பசு பாதுகாப்பு இயக்கத்தை தடை செய்ய வேண்டும் மனிதநேய மக்கள் கட்சி தலைவர் ஜவாஹிருல்லா கோரிக்கை
பசு பாதுகாப்பு இயக்கத்தை தடைசெய்ய வேண்டும் என்று மனிதநேய மக்கள் கட்சித் தலைவர் ஜவாஹிருல்லா கோரிக்கை விடுத்துள்ளார். தாம்பரத்தில் ஆர்ப்பாட்டம் ராஜஸ்தான் மாநிலத்தில் பால் வியாபாரி ஒருவர் பசு பாதுகாப்பு இயக்கத்தினரால் கொல்லப்பட்டதை கண்டித்து காஞ்சீபுரம் ம
தாம்பரம்,
ராஜஸ்தான் மாநிலத்தில் பால் வியாபாரி ஒருவர் பசு பாதுகாப்பு இயக்கத்தினரால் கொல்லப்பட்டதை கண்டித்து காஞ்சீபுரம் மாவட்ட தமிழ்நாடு முஸ்லிம் முன்னேற்ற கழகம் சார்பில் தாம்பரத்தில் கண்டன ஆர்ப்பாட்டம் நடைபெற்றது. இதில் மனிதநேய மக்கள் கட்சி தலைவர் ஜவாஹிருல்லா கலந்துகொண்டார்.
ஆர்ப்பாட்டத்தில் மனிதநேய மக்கள் கட்சி மாநில பொதுச்செயலாளர் அப்துல்சமது, மாநில அமைப்பு செயலாளர் யாக்கூப், மே 17 இயக்க ஒருங்கிணைப்பாளர் திருமுருகன் காந்தி, விடுதலை சிறுத்தைகள் மாவட்ட செயலாளர் தேவ அருள்பிரகாசம் உள்பட பலர் கலந்துகொண்டனர்.
அப்போது சிலர் பிரதமர் மோடி உருவபொம்மையை திடீரென எரிக்க முயன்றதால் பரபரப்பு ஏற்பட்டது. ஆர்ப்பாட்டம் நடத்திய ஜவாஹிருல்லா உள்பட 500–க்கும் மேற்பட்டோர் கைது செய்யப்பட்டனர்.
தடை செய்ய வேண்டும்முன்னதாக ஜவாஹிருல்லா கூறும்போது, ‘‘பா.ஜனதா செயற்குழு கூட்டத்தில், முஸ்லிம் பெண்களுக்காக பிரதமர் மோடி அனுதாபத்தை தெரிவித்து இருப்பது முதலை கண்ணீர் என்று தான் நாங்கள் கருதுகிறோம். மோடி பிரதமரான பின்னர் பசு பாதுகாவலர்கள் என்ற பெயரில் உத்தரபிரதேசம், ஜார்கண்ட், ராஜஸ்தான் ஆகிய மாநிலங்களில் பால் வியாபாரிகள் கொல்லப்பட்டுள்ளனர். இந்த கொலையாளிகளை கைது செய்வது மட்டுமின்றி, உடனடியாக ஜனாதிபதி இந்த பிரச்சினையில் தலையிட்டு பசு பாதுகாவலர்கள் என்ற இயக்கத்தை தடை செய்வதற்கு நடவடிக்கை எடுக்க வேண்டும்’’ என்றார்.