வறட்சி நிவாரணம் வழங்கக்கோரி விவசாய தொழிலாளர்கள் காத்திருப்பு போராட்டம்


வறட்சி நிவாரணம் வழங்கக்கோரி விவசாய தொழிலாளர்கள் காத்திருப்பு போராட்டம்
x
தினத்தந்தி 18 April 2017 4:30 AM IST (Updated: 18 April 2017 2:23 AM IST)
t-max-icont-min-icon

வறட்சி நிவாரணம் வழங்கக்கோரி விவசாய தொழிலாளர்கள் காத்திருப்பு போராட்டத்தை தொடங்கினர்.

தஞ்சாவூர்,

தஞ்சை பனகல் கட்டிடம் முன்பு தமிழ்மாநில விவசாய தொழிலாளர் சங்கத்தின் சார்பில் காத்திருப்பு போராட்டம் நேற்றுகாலை தொடங்கியது. இதற்கு மாவட்ட தலைவர் கிருஷ்ணன் தலைமை தாங்கினார். மாவட்ட செயலாளர் பக்கிரிசாமி முன்னிலை வகித்தார். போராட்டத்தை தமிழ்நாடு விவசாயிகள் சங்க பொதுச் செயலாளர் வே.துரைமாணிக்கம் தொடங்கி வைத்து பேசினார். இதில், காவிரி மேலாண்மை வாரியம், காவிரி ஒழுங்காற்றுக்குழுவை உடனடியாக மத்தியஅரசு அமைக்க வேண்டும். விவசாய தொழிலாளர்களுக்கு தலா ரூ.25 ஆயிரம் வறட்சி நிவாரணம் வழங்க வேண்டும். மாதம் தோறும் வழங்கும் விலையில்லா அரிசியை 30 கிலோவாக உயர்த்த வேண்டும். ஆண்டுமுழுவதும்(அரசு விடுமுறை நாட்கள் தவிர) மகாத்மாகாந்தி தேசிய ஊரக வேலை உறுதியளிப்பு திட்டத்தின் கீழ் வேலை வழங்க வேண்டும்.

குறைந்தபட்ச ஊதியம்

இந்த திட்டத்தின் கீழ் வேலை செய்யும் தொழிலாளர்களுக்கு குறைந்தபட்ச ஊதியமாக ஒரு நாளைக்கு ரூ.410 வழங்க வேண்டும். இந்த திட்டத்தை பேரூராட்சிகள், நகராட்சிகளுக்கும் விரிவுபடுத்த வேண்டும். ஊதிய நிலுவைத் தொகையை தாமதமின்றி வழங்க வேண்டும் என்பன உள்ளிட்ட பல்வேறு கோரிக்கைகள் வலியுறுத்தப்பட்டன.

போராட்டத்தில் இந்திய கம்யூனிஸ்டு கட்சி மாவட்ட செயலாளர் திருஞானம், மாவட்ட துணைச் செயலாளர் முத்து.உத்திராபதி, ஏ.ஐ. டி.யூ.சி. மாவட்ட செயலாளர் தில்லைவனம், தலைவர் சேவையா, வங்கி ஊழியர் சங்க மாவட்ட பொதுச் செயலாளர் அன்பழகன், மாதர் சங்க மாவட்ட செயலாளர் விஜயலட்சுமி, விவசாயிகள் சங்க மாவட்ட செயலாளர் பாலசுந்தரம், தமிழ்நாடு அரசு போக்குவரத்து கழக தொழிலாளர்கள் சங்க ஏ.ஐ.டி.யூ.சி. மண்டல பொதுச் செயலாளர் துரை.மதிவாணன், இளைஞர் பெருமன்ற மாவட்ட செயலாளர் செல்வகுமார் ஆகியோர் கோரிக்கைகளை விளக்கி பேசினர்.

மக்களை திரட்டி

முன்னதாக வே.துரைமாணிக்கம் நிருபர்களிடம் கூறும்போது, இந்த ஆண்டு சாகுபடி நடைபெறாததால் விவசாயிகள் மட்டுமின்றி விவசாய தொழிலாளர்களும் வேலையின்றி பாதிக்கப்பட்டுள்ளனர். இவர்களின் குடும்பத்திற்கு தலா ரூ.25 ஆயிரம் வறட்சி நிவாரணம் வழங்க வேண்டும் என்பன உள்ளிட்ட பல்வேறு கோரிக்கைகளை நிறைவேற்ற வலியுறுத்தி அமைதியான வழியில் போராட்டம் நடத்துகிறோம். தீர்வு கிடைக்கவில்லை என்றால் அரசை நிர்பந்திக்கும் வகையில் மிக கடுமையான போராட்டத்தில் ஈடுபடுவோம். அதற்கு முன்பு நிலைமையை புரிந்து கொண்டு மத்திய, மாநில அரசுகள் நடவடிக்கை எடுக்க வேண்டும். இல்லையெனில் மக்களை திரட்டி நாடு அவதிப்படும் சூழலை உருவாக்குவோம் என்றார். 

Next Story