அரசு ஊழியர்களுக்கு ஊக்கப்பரிசு கலெக்டர் வழங்கினார்


அரசு ஊழியர்களுக்கு ஊக்கப்பரிசு கலெக்டர் வழங்கினார்
x
தினத்தந்தி 19 April 2017 4:00 AM IST (Updated: 18 April 2017 6:48 PM IST)
t-max-icont-min-icon

விருதுநகர் கலெக்டர் அலுவலக வளர்ச்சி மன்றக் கூட்டரங்கில் மக்கள் குறைதீர்க்கும் நாள் கூட்டம் கலெக்டர் சிவஞானம் தலைமையில் நடைபெற்றது.

விருதுநகர்,

விருதுநகர் கலெக்டர் அலுவலக வளர்ச்சி மன்றக் கூட்டரங்கில் மக்கள் குறைதீர்க்கும் நாள் கூட்டம் கலெக்டர் சிவஞானம் தலைமையில் நடைபெற்றது. கூட்டத்தில், பல்வேறு கோரிக்கைகள் தொடர்பாக மனுக்கள் பெறப்பட்டன. முன்னதாக தமிழ் வளர்ச்சித்துறை சார்பில் தமிழ்த் திட்ட செயல்பாட்டில் ஆர்வமும், ஊக்கமும் காட்டும் அரசு அலுவலகங்களை ஊக்குவிக்கும் வகையில் பரிசு வழங்கப்பட்டது. 2015–ம் ஆண்டிற்கான சிறந்த மாவட்ட நிலை அலுவலகமாக மாவட்ட வேலை வாய்ப்பு அலுவலகம் தேர்வு செய்யப்பட்டு அதற்கான கேடயமும், அலுவலக செயல்பாடுகளில் தமிழில் சிறந்த வரைவுகள், குறிப்புகள் எழுதும் அரசு ஊழியர்களை பாராட்டும் வகையில் மாவட்ட நிலை அலுவலகம், சார்நிலை அலுவலகம், உள்ளாட்சி அலுவலகம், தன்னாட்சி நிறுவனங்கள் என பிரிக்கப்பட்டு ஒவ்வொரு துறையிலும் முதல் மூன்று இடங்களை பிடித்த 10 பேருக்கு முதல் பரிசாக ரூ.3,000–ம், இரண்டாம் பரிசாக ரூ.2,000–ம், மூன்றாம் பரிசாக ரூ.1,000–ம் வழங்கப்பட்டது. பள்ளி, கல்லூரிகளில் நடைபெற்ற பேச்சு, கட்டுரை, கவிதைப்போட்டிகளில் சிறந்து விளங்கிய மாணவ மாணவிகளுக்கு பாராட்டுச் சான்றிதழ்களையும் கலெக்டர் வழங்கினார். மேலும், மாநில அளவில் நடைபெற்ற கட்டுரைப் போட்டியில் பங்குபெற்று மூன்றாமிடம் பிடித்த விருதுநகர் வன்னியப்பெருமாள் கல்லூரியைச் சேர்ந்த அகிலாவிற்கு பாராட்டுச் சான்றிதழை வழங்கி வாழ்த்து தெரிவித்தார். அதனைத் தொடர்ந்து முதல்–அமைச்சர் பொது நிவாரண நிதியிலிருந்து அனுசுயா என்பவருக்கு ரூ.50,000–க்கான காசோலையையும், பாக்கியம் என்பவருக்கு ரூ.15,000–க்கான காசோலையையும் கலெக்டர் வழங்கினார்.


Next Story