கூடங்குளம் அணு மின் நிலையத்தில் விரிவாக்க பணிகளை நிறுத்தாவிட்டால் மக்களை திரட்டி அறவழியில் போராட்டம் உதயகுமார் பேட்டி
கூடங்குளம் அணு மின் நிலையத்தில் விரிவாக்கப்பணிகளை நிறுத்தாவிட்டால் பொதுமக்களை திரட்டி அறவழியில் போராட்டம் நடத்துவோம்
நெல்லை,
என நெல்லையில் அணு உலை எதிர்ப்பு போராட்டக்குழு ஒருங்கிணைப்பாளர் உதயகுமார் கூறினார்.
கலெக்டரிடம் மனுகூடங்குளம் அணு உலை எதிர்ப்பு போராட்ட குழு ஒருங்கிணைப்பாளர் உதயகுமார் அணு சக்திக்கு எதிரான மக்கள் இயக்கத்தை சேர்ந்த சேசுராஜ், மார்க்சிஸ்ட் லெனினிஸ்டு கட்சியை சேர்ந்த ரமேஷ், தமிழக மக்கள் ஜனநாயக கட்சியை சேர்ந்த அப்துல் ஜப்பார், எஸ்.டி.பி.ஐ. கட்சியை சேர்ந்த அப்துல்கரீம், பாப்புலர் பிரண்ட் ஆப் இந்தியா அமைப்பை சேர்ந்த இலியாஸ் மற்றும் பல்வேறு கட்சிகளை சேர்ந்த சேக்முகைதீன், தமிழ்மாறன், முகமதுகவுஸ், முத்துப்பாண்டியன் உள்பட பலர் நெல்லை கலெக்டர் அலுவலகத்துக்கு நேற்று திரண்டு வந்தனர். அவர்கள், கலெக்டர் கருணாகரனை சந்தித்து மனு கொடுத்தனர்.
பின்னர் உதயகுமார் நிருபர்களிடம் கூறியதாவது:–
கூடங்குளம் அணு உலை திட்டத்துக்கு எதிராக நெல்லை மாவட்ட கடலோர மக்கள் பல ஆண்டுகளாக போராடி வருகிறார்கள். மக்கள் போராட்டத்தை பற்றி மத்திய, மாநில அரசுகள் கண்டு கொள்ளவேயில்லை.
விரிவாக்க பணிகள்தொடர்ந்து அங்கு 3, 4, 5, 6 அணு உலைகளை அமைப்பதற்கு விரிவாக்க பணிகள் தொடங்கி விட்டன. முதல் 2 அணு உலைகளை பற்றிய பல்வேறு கேள்விகளுக்கும், சந்தேகங்களுக்கும் உண்மையான, தெளிவான பதில்களோ, விளக்கங்களோ எதுவும் இதுவரை தரப்படவில்லை.
முதல் அணு உலை கடந்த மூன்று ஆண்டுகளில் 35 முறை நிறுத்தப்பட்டு உள்ளது. கேட்டால் பராமரிப்பு பணிக்காக நிறுத்துவதாக கூறுகிறார்கள். இரண்டாவது அணு உலையும் தற்போது முடங்கி கிடக்கிறது. அணு உலை கழிவுகள் கூடங்குளத்திலேயே வைக்கப்பட்டு உள்ளது.
ஒரு அணுமின் நிலையத்தை சுற்றி குறிப்பிட்ட அளவு மக்களே வாழ வேண்டும் என சர்வதேச அணு மின் நிலையங்கள் பரிந்துரை செய்துள்ளன. ஆனால் கூடங்குளத்தை சுற்றி பல லட்சம் மக்கள் வாழ்ந்து வருகிறார்கள். மக்கள் பாதுகாப்பு தொடர்பான பல விசயங்கள் மறைக்கப்பட்டு உள்ளன.
மக்களை திரட்டி அறவழியில் போராட்டம்கூடங்குளம் அணு உலைக்கு தேவையான தண்ணீரை கடல் நீரை சுத்திகரித்து பெற்று கொள்வோம் என அணு உலை நிர்வாகம் அறிவித்துள்ளது. ஆனால் தாமிரபரணி தண்ணீர், குமரி மாவட்டம் பேச்சிப்பாறை அணை தண்ணீரை எடுக்க ரகசிய திட்டங்கள் தீட்டப்பட்டு உள்ளன. மேற்கண்ட கோரிக்கைகளை அடங்கிய மனுவை கலெக்டரிடம் கொடுத்து இருக்கிறோம்.
நெல்லையை காப்போம், நெல்லை மக்களை காப்போம். கூடங்குளம் அணு உலை விரிவாக்கப்பணியை எதிர்ப்போம். அணு உலை பூங்கா அமைக்கக் கூடாது. தாமிரபரணி ஆற்றை பாதுகாப்போம் என்ற கோரிக்கைகளை முன்வைத்து நெல்லை மாவட்டம் முழுவதும் ஒரு மாதம் பிரசார பயணம் மேற்கொள்வோம். அதன் பிறகும் எங்கள் கோரிக்கைகள் நிறைவேறவில்லையென்றால் பொதுமக்களை திரட்டி அறவழியில் போராட்டம் நடத்துவோம்.
இவ்வாறு அவர் கூறினார்.