காரைக்காலில் 25–ந் தேதி முழு அடைப்பு தி.மு.க. தலைமையில் நடந்த அனைத்துக் கட்சி கூட்டத்தில் முடிவு


காரைக்காலில் 25–ந் தேதி முழு அடைப்பு தி.மு.க. தலைமையில் நடந்த அனைத்துக் கட்சி கூட்டத்தில் முடிவு
x
தினத்தந்தி 18 April 2017 4:24 AM IST (Updated: 18 April 2017 4:23 AM IST)
t-max-icont-min-icon

தமிழக விவசாயிகளுக்கு ஆதரவாக புதுச்சேரி, காரைக்காலில் வருகிற 15–ந் தேதி முழு அடைப்பு நடத்துவது என

புதுச்சேரி,

 தி.மு.க. தலைமையில் நடந்த அனைத்துக் கட்சி கூட்டத்தில் தீர்மானம் நிறைவேற்றப்பட்டது.

அனைத்து கட்சி கூட்டம்

புதுச்சேரி லப்போர்த் வீதியில் உள்ள தெற்கு மாநில தி.மு.க. அலுவலகத்தில் மாநில அமைப்பாளர் சிவா எம்.எல்.ஏ. தலைமையில் நேற்று மாலை அனைத்துக் கட்சி கூட்டம் நடைபெற்றது.

இதில் காங்கிரஸ் கட்சியின் துணைத்தலைவர்கள் விநாயகமூர்த்தி, தேவதாஸ், முன்னாள் எம்.எல்.ஏ. நீலகங்காரதரன், இந்திய கம்யூனிஸ்டு கட்சி மாநில செயலாளர் விசுவநாதன், நாரா.கலைநாதன், கீதநாதன், ராமமூர்த்தி, மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்டு கட்சியின் ராஜாங்கம், முருகன், விடுதலை சிறுத்தைகள் கட்சியின் தேவபொழிலன், புதிய நீதிகட்சி பொன்னுரங்கம், மனிதநேய மக்கள் கட்சி பஷீர் அகமது, இந்திய யூனியன் முஸ்லிம் லீக் ஹயருல்லா, அகமது ஜவகர், தமிழ்நாடு முஸ்லிம் முன்னேற்றக்கழக அல்லா முகமது, திராவிடர் கழகம் வீரமணி, மனித உரிமை கூட்டமைப்பு சுகுமாறன், புதுச்சேரி மாநில மாணவர் கூட்டமைப்பு சுவாமிநாதன் ஆகியோர் கலந்துகொண்டனர்.

முழு அடைப்பு

கூட்டத்தில் நிறைவேற்றப்பட்ட தீர்மானங்கள் வருமாறு:–

தி.மு.க.செயல் தலைவர் மு.க.ஸ்டாலின் தலைமையில் நடந்த அனைத்து கட்சி கூட்டத்தில் எடுக்கப்பட்ட முடிவினை ஆதரிக்கும் வகையில் விவசாயிகள் பிரச்சினைகளை தீர்க்கவும், மாநில மக்களின் பிரச்சினைகளை முன்வைத்தும் வருகிற 25–ந் தேதி மத்திய அரசை கண்டித்து புதுச்சேரி, காரைக்காலில் முழு அடைப்பு போராட்டம் நடத்துவது.

காவிரி மேலாண்மை வாரியம், காவிரி ஒழுங்காற்று குழு அமைக்க வேண்டும் என மத்திய அரசை வலியுறுத்துவது. அனைத்து தரப்பு விவசாயிகளின் கூட்டுறவு கடன்களை தள்ளுபடி செய்வதாக அறிவித்த புதுச்சேரி அரசின் அறிவிப்பை நடைமுறைப்படுத்த வேண்டும். விவசாயிகள் தேசியமயமாக்கப்பட்ட வங்கிகளில் வாங்கிய கடன்களை மத்திய அரசு தள்ளுபடி செய்ய வேண்டும்.

கரும்புக்கு டன் ஒன்றுக்கு ரூ.4,500 வழங்க வேண்டும். கரும்பு நிலுவை தொகையை உடனடியாக புதுவை அரசு வழங்க வேண்டும்.

பொதுக்கூட்டம்

புதுச்சேரி மற்றும் காரைக்கால் பகுதிகளை தேசிய பேரிடர் பாதித்த மாநிலமாக அறிவிக்க வேண்டும். வறட்சி நிவாரணங்களை உடனடியாக வழங்க வேண்டும். 100 நாட்கள் வேலை திட்டத்தை, 150 நாட்களாக மாற்றி விவசாயம் பாதித்த பகுதிகள் முழுவதும் செயல்படுத்த வேண்டும். விவசாயிகளுக்கு இலவச மின்சாரம் வழங்க புதுச்சேரி அரசை வலியுறுத்துவது.

முழு அடைப்பு போராட்டத்தை விளக்கி தெருமுனை பிரசாரம் செய்வது. விவசாயிகளின் நலன், மாநில வளர்ச்சிக்காக நடைபெறும் முழு அடைப்பு போராட்டத்திற்கு அனைத்து தரப்பினரும் முழு ஆதரவு தர வேண்டும். ஹைட்ரோ கார்பன், மீத்தேன் திட்டங்கள் முழுமையாக மத்திய அரசால் கைவிடப்பட வேண்டும்.

நீட் தேர்வு விவகாரம்

நீட் தேர்வுக்கு விதிவிலக்கு அளிக்கும் புதுச்சேரி அரசின் சட்ட முன்வரைவு மத்திய அரசு உடனடியாக அனுமதி அளிக்க வேண்டும். புதுச்சேரி மாநில வளர்ச்சி திட்டங்களுக்கான நிதியை தடையின்றி மத்திய அரசு வழங்க வேண்டும்.

மேற்கண்டவாறு தீர்மானங்கள் நிறைவேற்றப்பட்டன.

இதில் தி.மு.க. வடக்கு மாநில அமைப்பாளர் எஸ்.பி.சிவக்குமார், முன்னாள் முதல்–அமைச்சர் ஜானகிராமன், முன்னாள் எம்.பி. திருநாவுக்கரசு மற்றும் தி.மு.க. நிர்வாகிகள் பலர் கலந்துகொண்டனர். இந்த கூட்டத்தில் பங்கேற்க அ.தி.மு.க., என்.ஆர்.காங்கிரஸ், பா.ஜ.க., பா.ம.க. ஆகிய கட்சிகளுக்கு தி.மு.க. சார்பில் அழைப்பு விடுக்கப்படவில்லை.


Next Story