தூத்துக்குடியில் இருந்து கேரளாவுக்கு லாரியில் ரேஷன் அரிசி கடத்திய 2 பேர் கைது 15 டன் அரிசியுடன் லாரி பறிமுதல்
தூத்துக்குடியில் இருந்து கேரளாவுக்கு லாரியில் ரேஷன் அரிசி கடத்திச் சென்ற 2 பேரை போலீசார் கைது செய்தனர். அரிசியுடன் லாரியையும் போலீசார் பறிமுதல் செய்தனர்.
செங்கோட்டை,
தூத்துக்குடியில் இருந்து கேரளாவுக்கு லாரியில் ரேஷன் அரிசி கடத்திச் சென்ற 2 பேரை போலீசார் கைது செய்தனர். அரிசியுடன் லாரியையும் போலீசார் பறிமுதல் செய்தனர்.
போலீசார் சோதனைதமிழக–கேரள எல்லையான நெல்லை மாவட்டம் புளியரை வழியாக தமிழகத்தில் இருந்து தினமும் ஆயிரக்கணக்கான வாகனங்களில் சரக்குகள் கொண்டு செல்லப்படுகிறது. இந்தநிலையில் நேற்று அதிகாலையில் புளியரை போலீஸ் சோதனை சாவடியில் நெல்லை மாவட்ட உணவு கடத்தல் தடுப்பு பிரிவு போலீசார் மற்றும் சோதனை சாவடி போலீசார் இணைந்து பணியில் ஈடுபட்டிருந்தனர்.
அப்போது அந்த வழியாக வந்த ஒரு லாரியை மறித்து சோதனை நடத்தினர். சோதனையில், அந்த லாரியில் மூடை மூடையாக 15 டன் ரேஷன் அரிசி இருப்பது கண்டுபிடிக்கப்பட்டது.
2 பேர் கைதுஅவர்களிடம் நடத்திய விசாரணையில், லாரி டிரைவர் சங்கரன்கோவில் அருகில் உள்ள வடுகப்பட்டி பகுதியை சேர்ந்த முத்துசாமி மகன் குமார் (வயது 37), லாரி கிளீனர் அதே பகுதியை சேர்ந்த வெள்ளப்பாண்டி (20) என்பதும், தூத்துக்குடி மாவட்டத்தில் இருந்து கேரள மாநிலம் பத்மநாபபுரம் பகுதிக்கு ரேஷன் அரிசியை கடத்திச் செல்ல இருப்பதும் தெரியவந்தது. இதையடுத்து அவர்கள் இருவரையும் போலீசார் கைது செய்து நெல்லைக்கு அழைத்துச் சென்றனர். 15 டன் அரிசியுடன் லாரியையும் பறிமுதல் செய்தனர். மேலும் அரிசி கடத்தலுக்கு உடந்தையாக இருக்கும் நபர்களையும் தேடி போலீசார் தூத்துக்குடிக்கு விரைந்தனர்.