சிங்கபெருமாள்கோவில் அருகே பிடிபட்ட நட்சத்திர ஆமை
சிங்கபெருமாள்கோவில் அருகே நட்சத்திர ஆமை பிடிபட்டது
செங்கல்பட்டு,
செங்கல்பட்டு அடுத்த சிங்கபெருமாள்கோவில் ஊராட்சிக்கு உட்பட்ட திருத்தேரி கிராமத்தை சேர்ந்தவர் பாண்டி. இவருடைய நண்பரான பெரியவிஞ்சியம்பாக்கத்தை சேர்ந்தவர் ராஜாராம். இவர்கள் இருவரும் நேற்று சிங்கபெருமாள்கோவில் பகுதி அருகே வனப்பகுதியை ஒட்டி உள்ள சாலையில் மோட்டார் சைக்கிளில் சென்று கொண்டிருந்தனர்.
அப்போது சாலையின் குறுக்கே நட்சத்திர ஆமை ஒன்று சாலையை கடந்து செல்ல முயன்றதை கண்டனர். வாகனங்களில் சிக்கி பலியாகி விடாமல் அந்த நட்சத்திர ஆமையை பிடித்து ஒரு பையில் போட்டு பாதுகாப்பாக தங்கள் வீட்டுக்கு எடுத்து சென்றனர்.
பின்னர் இதுபற்றி செங்கல்பட்டு வனத்துறைக்கு தகவல் கொடுத்தனர். தகவல் அறிந்து வந்த வனத்துறையினர், அந்த நட்சத்திர ஆமையை அவர்களிடம் இருந்து மீட்டு அஞ்சூர் வனப்பகுதியில் கொண்டு போய் விட்டனர். முன்னதாக நட்சத்திர ஆமையை அந்த பகுதியை சேர்ந்த பொதுமக்கள் ஆர்வமாக வந்து பார்த்து சென்றனர்.