ரெயில்வே சுரங்க பாதை பணிக்கு எதிர்ப்பு கூரியூர் கிராம மக்கள் தர்ணா போராட்டம்


ரெயில்வே சுரங்க பாதை பணிக்கு எதிர்ப்பு கூரியூர் கிராம மக்கள் தர்ணா போராட்டம்
x
தினத்தந்தி 19 April 2017 4:45 AM IST (Updated: 18 April 2017 6:41 PM IST)
t-max-icont-min-icon

ராமநாதபுரம் அருகே கூரியூர் கிராமத்தில் ரெயில்வே சுரங்கபாதைக்கு அந்த பகுதி மக்கள் எதிர்ப்பு தெரிவித்து தர்ணா போராட்டத்தில் ஈடுபட்டனர்.

ராமநாதபுரம்,

ராமநாதபுரம் அருகே உள்ளது கூரியூர் கிராமம். இங்கு சுமார் 300–க்கும் மேற்பட்ட வீடுகளில் 1000க்கும் மேற்பட்ட பொதுமக்கள் குடியிருந்து வருகின்றனர். தேசிய நெடுஞ்சாலையில் இருந்து இந்த கிராமத்திற்கு செல்லும் சாலையில் ரெயில்வேகேட் உள்ளது. இந்த பகுதியில் சுரங்க பாதை அமைக்க ரெயில்வே நிர்வாகம் முடிவு செய்துள்ளது. மாவட்டம் முழுவதும் இலந்தைகுளம், சுந்தனேந்தல், தீயனூர், எட்டிவயல், அச்சுந்தன்வயல், லாந்தை, கூரியூர், கருங்குளம் ஆகிய 8 பகுதிகளில் தலா ரூ.2 கோடி செலவில் சுரங்கபாதை அமைக்கும் பணி வேகமாக நடைபெற்று வருகிறது.

இந்தநிலையில் கூரியூர் கிராம பொதுமக்கள் தங்கள் பகுதியில் தாழ்வான இடத்தில் அமைய உள்ள சுரங்க பாதையால் விவசாயத்திற்கான நீர் ஆதாரம் தடைபடுவதோடு, மழைகாலங்களில் சுரங்கபாதையில் தண்ணீர் தேங்கி கிராமம் தீவாக மாறிவிடும். மேலும், பெரும் மழை வெள்ள காலங்களில் கண்மாய்களில் இருந்து கடலை நோக்கி சீறிப்பாய்ந்து வரும் தண்ணீர் சுரங்கபாதை இருப்பதால் ஊருக்குள் புகுந்து பெரும் ஆபத்தினை ஏற்படுத்திவிடும். எனவே, தங்களின் வாழ்வாதாரத்தை பாதிக்கும், உயிருக்கு அச்சத்தை ஏற்படுத்தும் இந்த சுரங்கபாதை அமைக்க கூடாது என்றும், ஆள் உள்ள ரெயில்வே கேட் அமைக்க வேண்டும் என்று கூறி கடந்த பல மாதங்களாக தொடர்ந்து எதிர்ப்பு தெரிவித்து வந்தனர்.

தர்ணா போராட்டம்

ஆனால், கிராம மக்களின் எதிர்ப்பையும் மீறி ரெயில்வே நிர்வாகத்தின் சார்பில் சுரங்கப்பாதை அமைக்கும் பணி முழு வீச்சில் நடைபெற்று வந்தது. இந்த நிலையில் நேற்று இந்த சுரங்கபாதை அமைப்பதற்கான கான்கிரீட் சுரங்கபாதை கர்டர்கள் அமைக்கும் முக்கிய பணியை மேற்கொள்ள ரெயில்வே நிர்வாகம் முயற்சி மேற்கொண்டது. இதனை அறிந்த கிராம மக்கள் தங்களின் எதிர்ப்பை காட்டும் வகையில் ரெயில் தண்டவாளத்திற்கும் தேசிய நெடுஞ்சாலைக்கும் இடையில் அமைந்துள்ள இணைப்பு சாலை பகுதியில் அமர்ந்து திடீர் தர்ணா போராட்டத்தில் ஈடுபட்டனர்.

இதில் பா.ஜ.க. மாநில துணை தலைவர் சுப.நாகராஜன், கிராம தலைவர் உடையார் தலைமையில் ஏராளமானோர் தர்ணா போராட்டத்தில் கலந்து கொண்டனர். இவர்கள் தங்களின் ரேசன்கார்டுகள், பட்டா, வாக்காளர் அடையாள அட்டை போன்றவைகளை கைகளில் ஏந்தியவாறு அமர்ந்திருந்தனர். இதுகுறித்து கிராம மக்கள் கூறியதாவது:– கிராம மக்களுக்கு பாதிப்பு ஏற்படும் என்பதற்காக இந்த சுரங்கபாதை பணிக்கு எதிர்ப்பு தெரிவித்து வருகிறோம். எங்களின் எதிர்ப்பையும் மீறி சுரங்கபாதை அமைத்து வருகின்றனர்.

இதனால், நாங்கள் இனி இந்த கிராமத்தில் வாழ முடியாத நிலை ஏற்பட்டுள்ளதால் ரேசன்கார்டுகளை ஒப்படைத்து ஊரை காலிசெய்து வெளியேற முடிவு செய்துள்ளோம். இனியும் எங்களின் கோரிக்கைக்கு செவி சாய்க்காவிட்டால் குடும்பத்துடன் தற்கொலை செய்துகொள்ளும் நிலைக்கு தள்ளப்படும் சூழ்நிலை உருவாகும். எனவே, உடனடியாக அதிகாரிகள் உரிய நடவடிக்கை எடுத்து சுரங்கபாதை அமைக்கும் முடிவை கைவிட வேண்டும். இவ்வாறு கூறினர். கிராமத்தினரின் இந்த திடீர் தர்ணா போராட்டம் காரணமாக ஏராளமான போலீசார் பாதுகாப்பு பணியில் ஈடுபட்டிருந்தனர்.


Next Story