மதுக்கடையை மூடக்கோரி ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்ட 8 பேர் மீது வழக்கு
கடம்பத்தூரில், மதுக்கடையை மூடக்கோரி ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்ட 8 பேர் மீது வழக்கு
திருவள்ளூர்,
திருவள்ளூரை அடுத்த கடம்பத்தூர் போலீஸ் நிலையம் அருகே உள்ள டாஸ்மாக் கடையை மூடக்கோரி நேற்று முன்தினம் அந்த பகுதி பொதுமக்கள் ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டனர். அப்போது பெண்கள் ஒப்பாரி வைத்து ஆர்ப்பாட்டம் செய்தனர்.
வாலிபர்கள் சிலர் மதுக்கடைக்கு பூட்டு போட முயன்றனர். இதை தடுத்த போலீசாருக்கும், ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டவர்களுக்கும் இடையே வாக்குவாதம் ஏற்பட்டது. இதனால் அந்த மதுக்கடை தற்காலிகமாக மூடப்பட்டது. இதையடுத்து ஆர்ப்பாட்டத்தை கைவிட்டு பொதுமக்கள் கலைந்து சென்றனர்.
இந்த நிலையில் கடம்பத்தூர் போலீசார், மதுக்கடையை திறந்தால் பூட்டு போடுவோம், கடையை உடைப்போம் என்று கூறி ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டதாக அந்த மதுபானக்கடை கட்டிட உரிமையாளர் ஆனந்தன், அவருடைய மனைவி ராதிகா, பா.ம.க. நிர்வாகிகள் கேசவன், மற்றொரு கேசவன், சம்பத், வெங்கடேசன், மஞ்சுளா, கார்த்திக் ஆகிய 8 பேர் மீது வழக்குப்பதிவு செய்து உள்ளனர்.