தங்கள் பகுதிகளில் வளர்ந்துள்ள சீமைக்கருவேல மரங்களை அகற்ற பொதுமக்கள் சமூக பணியாற்ற வேண்டும் கலெக்டர் பேட்டி


தங்கள் பகுதிகளில் வளர்ந்துள்ள சீமைக்கருவேல மரங்களை அகற்ற பொதுமக்கள் சமூக பணியாற்ற வேண்டும் கலெக்டர் பேட்டி
x
தினத்தந்தி 19 April 2017 4:45 AM IST (Updated: 18 April 2017 6:14 PM IST)
t-max-icont-min-icon

தங்கள் பகுதிகளில் வளர்ந்துள்ள சீமைக்கருவேல மரங்களை அகற்ற பொதுமக்கள் விழிப்புணர்வுடன் சமூக பணியாற்ற வேண்டும்

அடுக்கம்பாறை,

வேலூரை அடுத்த கணியம்பாடி ஒன்றியத்தில் உள்ள ஊராட்சி ஏரியில் ரோட்டரி சங்கங்களின் சார்பில் சீமைக்கருவேல மரங்கள் அகற்றும் பணி நேற்று தொடங்கியது. இதனை கலெக்டர் ராமன் மற்றும் மாவட்ட முதன்மை நீதிபதி ஆனந்தி ஆகியோர் தொடங்கி வைத்தனர்.

அப்போது கலெக்டர் ராமன் நிருபர்களிடம் கூறியதாவது:–

நிதியுதவி

வேலூர் மாவட்டம் முழுவதும் 16 ஆயிரம் ஹெக்டேர் பரப்பளவில் சீமைக்கருவேல மரங்கள் உள்ளது. இதில் தற்போது 1,951 ஹெக்டேர் பரப்பளவில் உள்ள சீமைக்கருவேல மரங்கள் அகற்றப்பட்டுள்ளது. இப்பணிகள் தொண்டு நிறுவனங்கள், வக்கீல் சங்கங்கள் மற்றும் பல்வேறு அமைப்புகள் மூலம் மாவட்டம் முழுவதும் நடைபெற்று வருகிறது. இப்பணிகளை விரைவாக முடித்திட பொதுமக்கள், தனியார் தொண்டு நிறுவனங்கள் மூலம் தன்னார்வ நிதியுதவிகள் கோரப்பட்டுள்ளது.

எனவே, பொதுமக்கள் மற்றும் தொண்டு நிறுவனங்கள் தங்களால் இயன்ற நிதியுதவிகளை அளித்து இத்திட்டத்திற்கு தனது சமூக பங்களிப்பை ஆற்றிட வேண்டும். இந்த நிதியுதவிகளை கொண்டு பொக்லைன் எந்திரங்கள் மூலம் சீமைக்கருவேல மரங்கள் அகற்றப்படும். வேலூர், காட்பாடி ரோட்டரி சங்கங்களின் மூலம் கணியம்பாடி ஒன்றியம் நெல்வாய் ஊராட்சியில் உள்ள 45 ஹெக்டேர் பரப்பளவுள்ள ஊராட்சி ஏரியில் சீமைக்கருவேல மரங்களை வேரோடு அகற்றும் பணிகள் தொடங்கப்பட்டுள்ளது.

விழிப்புணர்வுடன் பணியாற்ற வேண்டும்

சுமார் 80 மணி நேரம் பொக்லைன் எந்திரங்களின் உதவியோடு இப்பணிகள் நடைபெறும். மேலும் தேசிய ஊரக வேலைவாய்ப்பு திட்டத்தின் பணியாளர்களின் மூலமும் இப்பணிகள் மேற்கொள்ளப்பட்டு வருகிறது. மாநகராட்சி, நகராட்சி, ஊராட்சி எல்லைகளுக்குட்பட்ட பகுதிகளில் உள்ள சீமைக்கருவேல மரங்களை அந்தந்த பகுதிகளில் உள்ள நிர்வாகங்கள் மூலம் அகற்றப்பட்டு வருகிறது. எனவே, பொதுமக்கள் தங்கள் பட்டா நிலங்கள், வசிக்கும் பகுதியை சுற்றி வளர்ந்துள்ள சீமைக்கருவேல மரங்களை அகற்றிட விழிப்புணர்வுடன் சமூக பணியாற்றிட வேண்டும்.

இவ்வாறு அவர் கூறினார்.

அப்போது மாவட்ட கூடுதல் நீதிபதி நடராஜன், மாவட்ட வருவாய் அலுவலர் செங்கோட்டையன், திட்ட இயக்குனர் (ஊரக வளர்ச்சி முகமை) பெரியசாமி, வட்டார வளர்ச்சி அலுவலர்கள் மற்றும் ரோட்டரி சங்க நிர்வாகிகள் பலர் கலந்து கொண்டனர்.


Next Story