பல்வேறு வழக்குகளில் தொடர்புடைய ரவுடியை குண்டர் சட்டத்தில் சிறையில் அடைக்க உத்தரவு
பல்வேறு வழக்குகளில் தொடர்புடைய ரவுடியை குண்டர் சட்டத்தில் சிறையில் அடைக்க உத்தரவு
திருவள்ளூர்,
சென்னை வியாசர்பாடி கன்னிகாபுரம் 2–வது தெருவை சேர்ந்தவர் சரவணன் என்கிற பாம் சரவணன் (வயது 40). இவர் மீது செவ்வாப்பேட்டை, மணவாளநகர் போலீஸ் நிலையங்களில் வழிப்பறி மற்றும் கொலை வழக்குகள் என 5 வழக்குகள் உள்ளன. மேலும் இவர் மீது வியாசர்பாடி, பெரம்பூர் என சென்னையில் உள்ள போலீஸ் நிலையங்களிலும் 19 வழக்குகள் நிலுவையில் உள்ளது. ஏற்கனவே ஒரு வழக்கு தொடர்பாக சரவணன் கைது செய்யப்பட்டு புழல் சிறையில் அடைக்கப்பட்டுள்ளார்.
இந்தநிலையில், தொடர்ந்து குற்றச்செயலில் ஈடுபட்டு வரும் சரவணன் மீது குண்டர் சட்டத்தின் கீழ் நடவடிக்கை எடுக்க வேண்டும் என திருவள்ளூர் மாவட்ட போலீஸ் சூப்பிரண்டு ஈ.டி.சாம்சன், மாவட்ட கலெக்டர் எ.சுந்தரவல்லிக்கு கோரிக்கை விடுத்தார். அதை ஏற்றுக்கொண்ட அவர் நேற்று முன்தினம் சரவணனை குண்டர் சட்டத்தில் சிறையில் அடைக்க உத்தரவிட்டார். இதற்கான ஆணை சிறைத்துறை அதிகாரிகளிடம் நேற்று வழங்கப்பட்டது.