ஆந்திர மாநிலம் கைவிரிப்பு: சென்னையில் குடிநீர் தட்டுப்பாடு ஏற்படும் அபாயம்


ஆந்திர மாநிலம் கைவிரிப்பு: சென்னையில் குடிநீர் தட்டுப்பாடு ஏற்படும் அபாயம்
x
தினத்தந்தி 18 April 2017 5:30 AM IST (Updated: 18 April 2017 3:53 AM IST)
t-max-icont-min-icon

ஆந்திர மாநிலம் கைவிரிப்பால் சென்னையில் குடிநீர் தட்டுப்பாடு ஏற்படும் அபாயம் ஏற்பட்டுள்ளது.

சென்னை,

22 கல்குவாரியில் இருந்து தண்ணீர் எடுக்க அதிகாரிகள் திட்டமிட்டு உள்ளனர்.

கிருஷ்ணா நதிநீர் திட்டம்

சென்னை குடிநீர் தேவையை பூர்த்தி செய்வதற்காக கிருஷ்ணா நதி நீர் ஒப்பந்தத்தின் அடிப்படையில் ஆந்திர மாநில அரசு கண்டலேறு அணையில் இருந்து ஆண்டுக்கு 12 டி.எம்.சி. (1 டி.எம்.சி. என்பது 100 கோடி கனஅடி) தண்ணீரை தமிழகத்தில் உள்ள பூண்டி ஏரிக்கு திறந்து விட வேண்டும். அதன்படி பூண்டி ஏரிக்கு திறந்து விடப்படும் தண்ணீர் புழல், சோழவரம் மற்றும் செம்பரம்பாக்கம் ஏரிகளுக்கு அனுப்பப்பட்டு குடிநீர் தேவை பூர்த்தி செய்யப்பட்டு வருகிறது.

ஆனால் பருவமழை பொய்த்து போனதால் கண்டலேறு அணையில் இருந்து பூண்டி ஏரிக்கு தண்ணீர் திறப்பு நிறுத்தப்பட்டுவிட்டது. இதனால் சோழவரம் ஏரி வறண்டுவிட்டது. பூண்டி உள்ளிட்ட 3 ஏரிகளிலும் எதிர்பார்த்த அளவு தண்ணீர் இல்லை. இதனால் சென்னை மாநகருக்கு குடிநீர் தட்டுப்பாடு ஏற்பட்டுவிடுமோ? என்ற அச்சம் பொதுமக்கள் மத்தியில் ஏற்பட்டுள்ளது.

இதுகுறித்து பொதுப்பணித்துறை மற்றும் சென்னை குடிநீர் வாரிய அதிகாரிகள் கூறியதாவது:-

ஆந்திர மாநிலம் கைவிரிப்பு

சென்னைக்கு குடிநீர் வழங்கும் பூண்டி, சோழவரம், புழல், செம்பரம்பாக்கம் ஆகிய 4 ஏரிகளின் மொத்த கொள்ளளவு 11 ஆயிரத்து 57 மில்லியன் கன அடியாகும். ஆனால் தற்போதைய சூழ்நிலையில் 1,006 மில்லியன் கன அடி (1 டி.எம்.சி.) தண்ணீர் மட்டுமே இருப்பு உள்ளது. இதன் மூலம் 40 நாட்களுக்கு குடிநீர் தேவையை ஓரளவு பூர்த்தி செய்ய முடியும். கோடைமுழுவதும் குடிநீர் தேவையை பூர்த்தி செய்வதற்காக ஆந்திர மாநில அதிகாரிகளுக்கு 2 டி.எம்.சி. தண்ணீர் திறந்துவிட கோரி விரிவான கடிதம் எழுதப்பட்டுள்ளது.

ஆனால் ஆந்திர மாநில அரசு கைவிரித்துவிட்டது. காரணம் அங்கும் போதிய மழையின்மையால் அணைகளில் போதிய அளவு தண்ணீர் இருப்பு இல்லை. கோடை மழைவந்தால் பார்க்கலாம் என்று கூறி உள்ளனர். கோடை மழையும் பொய்த்து போனால் சென்னையில் குடிநீர் தட்டுப்பாடு ஏற்படுவதை தடுக்க முடியாது.

22 கல்குவாரி தண்ணீர்

மாற்றுவழியாக நெய்வேலி சுரங்கத்தில் இருந்து கூடுதலாக தண்ணீர் கொண்டு வருவதற்கான முயற்சிகளில் இறங்கி உள்ளோம். இதுதவிர சென்னை புறநகர் பகுதியில் 31 கல்குவாரிகள் தேர்வு செய்யப்பட்டு தண்ணீர் எடுக்க முடிவு செய்யப்பட்டது. இந்த கல்குவாரிகளில் உள்ள தண்ணீர் மாதிரியை எடுத்து அண்ணா பல்கலைக்கழகம் மற்றும் கிங் இன்ஸ்டிடியூட் நிறுவனத்தில் சோதனைக்கு அனுப்பப்பட்டது.

அதில் 22 கல்குவாரிகளில் உள்ள தண்ணீரை பயன்படுத்தலாம் என்று சான்று வழங்கப்பட்டு உள்ளது. அதன்படி விரைவில் அவற்றில் இருந்து தண்ணீர் எடுத்து சுத்திகரித்து குடிநீர் தேவையை பூர்த்தி செய்ய திட்டமிட்டு உள்ளோம். இதுதவிர போரூர் ஏரியில் இருந்து தண்ணீர் எடுப்பதுடன், திருவள்ளூர் மாவட்டத்தில் உள்ள விவசாய விளைநிலங்களில் இருந்து கூடுதலாக தண்ணீர் பெறவும் திட்டமிட்டு வருகிறோம்.
இவ்வாறு அதிகாரிகள் கூறினார்கள்.

Next Story