ஆலோசனை கூட்டத்திற்கு அதிகாரிகள் வராததால் மீனவர்கள் போராட்டம்
சென்னை துறைமுகத்தில் இருந்து எண்ணூர் கடற்கரை சாலை வழியாக மணலி சி.பி.சி.எல். தொழிற்சாலைக்கு குழாய் மூலம் கச்சா எண்ணெய் கொண்டு செல்லும் பணி தொடங்கப்பட்டது.
திருவொற்றியூர்,
இதற்கு மீனவ கிராம மக்கள் கடும் எதிர்ப்பு தெரிவித்தனர்.
இதுதொடர்பாக மீனவர்களுக்கு விளக்கம் அளிப்பது தொடர்பாக திருவொற்றியூர் தாசில்தார், சி.பி.சி.எல் நிர்வாக அதிகாரிகள் மற்றும் மீனவ கிராம நிர்வாகிகள் ஆலோசனை கூட்டத்துக்கு ஏற்பாடு செய்யப்பட்டு இருந்தது. இந்த கூட்டம் நேற்று மாலை 3 மணியளவில் திருவொற்றியூர் தாசில்தார் அலுவலகத்தில் நடைபெறுவதாக அறிவிக்கப்பட்டிருந்தது.
இந்த கூட்டத்தில் பங்கேற்பதற்காக பகல் 2 மணியில் இருந்து மீனவ கிராமத்தை சேர்ந்த ஆண்களும், பெண்களும் தாசில்தார் அலுவலகம் முன்பு குவிந்தனர். இதனால் அந்த பகுதியில் கூட்டம் அலைமோதியது. மீனவர்கள் திரண்டு வந்த நிலையில் அதிகாரிகள் ஆலோசனை கூட்டத்திற்கு வரவில்லை.
இதைத்தொடர்ந்து மாலை 4.30 மணியளவில் மீனவ கிராம நிர்வாகிகளும் பொதுமக்களும் தாசில்தார் அலுவலகத்தை முற்றுகையிட்டனர்.
இதுபற்றி தகவல் கிடைத்ததும் போலீசார் விரைந்து வந்து மீனவர்களுடன் சமரச பேச்சுவார்த்தை நடத்தினார்கள். அப்போது போலீசார் மீண்டும் ஒருநாள் திருமண மண்டபத்தில் ஆலோசனை கூட்டம் நடைபெறும். எனவே கலைந்து செல்லுங்கள் என்று கூறி சமாதானம் செய்தனர். இதைத்தொடர்ந்து மீனவர்கள் கலைந்து சென்றனர்.