டெல்லியில் போராடும் விவசாயிகளை மத்திய அரசு கண்டுகொள்ளவில்லை ஜி.கே.வாசன் குற்றச்சாட்டு
டெல்லியில் போராடும் விவசாயிகளை மத்திய அரசு கண்டுகொள்ளவில்லை என்று தங்கச்சிமடத்தில் நடைபெற்ற உலக மகளிர் தினவிழா மாநாட்டில் ஜி.கே.வாசன் தெரிவித்தார்.
ராமேசுவரம்,
ராமநாதபுரம் மாவட்டம் தங்கச்சிமடத்தில் த.மா.கா. சார்பில் உலக மகளிர் தினவிழா மாநாடு நடைபெற்றது. நிகழ்ச்சிக்கு கிழக்கு மாவட்ட தலைவர் ரவிச்சந்திர ராமவன்னி தலைமை தாங்கினார். முன்னாள் எம்.பி. ராம்பாபு, முன்னாள் சட்டமன்ற உறுப்பினர்கள் அசன்அலி, ராம்பிரபு, ராஜேந்திரன் ஆகியோர் முன்னிலை வகித்தனர். மகளிர் அறக்கட்டளை தலைவி இருதயமேரி வரவேற்றார்.
மாநாட்டில் தமிழ் மாநில காங்கிரஸ் தலைவர் ஜி.கே.வாசன் கலந்துகொண்டு சிறந்த சமூக பணிக்கான மகளிர் விருதுகளை நஜிமா மரைக்காயர், இருதயமேரி, சக்தி ஜோதி ஆகியோருக்கு வழங்கினார். பின்னர் இலங்கை கடற்படையினரின் துப்பாக்கி சூட்டில் பலியான மீனவர் பிரிட்ஜோவின் குடும்பத்துக்கு த.மா.கா. சார்பில் ரூ.50 ஆயிரம் நிவாரண உதவியாக வழங்கினார்.
அதைத்தொடர்ந்து ஜி.கே.வாசன் பேசியதாவது:– ராமநாதபுரம் தங்கச்சிமடத்தில் மகளிர் தினவிழாவை கொண்டாடுவது மனநிறைவாக உள்ளது. காவல்துறை மற்றும் அரசு அலுவலகங்களில் பெண்கள் அளிக்கும் மனுக்களுக்கு உரிய மரியாதை அளிப்பதில்லை என்பது வருத்தமளிக்கிறது. பெண்களின் கோரிக்கைகளை அரசுத்துறை அதிகாரிகள் முழு கவனத்துடன் கையாள வேண்டும்.
பெண்களுக்கு எதிரான பாலியல் கொடுமை அதிக அளவில் நடக்கிறது. தமிழகத்தில் பூரண மதுவிலக்கு கொண்டு வரவேண்டும். வருவாயை மட்டும் கருத்தில் கொள்ளாமல் மக்களின் நலன் கருதி குறுகிய காலத்தில் பூரண மதுவிலக்கை கொண்டு வருவதற்கு உத்தரவாதம் அளிக்க வேண்டும். இதுதொடர்பாக 1 கோடி கையெழுத்து இயக்கம் நடத்தி கவர்னரிடம் கொடுத்துள்ளோம். மதுவிலக்குக்கு த.மா.கா. முழு ஆதரவு அளிக்கும்.
மீனவர், விவசாயிகள் பிரச்சினைதமிழத்தில் மீனவர், விவசாயிகளின் பிரச்சினைகள் அதிக அளவில் உள்ளது. டெல்லியில் தொடர்ந்து போராடி வரும் விவசாயிகளை மத்திய அரசு கண்டுகொள்ளாமல் உள்ளது. விவசாயிகள் தங்களது குடும்பத்துக்காக போராடவில்லை. ஒட்டுமொத்த விவசாயிகளுக்காக போராடி வருகின்றனர். இங்கு மீனவர்களுக்கு பாதுகாப்பு இல்லை. மீனவர்கள் அச்சத்தில் உள்ளனர். அவர்களது வாழ்வாதாரம் கேள்விக்குறியாக உள்ளது. இலங்கை அரசு தமிழக மீனவர்கள் மீது தாக்குதல் நடத்தியும் மத்திய அரசு அதனை தட்டிக்கேட்க முன்வரவில்லை. அங்கு சிறைபிடிக்கப்பட்டுள்ள தமிழக மீனவர்களின் 142 படகுகள் விடுவிக்கப்படவில்லை. இதுதொடர்பாக மாநில அரசு மத்திய அரசுக்கு குரல் கொடுத்து பிரச்சினைக்கு முடிவு காண வேண்டும்.
மீனவர் பிரச்சினைக்கு தீர்வு காண கச்சத்தீவை மீட்க வேண்டும். 1974ம் ஆண்டு கச்சத்தீவு ஒப்பந்தத்தில் கண்டுள்ள சரத்துக்களின்படி தமிழக மீனவர்கள் கச்சத்தீவில் ஓய்வு எடுக்கவும், வலைகளை உலர்த்திக்கொள்ளவும் மத்திய அரசு அனுமதி பெற்றுத்தர வேண்டும். மீனவர் பிரிட்ஜோவின் சாவில் உண்மை நிலை கண்டறிய வேண்டும். தமிழகத்தில் தண்ணீர் பற்றாக்குறை அதிகமாக உள்ளது. போர்க்கால அடிப்படையில் தண்ணீர் பிரச்சினைக்கு நடவடிக்கை எடுக்கவேண்டும். இவ்வாறு அவர் கூறினார்.
கூட்டத்தில் ராமநாதபுரம் மேற்கு மாவட்ட தலைவர் சோ.பா.ரெங்கநாதன், மாவட்ட பொருளாளர் நாகராஜன், வக்கீல்கள் சோமசுந்தரம், முனியசாமி, மாவட்ட இளைஞரணி தலைவர் முகேஷ், ராமேசுவரம் நகர் தலைவர் ராமகிருஷ்ணன், தங்கச்சிமடம் நகர் தலைவர் ராஜா சாகிப், இளைஞரணி சுரேஷ் உள்பட பலர் கலந்து கொண்டனர்.