த வேண்டும். வறட்சியால் பாதிக்கப்பட்ட விவசாய குடும்பங்களுக்கு தலா ரூ.15 ஆயிரம் நிவாரணம் வழங்க வேண்டும். இந்த திட்டத்தில் ஒரு நாளைக்கு தினக்கூலி ரூ.400 ஆக உயர்த்தி வழங்க வேண்டும். பொதுவிநியோக திட்டத்தில் இலவச அரிசியை 30 கிலோவாக உயர்த்தி வழங்க வேண்டும். தாமிரபரணி ஆற்றில் இருந்து பன்னாட்டு குளிர்பான நிறுவனங்களுக்கு தண்ணீர் எடுக்கும் உரிமத்தை ரத்து செய்ய வேண்டும்.
இவ்வாறு அந்த மனுவில் கூறப்பட்டு உள்ளது.
சீரான குடிநீர்மேலதாழையூத்து கிராம மக்கள் காலிக்குடங்களுடன் கலெக்டர் அலுவலகத்துக்கு வந்தனர். அங்கு அவர்கள் ஆர்ப்பாட்டம் நடத்தினர். பின்னர் கிராமமக்கள் சார்பில், கலெக்டரிடம் கொடுத்த மனுவில், “எங்கள் ஊரில் சுமார் 20 ஆயிரம் பேர் வசித்து வருகிறார்கள். எங்களுக்கு குடிக்க தண்ணீர் கிடைக்கவில்லை. 3 கிலோ மீட்டர் தூரம் நடந்து சென்று வயல்களில் உள்ள கிணறுகளில் தண்ணீர் எடுத்து வருகிறோம். எனவே எங்கள் ஊருக்கு குடிநீர் கிடைக்க நடவடிக்கை எடுக்க வேண்டும்“ என்று கூறப்பட்டுள்ளது.
தமிழ்புலிகள் கட்சியின் நெல்லை மேற்கு மாவட்ட செயலாளர் குமார் தலைமையில் பொது மக்கள் கலெக்டரிடம் கொடுத்த மனுவில், “தெனகாசியை அடுத்த மேலகரம் கிராமத்தில் ஆதிதிராவிட நலத்துறை மூலம் இலவச பட்டா வழங்கப்பட்டது. அந்த இடத்தில் 50 பேர் வீடு கட்டி வசித்து வருகிறார்கள். தற்போது ஒரு சிலர் அங்குள்ள பொது நடைபாதையை ஆக்கிரமிப்பு செய்து சுற்று சுவர் கட்டியுள்ளனர். அந்த ஆக்கிரமிப்புகளை அகற்ற நடவடிக்கை எடுக்க வேண்டும்“ என்று கூறப்பட்டு இருந்தது.
கஞ்சி கலயத்துடன்...அம்பை அருகே உள்ள கல்லிடைக்குறிச்சியை சேர்ந்த பொதுமக்கள் தாமிபரணி ஆற்றை பாதுகாக்கக்கோரி கஞ்சி கலயத்துடன் வந்து கலெக்டரிடம் மனு கொடுத்தனர். அந்த மனுவில், “கல்லிடைக்குறிச்சியில் திம்மராஜபுரம் பகுதியில் தேங்கும் கழிவு நீரை குழாய் மூலமாக தாமிரபரணி ஆற்றில் கலக்க பொதுப்பணித்துறை மூலம் ஒரு திட்டம் தயார் செய்யப்பட்டு உள்ளது. அந்த திட்டம் நிறைவேற்றப்பட்டால் தாமிரபரணி ஆறு மாசு படும். இந்த திட்டம் செயல்படுத்த அனுமதிக்கக் கூடாது“ என்று கூறப்பட்டு உள்ளது.