வேலூர், காட்பாடியில் மதுக்கடைகளை முற்றுகையிட்டு பா.ஜ.க.வினர் போராட்டம் அரியூரில் பொதுமக்கள் சாலைமறியல்


வேலூர், காட்பாடியில் மதுக்கடைகளை முற்றுகையிட்டு பா.ஜ.க.வினர் போராட்டம் அரியூரில் பொதுமக்கள் சாலைமறியல்
x
தினத்தந்தி 19 April 2017 5:00 AM IST (Updated: 18 April 2017 6:22 PM IST)
t-max-icont-min-icon

வேலூர் மற்றும் காட்பாடியில் டாஸ்மாக் மதுக்கடைகளை பா.ஜ.க.வினர் முற்றுகையிட்டு போராட்டம் நடத்தினர்.

வேலூர்,

வேலூர் மாநகராட்சி பகுதியில் 30–க்கும் மேற்பட்ட டாஸ்மாக் கடைகள் இயங்கி வந்தன. சுப்ரீம் கோர்ட்டு உத்தரவின்பேரில் தேசிய மற்றும் மாநில நெடுஞ்சாலையில் 500 மீட்டர் தூரத்திற்குள் இருந்த மதுக்கடைகள் அனைத்தும் கடந்த 1–ந் தேதி முதல் மூடப்பட்டன. அதன்படி வேலூர் மாநகராட்சி பகுதியில் இருந்த அனைத்து மதுக்கடைகளும் மூடப்பட்டன.

ரங்காபுரம் மூலக்கொல்லையில் செங்காநத்தம் மலைக்கு செல்லும் பாதையில் மட்டும் ஒரே ஒரு மதுக்கடை இயங்கி வருகிறது. இங்கு தினமும் கூட்டம் அலைமோதுவதால் தடுப்புகள் அமைத்து ‘குடி’மகன்கள் வரிசையில் சென்று மதுபாட்டில்களை வாங்கி செல்கின்றனர். மதுக்கடைக்கு பல்வேறு பகுதிகளை சேர்ந்தவர்கள் வருவதால் இந்தப்பகுதியில் குடியிருக்கும் பொதுமக்களுக்கு பல்வேறு பிரச்சினைகள் ஏற்பட்டு வருகிறது.

முற்றுகை போராட்டம்

இதனால் இந்த மதுக்கடையையும் மூடவேண்டும் என்று பொதுமக்கள் கோரிக்கை வைத்து வருகிறார்கள். பொதுமக்களுக்கு இடையூறாக இருப்பதால் இந்த மதுக்கடையை மூடக்கோரி பா.ஜ.க. சார்பில் நேற்று முற்றுகை போராட்டம் அறிவிக்கப்பட்டிருந்தது. எனவே இன்ஸ்பெக்டர் அறிவழகன் தலைமையில் நேற்று காலையே டாஸ்மாக் கடை பகுதியில் போலீஸ் பாதுகாப்பு போடப்பட்டிருந்தது.

இந்த நிலையில் நேற்று பகல் 12 மணிக்கு செங்காநத்தம் ரோட்டில் உள்ள டாஸ்மாக் மதுக்கடை திறக்கப்பட்டது. உடனே பா.ஜ.க. மாவட்ட பொதுசெயலாளர் பாஸ்கரன், மாவட்ட செயலாளர் எஸ்.எல்.பாபு ஆகியோர் தலைமையில், கோட்ட பொறுப்பாளர் பிரகாஷ், மண்டல தலைவர்கள் மனோகர், சங்கர், சரவணன் உள்பட 50–க்கும் மேற்பட்டவர்கள் அங்கு திரண்டனர். அவர்கள் டாஸ்மாக் மதுக்கடையை மூடக்கோரி முற்றுகையிட்டு போராட்டத்தில் ஈடுபட்டனர்.

போராட்டத்திற்கு அனுமதி இல்லாததால் முற்றுகை போராட்டத்தில் ஈடுபட்ட 50 பேரையும் போலீசார் கைது செய்தனர்.

காட்பாடி

காட்பாடியை அடுத்த வஞ்சூர் கூட்ரோட்டில் உள்ள மதுக்கடையை மூடக்கோரியும் பா.ஜ.க. சார்பில் நேற்று முற்றுகை போராட்டம் நடைபெற்றது. வேலூர் கிழக்கு மாவட்ட தலைவர் தசரதன் தலைமையில், துணைத்தலைவர் ஜெகன் முன்னிலையில் 50 பேர் திரண்டு வந்து டாஸ்மாக் கடை முன்பு ஆர்ப்பாட்டம் நடத்தினர். பின்னர் கடையை முற்றுகையிட சென்ற அவர்களை போலீசார் கைது செய்தனர்.

சாலைமறியல்

அதேபோன்று வேலூரை அடுத்த அரியூர் புதுமை நகரில் புதிதாக டாஸ்மாக் கடை திறக்க நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளது. இதற்காக புதிய கட்டிடம் கட்டப்பட்டு மின் இணைப்பும் வழங்கப்பட்டுள்ளது. இங்கு மதுக்கடை திறக்க பொதுமக்கள் எதிர்ப்பு தெரிவித்து வருகிறார்கள்.

இந்த நிலையில் நேற்று டாஸ்மாக் கடை திறப்பதற்கு எதிர்ப்பு தெரிவித்து அரியூர் மெயின்ரோட்டில் அம்பேத்கர் சிலை அருகே சாலைமறியல் போராட்டத்தில் ஈடுபட்டனர்.இதுபற்றிய தகவல் அறிந்ததும் அரியூர் போலீசார் விரைந்து சென்று பேச்சுவார்த்தை நடத்தி சாலைமறியல் செய்தவர்களை சமாதானம் செய்து அங்கிருந்து கலைந்து போகச் செய்தனர்.

இதனால் வேலூர்– அணைக்கட்டு ரோட்டில் சுமார் 1 மணி நேரம் போக்குவரத்து பாதிக்கப்பட்டது.


Next Story