உழவர் பாதுகாப்பு திட்டத்தில் 60 வயதான விவசாயிகளுக்கு உதவித்தொகை வழங்க வேண்டும் குறைதீர்வு கூட்டத்தில் கோரிக்கை


உழவர் பாதுகாப்பு திட்டத்தில் 60 வயதான விவசாயிகளுக்கு உதவித்தொகை வழங்க வேண்டும் குறைதீர்வு கூட்டத்தில் கோரிக்கை
x
தினத்தந்தி 19 April 2017 4:15 AM IST (Updated: 18 April 2017 6:20 PM IST)
t-max-icont-min-icon

உழவர் பாதுகாப்பு திட்டத்தில் 60 வயதான அனைத்து விவசாயிகளுக்கும் உதவித்தொகை வழங்க வேண்டும் என்று குறைதீர்வு கூட்டத்தில் விவசாயிகள் கோரிக்கை வைத்தனர்.

வேலூர்

வேலூர் கோட்ட அளவிலான விவசாயிகள் குறை தீர்வுநாள் கூட்டம் உதவி கலெக்டர் அஜய்சீனிவாசன் தலைமையில் நேற்று காலை நடந்தது. உதவி கலெக்டரின் நேர்முக உதவியாளர் விஜயன் மற்றும் அனைத்துத்துறை அதிகாரிகள் கலந்துகொண்டனர். விவசாயிகள் கலந்துகொண்டு தங்கள் பகுதி குறைகளை தெரிவித்து பேசினர்.

அப்போது ரே‌ஷன் அட்டை கேட்டு விண்ணப்பித்து 2 ஆண்டுகளுக்கு மேலாகியும் பலருக்கு ரே‌ஷன்அட்டை கிடைக்கவில்லை, அணைக்கட்டு தாலுகா அலுவலகத்தில் இடைத்தரகர்கள் தொல்லை அதிகமாக இருக்கிறது. எனவே அங்கு கண்காணிப்பு கேமரா பொருத்தப்பட வேண்டும் என்று விவசாயிகள் கோரிக்கை வைத்தனர்.

ஆன்லைனில் விண்ணப்பிக்கலாம்

இதற்கு பதிலளித்த உதவி கலெக்டர் அஜ்யசீனிவாசன் வேலூர் மாவட்டத்தில் 9 லட்சம் ரே‌ஷன்அட்டைகள் உள்ளன. அதில் ஒரு லட்சம் பேருக்கு ‘ஸ்மார்ட்’ ரே‌ஷன்அட்டைகள் வந்துள்ளது. இனி ரே‌ஷன் அட்டைகளுக்கு ஆன்லைன் மூலம் விண்ணப்பிக்கலாம், பெயர்சேர்த்தல், நீக்கம் செய்தல், முகவரி திருத்தம் ஆகியவற்றிற்கும் ஆன்லைன் மூலம் விண்ணப்பிக்கலாம். எனவே புதிய ரே‌ஷன்அட்டைகள் கிடைப்பதில் இனி பிரச்சினை இருக்காது.

காட்பாடி தாலுகா அலுவலகத்தில் கண்காணிப்பு கேமரா பொருத்தப்பட்டது. இதனால் அங்கு இடைத்தரகர்கள் வருவதில்லை. அதேபோன்று அணைக்கட்டு தாலுகா அலுவலகத்திலும் கண்காணிப்பு கேமரா பொருத்த சமூகசேவகர்கள் முன்வந்தால் பொருத்தலாம் என்றார்.

ஏரிகளில் மண்குவாரி

அதைத்தொடர்ந்து பேசிய விவசாயிகள் ஏரிகள் தூர்வாரப்படாததால் வண்டல் மண் நிறைந்துள்ளது. இதனால் மழை பெய்தால்கூட தண்ணீரை தேக்கி வைக்க முடியவில்லை. எனவே மண் எடுக்க அனுமதிக்கவேண்டும். ஆற்றில் மணல்குவாரி நடத்துவது போன்று ஏரிகளில் அரசே மண்குவாரி நடத்தவேண்டும் என்றனர்.

இதற்கு பதில் அளித்த உதவி கலெக்டர் ஏற்கனவே குறிப்பிட்ட ஏரிகளில் மண் எடுக்க அனுமதி வழங்கப்பட்டுள்ளது. இங்கு எடுக்கப்படும் மண் 25 சதவீதம் மட்டுமே விவசாயத்திற்கு பயன்படுத்தப்படுகிறது. 75 சதவீதம் வியாபார நோக்கத்தில் செங்கல் சூளைக்குதான் பயன்படுத்தப்படுகிறது. இதனால் அரசுக்கு இழப்பு ஏற்படுகிறது. எனவே இதை தடுக்க நடவடிக்கை எடுக்கப்பட்டு வருகிறது என்றார்.

உதவித்தொகை

குடியாத்தம் நகரில் உள்ள கோழி மற்றும் மீன்கடைகளில் ஏற்படும் கழிவுகள் அனைத்தும் பாக்கம் ஏரியில் கொட்டப்படுவதால் குடிநீர் மாசுப்பட்டு பொதுமக்களுக்கு நோய் ஏற்படும் நிலை உள்ளது. இதை தடுக்க நடவடிக்கை எடுக்கவேண்டும், உழவர் பாதுகாப்பு திட்டத்தில் 60 வயதுக்கு மேற்பட்ட விவசாயிகள் அனைவருக்கும் உதவித்தொகை வழங்கவேண்டும் என்றும் விவசாயிகள் கோரிக்கை வைத்தனர்.


Next Story