சென்னையில் இருந்து சிங்கப்பூருக்கு கடத்த முயன்ற 39 கிலோ மயில் தோகைகள் பறிமுதல்
சென்னையில் இருந்து சிங்கப்பூருக்கு கடத்த முயன்ற 39 கிலோ மயில் தோகைகளை சுங்க இலாகா அதிகாரிகள் பறிமுதல் செய்தனர்.
ஆலந்தூர்,
சென்னை மீனம்பாக்கம் பன்னாட்டு விமான நிலையத்தில் இருந்து சிங்கப்பூருக்கு விமானம் செல்ல இருந்தது. இதில் பயணம் செய்ய வந்த பயணிகளை சுங்க இலாகா அதிகாரிகள் கண்காணித்தனர். அப்போது சென்னை ஏழுகிணறு பகுதியை சேர்ந்த நைனாமுகமது (வயது 32), மன்னார்குடியை சேர்ந்த பாலப்பன் (38) ஆகியோர் சிங்கப்பூருக்கு சுற்றுலா விசாவில் செல்ல வந்திருந்தனர்.
இவர்கள் கொண்டு வந்திருந்த உடைமைகளை சோதனை செய்தனர். அப்போது அவர்கள் வைத்திருந்த உடைமைகளில் 39 கிலோ மயில் தோகைகள் மறைத்து வைக்கப்பட்டு இருந்தது. இதனை அவர்கள் கடத்தி செல்ல முயன்றதை அதிகாரிகள் கண்டு பிடித்தனர்.
வனத்துறையினர் விசாரணைஇதையடுத்து மயில் தோகைகளை பறிமுதல் செய்த சுங்க இலாகா அதிகாரிகள் 2 பேரின் விமான பயணத்தையும் ரத்து செய்து விசாரணை நடத்தி வருகின்றனர். பின்னர் அந்த மயில் தோகைகள் வனத்துறை அதிகாரிகளிடம் ஒப்படைக்கப்பட்டது.
ஒடிசா போன்ற பகுதிகளில் இருந்து மயில் தோகைகளை ரெயில்களில் கடத்தி வந்து சிங்கப்பூருக்கு விமானத்தில் கொண்டு செல்ல இருந்தது விசாரணையில், தெரியவந்தது. தொடர்ந்து அவர்கள் 2 பேரிடமும் வனத்துறையினர் தொடர்ந்து விசாரணை நடத்தி வருகின்றனர்.