டாஸ்மாக் மதுக்கடை முற்றுகை; பா.ஜ.க.வினர் கைது


டாஸ்மாக் மதுக்கடை முற்றுகை; பா.ஜ.க.வினர் கைது
x
தினத்தந்தி 19 April 2017 4:30 AM IST (Updated: 18 April 2017 6:47 PM IST)
t-max-icont-min-icon

ராமநாதபுரம்மாவட்டத்தில் பல்வேறு இடங்களில் மதுக்கடைகளை மூடக்கோரி மதுக்கடையை முற்றுகையிட முயன்ற 220 பேர் கைது செய்யப்பட்டனர்.

ராமநாதபுரம்,

தமிழகத்தில் உள்ள மதுக்கடைகளை மூடக்கோரி பா.ஜ.க. சார்பில் மாநிலம் தழுவிய அளவில் மதுக்கடைகள் முற்றுகை போராட்டம் நடத்தப்படும் என்று அறிவிக்கப்பட்டிருந்தது. அதன்படி பா.ஜ.க. சார்பில் மாவட்டத்தின் பல்வேறு இடங்களில் மதுக்கடைகளை முற்றுகையிடும் போராட்டம் மற்றும் ஆர்ப்பாட்டம் நடைபெற்றது. இதில் மதுக்கடைகளை முற்றுகையிட்ட பா.ஜ.க. நிர்வாகிகளை போலீசார் கைது செய்தனர். ராமநாதபுரம் கிழக்கு கடற்கரை சாலை பகுதியில் காட்டூரணி அருகே அமைந்துள்ள கடையை முற்றுகையிட முயன்ற ஒன்றிய தலைவர் விஜயராகவன், மாவட்ட துணை தலைவர் குமார் ஆகியோர் தலைமையிலான 16 பேரை போலீசார் கைது செய்தனர்.

பரமக்குடியில் மீன்மார்க்கெட் பகுதியில் அமைந்துள்ள டாஸ்மாக் மதுக்கடையை முற்றுகையிட முயன்ற நகர் செயலாளர் சங்கர் தலைமையிலான 34 பேரை போலீசார் கைது செய்தனர். பாம்பனில் ரெயில்வே பீடர் ரோடு பகுதியில் அமைந்துள்ள கடையை மாவட்ட பொருளாளர் சுந்தரமுருகன் தலைமையில் முற்றுகையிட முயன்ற போது 57 பெண்கள் உள்பட 105 பேரை போலீசார் கைது செய்தனர். இதேபோல, மண்டபத்தில் ரெயில்வே பீடர் ரோடு பகுதியில் அமைந்துள்ள டாஸ்மாக் மதுக்கடையை முற்றுகையிட முயன்ற நகர் செயலாளர் கோவிந்தராஜ் தலைமையில் 22 பேரை போலீசார் கைது செய்தனர்.

ஆர்ப்பாட்டம்

சாயல்குடி மாதவன் நகர் பகுதியில் அமைந்துள்ள டாஸ்மாக் மதுக்கடையை மாவட்ட துணை செயலாளர் முருகேசன் தலைமையில் முற்றுகையிட முயன்ற 2 பெண்கள் உள்பட 25 பேரை போலீசார் கைது செய்தனர். தேரிருவேலி பகுதியில் அமைந்துள்ள கடையை முற்றுகையிட முயன்ற தாலுகா செயலாளர் முருகேசன் தலைமையில் 18 பேரை போலீசார் கைது செய்தனர். இவ்வாறு மாவட்டம் முழுவதும் 59 பெண்கள் உள்பட 220 பேர் கைது செய்யப்பட்டனர்.

இதுதவிர, மாவட்டத்தில், சத்திரக்குடி சேமனூர் ரோடு பகுதியில் உள்ள டாஸ்மாக் மதுக்கடை முன்பு ஒன்றிய செயலாளர் ரவிச்சந்திரன் தலைமையிலும், கமுதி அருகே உள்ள கீழராமநதி பகுதியில் அமைந்துள்ள டாஸ்மாக் மதுக்கடை முன்பு விவசாய பிரிவு மாவட்ட துணை செயலாளர் கணபதி தலைமையிலும், திருப்புல்லாணி பகுதியில் ஒன்றிய செயலாளர் காளிதாஸ் தலைமையிலும், தொண்டி பாண்டுகுடி பகுதியில் அமைந்துள்ள கடைமுன்பு திருவாடானை ஒன்றிய தலைவர் கண்ணன் தலைமையிலும் கடையை மூடக்கோரி பா.ஜ.க.வினர் ஆர்ப்பாட்டம் செய்தனர்.

கைது

ராமநாதபுரம் மாவட்டம் திருப்புல்லாணி அருகே உள்ள பெரியபட்டிணம் கரிச்சான்குண்டு பகுதியில் கோவில் அருகில் அமைந்துள்ள மதுக்கடையை அகற்றகோரி இந்திய கம்யூனிஸ்டு கட்சியின் சார்பில் ஒன்றிய செயலாளர் சொக்கலிங்கம் தலைமையில் ஆர்ப்பாட்டம் நடைபெற்றது. இதில் ஏராளமான ஆண்களும், பெண்களும் கலந்து கொண்டனர்.

இதேபோல பாம்பன் ரெயில் நிலையம் பகுதியில் அமைந்துள்ள டாஸ்மாக் கடை முன்பு மாவட்ட பொருளாளர் சுந்தரமுருகன் தலைமையில் தொழிற்பிரிவு மாவட்ட தலைவர் பவர் நாகேந்திரன், மாவட்ட வக்கீல் பிரிவு பொது செயலாளர் ஸ்ரீதர், இந்து முன்னணி மாவட்ட செயலாளர் ராமமூர்த்தி, சரவணன், பி.எம்.எஸ். பாரதிராஜா, பாம்பன் முனீசுவரன், கார்த்திக் உள்பட ஏராளமானோர் கலந்துகொண்டனர். அதனை தொடர்ந்து முற்றுகை போராட்டத்தில் ஈடுபட்ட 70 பெண்கள் உள்பட 130 பேரை போலீஸ் துணை சூப்பிரண்டு முத்துராமலிங்கம் மேற்பார்வையில் இன்ஸ்பெக்டர் பெரியசாமி தலைமையிலான போலீசார் கைது செய்தனர்.


Next Story